Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களே... ஸ்கூட்டர் வாங்கப் போகும் முன்னர் இதெல்லாம் கவனிங்க!பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஸ்கூட்டர் ஓட்டுவதும் ஒன்றாக  உள்ளதால், எப்படியாவது அப்பாவை/வீட்டுக்காரரை கரெக்ட் பண்ணி, எப்படியும் ஸ்கூட்டர் வாங்க சம்மதிக்க வெச்சுடுவாங்க. அப்புறம்  டி.வி விளம்பரம் பார்த்து ஷோரூமுக்கும் கூட்டிட்டுப் போயிடுவாங்க...!


அங்கே போன பின்னர், ‘என்னது... விளம்பரத்துல சொன்னதைவிட விலை அதிகமா இருக்கே?’... ‘இவ்வளவு மைலேஜ் இதுல கிடைக்குமா?’ என்று சலித்தபடியோ, வியந்தபடியோ, ஆசைப்பட்ட ஸ்கூட்டரை  விட்டுவிட்டு, கிடைத்த ஸ்கூட்டரை புக் செய்துவிட்டு வீடு திரும்புவதுதான் மிடில்கிளாஸ் பெண்களுக்கு நடக்கிறது.

பெண்கள் ஸ்கூட்டர் புக் செய்யப் போகும்போது, என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்... ஷோரூம் டீலர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாமா...?

உறுதியாய் இருங்கள்!

பல கண்ணம்மாக்கள் கத்தரிக்காய் வாங்குறதிலேயே கன்னாபின்னா டயலமாவில் சிக்கித் தவிப்பார்கள். ஸ்கூட்டர் வாங்குறதுனா சும்மாவா? முதலில் ஸ்கூட்டரைத் தேர்வு செய்வதற்கு முன் பல முறை யோசியுங்கள். தேர்ந்தெடுத்த பின் ஒரு தடவைகூட யோசிக்காதீர்கள். 'இந்த ஸ்கூட்டர்தான் வாங்க வேண்டும்' என்று ஷோரூமுக்கு நீங்கள் சென்றால், அங்கே நடப்பது வேறொன்றாக இருக்கும். ‘மேடம், இந்த ஸ்கூட்டர் பார்த்தீங்கன்னா மெட்டல் பாடி... ஆனா இதுல ஃபைபர் பாடி! மைலேஜ் அதிகமா கிடைக்கும். ஆக்ஸசரீஸ்லாம் ஃப்ரீயா பண்ணித் தர்றோம்’ என்று விற்பனையாளர்கள் உங்கள் மனதை மாற்றுவார்கள். காரணம், அவர்கள் சொல்லும் ஸ்கூட்டர்களின் விற்பனை டல் அடிப்பதாக இருக்கலாம்; கமிஷன் அடிப்படையில் அவர்களுக்குக் கவனிப்பும் நிகழும். எனவே, உஷார்! ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’ என்று உறுதியாய் இருங்கள்.

ஷோரூமில் சொல்லப்படும் மைலேஜ் உண்மையா?

நீங்கள் நினைப்பதுபோல், ஸ்கூட்டர்களில் பெட்ரோலைத் தளும்பத் தளும்ப நிரப்பி மைலேஜ் செக் செய்யமாட்டார்கள். ட்ரெட்மில் போன்றதொரு அமைப்பில் பைக்குகளை நிறுத்தி, பின் சக்கரத்தை மட்டும் எக்கானமி மோடில் சுழல வைத்து, கொஞ்சூண்டு மில்லி லிட்டர் பெட்ரோல் ஊற்றித்தான் மைலேஜ் செக் செய்யப்படும். இதற்கு 'டைனோ டெஸ்ட்டிங்' என்று பெயர். இதில் யாரும் பிரேக் பிடிக்கமாட்டார்கள், சிக்னல் இருக்காது, மாடு குறுக்கே வராது. எனவே, டெஸ்ட்டிங்கின்போது அ.தி.மு.க. சீட்கள் மாதிரி கணிசமாக மைலேஜ் கிடைக்கும். ஆனால், ஆன்-ரோடுக்கு வந்துவிட்டால் தி.மு.க.வுக்குக் கிடைச்ச சீட் மாதிரி குறைவான மைலேஜ்தான் கிடைக்கும்!  கம்பெனியில சொல்றதை வெச்சு ஏமாந்துப்புடாதீங்க மக்கா...! ஏற்கெனவே அந்த ஸ்கூட்டர் பயன்படுத்தும் சிலரிடம் ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள், பிரேக்ஸ் நல்லாருக்கா... மெயின்டெனன்ஸ் எப்படி... மைலேஜ் எவ்வளவு வருது..? என்பது போன்ற ரெவ்யூக்கள் எடுத்துக் கொள்வதுதான் நல்லது.

லோனில் வாங்கலாமா... மொத்தத் தொகையா?

