Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தற்கொலை எண்ணம் அதிகம் தலைதூக்குவது யாருக்குத் தெரியுமா.?!

 

உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களில் பலர் அதிக மன அழுத்தத்துடனும், தற்கொலை பற்றிய எண்ணத்துடனும் இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? எட்டுப்பேரில் ஒரு பெண் தற்கொலைப் பற்றி யோசிக்கிறவராக இருக்கிறார் என்கிறது, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.

தன்மேல் தவறில்லை என்றபோதும் தற்கொலை செய்துகொண்ட வினுப்ரியா, காதல் தோல்வியால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பிரியதர்ஷினி இருவரின் மரணமும் நாம் கண்ட சமீபத்திய உதாரணங்கள்.
 
''ஆண்களைவிட பெண்களுக்கு தற்கொலை செய்துகொள்வது பற்றிய எண்ணம் நான்கு மடங்குகள் அதிகமாக இருக்கிறது..." என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் ராஜமீனாட்சி, தனிப்பட்ட காரணங்களைத் தவிர்த்து, அந்தந்த வயதில் பெண்களுக்கு மன உளைச்சல் தரக்கூடிய சூழல் காரணங்கள் பற்றிச் சொன்னார்.

''15 17 வயதுக்குட்பட்டப் பெண்கள்:

இந்த வயதில் இருக்கும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனதையும் பாதிக்கும். குறிப்பாக, மாதாந்திர ரத்தப்போக்கால் ஏற்படும் சோர்வு, வயிற்று வலி  மற்றும் உடல்வலி போன்றவை, அவர்களுக்குக் கழிவிரக்கத்தைக் கோர வைக்கும். 'இது எல்லாருக்கும் நடக்குறதுதான்' என்று ஒற்றை வரியில் அதற்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாத, ஏற்றுக்கொள்ளாத பெண்கள், மன உளைச்சலின் பிடிக்குள்ளேயே இருக்கிறார்கள். இந்தச் சூழலில், பரிட்சையில் தோல்வி, காதல் தோல்வி போன்றவற்றைச் சந்திக்கும்போது, அவர்களின் துயரம் அதிகமாக, இந்த வாழ்வைத் துறக்கும் முடிவை பரிசீலனையின்றி எடுத்துவிடுகிறார்கள்.

18 - 23 வயதுக்குட்பட்டப் பெண்கள்:

வேலை காரணமாக குடும்பத்தைவிட்டு விலகிச் செல்வதால் ஏற்படும் ஹோம்சிக் பிரச்னை இது. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வேலைக்கு வரும் பெண்கள் கார்ப்பரேட் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தன்னம்பிக்கை இழப்பது, திருமணத்துக்குப் பின் கருச்சிதைவு ஏற்படுவது (இந்த வயதுப் பெண்களுக்குத் திருமணமாகும்போது அவர்கள் அதிகமாக கருச்சிதைவுக்கு உட்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் கருத்தரித்தல் தள்ளிப்போவதால் ஏற்படும் மன அழுத்தம்... இவையெல்லாம் அவர்களை தற்கொலை பற்றி அதிகம் யோசிக்கவைப்பதாக இருக்கின்றன.

24 50 வயதுக்குட்பட்டப் பெண்கள்:

