Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாய் ஃப்ரெண்டுக்கு ஒரு தோழியின் கடிதம்! #HappyBoyFriendDay

இன்று ஆண் நண்பர்கள் தினம். இதைப் பற்றி பாய் ஃப்ரெண்டுக்கு என்ன சொல்ல... அவனுக்கு இதுவும் மற்றுமொரு நாளே. ஆனால், மற்ற சிலருக்குச் சொல்ல பல விஷயங்கள் இருக்கின்றன!
 

 

'பாய்ஃப்ரெண்ட்' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், ’அட...லவ்வர்தானே!’ என்றுதானே பலரின் மனம் நினைக்கும். ரத்த சொந்தங்களிடம் கூட இல்லாத ஒரு பிணைப்பு, நண்பர்களிடம் என்றுமே உண்டு. அது எதிர்பாலினத்து நட்பு என்றால், இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். அதுதான் இயற்கை. அதை கொண்டாடுவது அவசியம். ஆனால், அதைக் கையாளும் பக்குவம்... அதைவிட அவசியம். 

'ஆட்டோகிராஃப்' படத்தில் சிநேகா சேரனிடம், ''எல்லார் போலவும் சராசரி உறவு அமைச்சுக்க விரும்பல. நீ எனக்கு ஒரு நண்பனா, என்னோட எல்லா சுக, துக்கத்துக்கும் தோள் கொடுத்து, என்னோட எல்லா உணர்வுகளையும் பகிர்ந்துக்க, என்னோட கடைசி மூச்சு இருக்க வரைக்கும், என் கூடவே வரப்போற ஒரே ஒரு நண்பாக நீ வேணும்'' என்பார். இதுபோன்ற நட்புகள் இன்று நம்மைச் சுற்றி நிறையவே இருக்கின்றன. ஆனால், நாம் கடந்து வந்திருக்கும் எத்தனையோ கசப்பான சம்பவங்கள் ஆண்-பெண் நட்பைப் பற்றி நமக்கு நம்பிக்கை குறைத்திருக்கும். நட்பு என்பது பின்னாளில் தோன்றப்போகும் காதலுக்கான அஸ்திவாரமாகத்தான் பல திரைப்படங்களிலும் காட்டப்படுகிறது. ‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப்பட ஷாலினி, பிரசாந்த் நட்பு போல. இருந்தாலும், எப்போதும் நண்பர்கள், நண்பர்கள் மட்டுமே என்று சொல்லும் 'பிரியமான தோழி' பட மாதவன், ஸ்ரீதேவி ரக நட்பும் திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை மறந்துவிட முடியுமா?
    
ஒரு பெண்ணால், சக தோழியிடம் பகிர முடியாத விஷயங்களைக்கூட, தன் ஆண் நண்பனிடம் சுலபமாகப் பகிர முடியும். ஒரு பெண்ணுக்கு பல தோழிகள் இருந்தாலும், ஓர் ஆண் நண்பன் இருக்கும்போது, அவள் சமூகத்தை கூடுதல் தைரியத்துடன் எதிர்கொள்வாள். அவள் தான் படித்ததை, பார்த்ததை, கேட்டதை, நினைத்ததை ஆண் நண்பனிடம் மணிக்கணக்கில் பகிர்ந்துகொள்வாள். 'என் நண்பன் இருக்கான்' என்ற எண்ணம் போதும், எத்தனை சவால்களையும், துணிச்சலான முடிகளையும் அவளால் எடுக்க முடியும்.

தன் மீதான நம்பிக்கை குறையும்போது எல்லாம், நண்பனின் வார்த்தைகள்தான் அவளுக்கு எனர்ஜி டானிக். ஆண்மயமானச் சமூகத்தை எப்படி எதிர்க்கொள்வது என ஓர் ஆண் நண்பனைவிட வேறு யாரால் சிறப்பாக சொல்லிக் கொடுத்துவிட முடியும்! 