ஒரு ஸ்கூட்டர் 65,000 ரூபாய் என்றால், லோன் மூலம் நீங்கள் புக் செய்தீர்கள் என்றால், தவணைக் காலம், வட்டி விகிதத்தைப்  பொறுத்து 10,000 முதல் 20,000 வரை நீங்கள் தொகை அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். இது ஒவ்வொரு லோன் கம்பெனிக்கும் வேறுபடும். முன்பு லோனில் வாங்கும்போது ஆர்.சி புக், வங்கியில்தான் தேங்கி இருக்கும்.  தவணைக் காலம் முடிந்தபிறகுதான் உங்கள் ஆர்.சி கைக்கு வரும். அப்போது 'பாகுபலி' மாதிரி ஸ்ட்ராங்காக இருந்த உங்கள் ஸ்கூட்டரும், பாதி தேய்ந்து பல்லி மாதிரி ஆகிவிட்டிருக்கும். இப்போது அந்த நடைமுறை ஒரு சில நிறுவனங்களில் கைவிடப்பட்டாலும், ரெடி கேஷில் வாங்குவது சிறந்தது. அப்படியும் இல்லை என்றால், யாராவது நண்பர்களிடம் கடனைப் பிரித்து வாங்கிவிட்டு, மாதா மாதம் அவர்களுக்கு அதை திருப்பி செலுத்துவதும் பெஸ்ட் சாய்ஸ். ‘அப்படி யாரும் எங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் கிடையாதுங்க’ என்பவர்கள், குறைந்த மாத காலத் தவணையில் லோன் மூலம் வாங்கலாம். அப்படியும் சிக்கல் என்றால், ஸ்கூட்டர் வாங்க அரசாங்கம் தர்ற 50% மானியத்தை யூஸ் பண்ணிக்கலாமே லேடீஸ்!

எவையெல்லாம் ஆக்சஸரீஸ்?
 

‘55,000 ஆன்ரோடு விலைக்கு’ என்றுதான் விளம்பரம் செய்வார்கள். ஆனால், ஷோரூமுக்குப் போனால், லேடீஸ் கார்டு, ஃபுட் ரெஸ்ட், ஆக்சஸரீஸ், கொடிநாள், அஃபிவிட் என்று எக்ஸ்ட்ராவாக குறைந்தது 4,000 ரூபாய்க்காவது பில் பல் இளிக்கும். உங்கள் பட்ஜெட்,  துண்டு போட்டு உங்களைத் தாண்டிவிடும். எனவே, எப்போதுமே ஆன்ரோடு விலையில் இருந்து 3,000 ரூபாய் அதிகமாகவே எடுத்துக்கொண்டு போவது மனச்சுமையைக் குறைக்கும். ‘என்னங்க, சைடு ஸ்டாண்டெல்லாம் ஆக்சஸரீஸ்லயா வரும்?’ என்று ஷோரூம் விற்பனையாளர்களிடம் சண்டை போடும் பெண்களும் உண்டு. எனவே, என்னென்ன ஆக்சஸரீஸ், எக்ஸ்ட்ரா விலையில் வரும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

(விலை: உத்தேசமாக)
 

1. சைடு ஸ்டாண்ட்: 800
2. ஃப்ளோர் மேட்: 300
3. ஹேண்ட் கிரிப்: 100
4. இண்டிகேட்டர் பஸ்ஸர் பீப்: 90
5. லேடீஸ் ஹூக்: 150
6. ஸ்டோரேஜ் பாக்ஸ்: 1,000 (சில ஸ்கூட்டர்களில் இது டிஃபால்ட் ஆகவே வந்துவிடும். ஆக்டிவா போன்ற ஸ்கூட்டர்களில் இதற்குத் தனி சார்ஜ்)
7. பம்பர் : 2,100
8. டெஃப்லான் கோட்டிங்: 400
9.AMC: 800


இதில் டெஃப்லான் கோட்டிங், AMC ஏரியாவில் கண்ணை மூடிக் கொண்டு ‘நோ’ சொல்லிவிடுங்கள். டெஃப்லான் கோட்டிங் என்பது வாகனப் பூச்சு சம்பந்தப்பட்ட விஷயம். இதை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பண்ணினாலே போதும். அதுவும் ஃபைபர் பாடி கொண்ட ஸ்கூட்டர்களுக்கு இது அவசியமில்லை. ஏஎம்சி என்பது 'அனுவல் மெயின்டனன்ஸ் கான்ட்ராக்ட்'. இதில் இரண்டு சர்வீஸ்கள் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும். அவ்வளவே!

ரிஜிஸ்ட்ரேஷன், நீங்களே செய்வது நல்லது!
 

 

வெயிட்டிங் பீரியடைத் தாண்டி, ஸ்கூட்டர் நம் கைக்கு வருவதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம். காரணம், ரெஜிஸ்ட்ரேஷன். ஆனால், உண்மையில் ரெஜிஸ்ட்ரேஷன் ஒரு மணி நேரத்தில் முடியக்கூடிய விஷயம். ‘ஆர்டிஓ இன்ஸ்பெக்டர் லீவு மேடம்... 2 நாள் கழிச்சு வாங்க!’ என்பார்கள். மேலும், அவர்கள் நம் ஸ்கூட்டரைப் பயன்படுத்துவதைப் பார்த்தால், கண்ல தண்ணி வெச்சிடும்! நீங்களே ரெஜிஸ்ட்ரேஷன் செய்யும்போது, லேசாக பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். ஸ்கூட்டர் டெலிவரி எடுக்கும்போது, பிரேக்ஸ் லூஸாக இருக்கிறதா... ஹெட்லைட் எரிகிறதா... ஸ்க்ராட்சஸ் இருக்கின்றனவா? இன்ஷூரன்ஸ் நகல், ஆர்.சி, இன்வாய்ஸ் பில், சர்வீஸ் மேனுவல் என எல்லாவற்றையும் மறக்காமல் செக் செய்யுங்கள்!

உங்கள் ஸ்கூட்டர்... உங்கள் உரிமை!

- தமிழ்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close