குழந்தை பிறந்த முதல் இரண்டு மாதங்கள், உடலின் ஹார்மோன் மாற்றங்களால் தாய்மார்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். அத்துடன், இரவு, பகலாக குழந்தையைப் பார்க்க வேண்டிய பொறுப்பு, அதில் கணவரின் உதவியின்மை, ஒத்துழைப்பின்மை, பாலினம், நிறம் போன்றவற்றை முன்வைத்து குழந்தையைப் பற்றி சுற்றம் பேசும் பேச்சு இதெல்லாம் அவர்களை வாழ்க்கையையே வெறுக்கும் நிலைக்குச் கொண்டுசென்று நிறுத்தும். இந்தச் சூழலில், மேற்கொண்டு ஏதாவது ஒரு தனிப்பட்ட பிரச்னையையும் அவர்கள் எதிர்கொள்ளும்போது, அதை எதிர்கொள்ளும் மனபலம் அற்றவர்களாக தற்கொலை பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஏற்படும், மாதவிடாய் சுழற்சி நிற்கும் நிலையான மெனோபாஸ் நேரத்தில், பெண்களுக்கு இயல்பைவிட நான்கு மடங்கு அதிகமான ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அது அவர்களைக் கொல்லாமல் கொல்லும் என்று சொல்லலாம். தாங்கமுடியாத மிக அதிக ரத்தப்போக்குடன் பதற்றம், பயம், அழுகை என உணர்ச்சிகளின் கொதிப்பில் இருப்பார்கள். இந்நிலையில், அவர்களின் போராட்டம் புரியாமல் அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும்போது, அவர்கள் விபரீத முடிவெடுப்பது பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள்"

 

சிக்கல்களையே சொல்லிக்கொண்டிருந்தால் இதற்கு தீர்வு என்னவென்ற கேள்வியும் எழுகிறது அல்லவா? அதையும் பார்ப்போம்.

ஆண்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணம், பெரும்பாலும் ஒருமுறையோடு விலகிவிடுகிறது. ஆனால் பெண்கள் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் யோசிப்பவர்களாக இருக்கிறார்கள். தனிமை, வெறுமை, வெறுப்பு, கழிவிரக்கம் போன்ற சூழல்களால் ஏற்படும்  மன அழுத்தைத்தைக் குறைக்க பெண்கள் இந்த வழிகளைப் பின்பற்றலாம்.

* சூரிய ஒளியில் வாக்கிங்!

சூரிய ஒளி சருமத்தில்படும்போது கிடைக்கும் புத்துணர்வு மனதை லேசாக்கும் என்பதால், இளங்காலை நேரத்தில் வாக்கிங் செல்லுங்கள்.

* சின்னதாக டான்ஸ்!
அறையில் கதவைத் தாழிட்டுக்கொண்டு ஒரு பாடலை ப்ளே செய்துவிட்டு ஆடலாம். ஆடத் தெரியவில்லை என்றாலும் குதிக்கலாம். கூச்சமாகத்தான் இருக்கும். ஆனால் யாரும் பார்க்கப்போவதில்லை என்பதால், நான்கு சுவர்களுக்குள்ளாவது நீங்கள் நீங்களாக இருங்கள்.

* நல்ல தூக்கம்!

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தினமும் ஒரே நேரத்தில் உறங்கச் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

* எழுதுங்கள்!

முதலில், உங்களுக்குப் பிடித்த ஒரு பாடலைக் கேட்டு மனசை லேசாக்கிக்கொள்ளுங்கள். பிறகு ஒரு பேப்பர் அல்லது நோட்டை எடுத்து உங்கள் பலம், பலவீனம், பிடித்தது, பிடிக்காதது, ஆசைகள், முக்கியமாக உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயங்களை வெளிப்படையாக எழுதுங்கள். இதைத் தினமும் செய்யுங்கள். இப்படி மீண்டும் மீண்டும் எழுதும்போது, மூளை அதைக் கட்டளையாக எடுத்துக்கொள்ளும்.

 

பொதுவாக, பேசுவது, நினைப்பது எல்லாம் மூளையில் பதிவாகாது. ஆனால், எழுதுவது ஒரு மோட்டார் ஸ்கில் என்பதால், எழுதப்படும் விஷயம் மூளையில் பதிவு பெறும். எனவே, உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்பும் விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதும்போது, மூளை அதை எடுத்துக்கொண்டு செயல்படுத்தும். உங்கள் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுதும்போது, அதற்கான தீர்வை யோசிக்க ஆரம்பிக்கும்.

மனதை வளமாக்குவோம்!"

- கே. அபிநயா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close