Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமையல்...சண்டை...சந்தோஷம் - இது 'பேச்சுலர் பெண்கள்' வாழ்க்கை!

 
’எங்கிருந்தோ வந்தோம்...நீ ஒரு குடும்பம், நான் ஒரு குடும்பம். இன்று நீயும், நானுமே ஒரு குடும்பம்...’ - இது யாருக்கு பொருந்துகின்றதோ இல்லையோ, சீர்மிகு சென்னை போன்ற மெட்ரோபாலிட்டன் சிட்டிகளுக்கு வேலையின் பொருட்டு, சொந்த ஊரினை விட்டு வருகின்ற பெண்களுக்குக் கண்டிப்பாக பொருந்தும்.
 
வேலைக்காக குடும்பத்தினரை விட்டு, வெளியூர்களுக்கு பறந்துவரும் பெண்கள் ‘ஹோம் சிக்’ வராத வகையில் தேர்ந்தெடுப்பது ‘கம்யூனல் லிவிங்’ என்னும் குழுவாக சேர்ந்து வாழும் முறையைத்தான். ரசிக்க, அனுபவிக்க, சுவைக்கவென்று இந்த 'கம்யூனல் லிவிங்'கில் கொட்டிக் கிடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் ஏராளம். 
 
முதலில் ‘டைம் மேனேஜ்மென்ட்’ என்கின்ற ஒன்று இதில் கிடையவே கிடையாது. சொந்த வீட்டில் காலை 7 மணிக்கே ’சன் வந்தப்புறமும் தூங்குறியா சோம்பேறி...?’ என்று எழுப்பி விடும் அம்மா, அப்பாவின் ஆனந்தத் தொல்லை 'கம்யூனல் லிவிங்' கில் இல்லை. அதுவுமில்லாமல் இரவு, பகல் பாராமல் ஷிப்ட் பேசிஸ் வேலைக்குச் சென்று வருகின்ற பெண்களுக்கு, ஹாஸ்டலை விட இந்த 'கம்யூனல் லிவிங்' வீடுகள்தான் சரியாக இருக்கின்றன.
 
அதென்ன 'கம்யூனல் லிவிங்’ என்று கேட்கின்றீர்களா...? பெரிதாக ஒன்றும் இல்லை. அந்தக் காலக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையும், ஒரே காம்பவுண்டுக்குள் இருந்த வரிசை வீடுகளுக்கும்தான் 'கம்யூனல் லிவிங்' என்று பெயர். என்ன, இப்போது குடும்ப உறுப்பினர்களுக்கு பதில் அந்தக் கூட்டணியில் நண்பர்கள் இடம் பிடித்து விடுகின்றார்கள், அவ்வளவுதான்.
 
ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள், இல்லை கல்லூரி தோழிகள் இணைந்து ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். வீட்டின் அளவிற்கு ஏற்ப இது 4 பேரிலிருந்து 7 பேர் வரை இருக்கலாம். ஹாஸ்டல் போல இங்கு உணவுக்கு வரிசை கட்டி நிற்க வேண்டாம். அவரவர்களே சமைத்துக் கொள்ளலாம். கேஸ் கனெக்‌ஷனில் இருந்து காய்கறி, மெட்ரோ வாட்டர் வரை எல்லாவற்றையும், குடும்ப அங்கத்தினர் போல வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
 
 
 
அதுவும் ‘ஃபர்னிஷ்டு’ எனப்படும் வாழ்வாதார பொருட்களான கேஸ், டிவி, பிரிட்ஜ், ஏசி போன்றவை நிறைந்த வகையில் வாடகைக்கு விடப்படும் வீடுகள்தான் இவர்களின் முதன்மை சாய்ஸ். இந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியினை நிரம்பவே அனுபவிக்கின்றார்கள் பெண்கள். காலை ஒன்பது  மணிக்கு இரண்டு பேர் வேலைக்கு கிளம்போதுதான், மூன்று பேர் இரவுப் பணி முடித்து, வீட்டுக்கு திரும்பி வருவார்கள். அதனால் வீட்டில் எப்போதும் யாரேனும் ஒருவர் இருந்து கொண்டே இருப்பதால் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு பற்றிய பயம் கிடையாது.
 
விடுமுறை நாட்களில் ஒன்றாக சமைப்பது, நைட் ஷோ சினிமாவுக்கு கூட தைரியமாக போவது, வெளியில் சென்று ஒன்றாக உணவருந்துவது, காதல், வாழ்க்கை, அலுவலக டென்ஷன் எல்லாவற்றையும் ஒன்றாக அமர்ந்து பகிர்ந்துகொள்வது, பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் கண்டறிவது என்று பல்வேறு வகையிலும் இந்த வாழ்க்கை முறை பெண்களுக்கு கற்றுக்கொடுக்கிறது.
 
பிறந்தநாள் கொண்டாட்டங்கள், இந்த வீடுகளில் அடிக்கடி நடக்கும் திருவிழா. வெளி மாநிலத்திலிருந்து வந்து இங்கு தங்கும் பெண்கள், தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கூட இந்த ஷேரிங் வீடுகளில்தான் கொண்டாடுகிறார்கள். சின்னச் சின்ன சண்டைகள், இனிமையான கொண்டாட்டங்கள், குறும்புகள், சமையல், வாழ்க்கை என இங்கு புரிந்துகொள்ளவும், குதூகலிக்கவும் கொட்டிக்கிடக்கும் விஷயங்கள் ஏராளம்.
 
கல்யாணம், குடும்பம் என்று பெற்றவர்கள் தாண்டி வாழ்க்கையின் மற்றொரு தளத்துக்குச் செல்லும் பெண்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் தாய் வீடு தாண்டி, இந்த ‘ஷேரிங் வீடுகள்’ மற்றொரு தாய்வீடே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close