வீட்டிலோ, அலுவலகத்திலோ சில சம்பவங்களால் பயங்கர டென்ஷன். அப்போதைக்கு யாரிடமாவது புலம்ப வேண்டும், கோபப்படத் தோணும். காதலனிடம் அதிகபட்சம் சில முறைகள் மட்டுமே அந்த விஷயத்தைப் பற்றி புலம்ப முடியும். அதன்பின், ’வீட்ல ஸ்ட்ரிக்ட்டா சொல்லிரு... இனி இது பத்தி பேசாதே’ என்றோ, ‘ஏன் இவ்ளோ டென்ஷனா வொர்க் பண்ற.. அந்த வேலையை விட்டுரு. வேற வேலை தேடு’ என்றோ... அந்தப் பிரச்னைக்கான தீர்வுகளை அன்பாகவோ அதிகாரமாகவோ சொல்லுவான். ஆனால், ஆண் நண்பனிடம் அப்படி இல்லை. மணிக்கணக்கில் அவனிடம் புலம்ப முடியும். புலம்பலை பொறுமையாகக் கேட்டுவிட்டு, பிரச்னையைச் சமாளிக்க ரூட் போட்டுக் கொடுத்துவிட்டு... பின் அதற்கு ட்ரீட்டும் கேட்பான். அதோடு விடுவானா... ’இனி ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எல்லாத்துக்கும் லைக் போடனும்’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு, அப்படிப் போடாவிட்டால் பஞ்சாயத்தும் கூட்டுவான். இப்படியெல்லாம் நம் டென்ஷனைக் குறைக்க நண்பனால் மட்டுமே முடியும்.

 


காதலனிடம் நல்ல பிள்ளை வேஷம் எவ்வளவு வேண்டுமானும் போடலாம். ஆனால், நண்பனோ ‘ஹே... ச்சீ.. சீன் போடாத‘ என்று ஒரு வார்த்தையில் நம்மை ஆஃப் செய்து இயல்புக்கு கொண்டு வந்து, கம்ஃபர்ட் ஸோனில் வைத்திருப்பான். காதலனைப் பார்க்கப் போகும்போது அவ்வளவு மேக்-அப் போடுவார்கள். அந்தப் பசங்களும் அதுக்கு வெரிகுட், லைக்ஸ் போட வேண்டும். ஆனால், நண்பனைப் பார்க்க அப்படியா போவோம்? மிக கேஸூவலாக செல்வோம். ஒருவேளை மேக்-அப்புடன் சென்றாலும், அவன் கேஸுவலாக அதை கமென்ட் அடித்து காலி செய்துவிடுவான்.

காதலனிடம் கூட சொல்ல முடியாத பல விசயங்களை ஆண் நண்பர்களிடம்தானே பகிர முடியும். காதலனிடம் பேசும்போது இருவருக்கும் பிடித்த பொதுவான விஷயங்களைத்தான் மணிக்கணக்கில் பேச முடியும். ஆனால், நண்பனிடம் பெரும்பாலும் நமக்குப் பிடித்த விஷயங்கள், அவனுக்குப் பிடிக்காதவையாக இருந்தாலும் அதை வலுக்கட்டாயமாக கேட்க வைத்து, சண்டை போட்டு ஆர்பாட்டம் செய்ய முடியும்.

காதலனிடம் எப்போதும் ஒரு செல்லம், பிரியம் இருக்கும். சமயங்களில் நாம் கோபத்தில் சீறினால், அந்தச் செல்லம் ஆடிப்போகும். ஆனால் நண்பனிடம் அதீத கோபம் காட்டிய பின்னும், ‘ஸாரி நட்பே..’ என்ற ஒரு வார்த்தை போதும். அதே தோழமை தொற்றிக் கொள்ளும். ஆண் நண்பனின் நட்பு 'காதல்' செய்யாது. ஆனால் 'அன்பு' செய்யும். அதற்கு கசப்பு தெரியாது, காழ்ப்பு கிடையாது.
 
இந்த நட்பில் கோபம், சண்டைக்கு எல்லாம் குறைவு இருக்காது. பொசஸிவ்னெஸும் அதிகமாகவே இருக்கும். எதிர்பாலின நட்பில் அதுதான் சுவாரஸ்யமே. உடனே, ’நட்பு புனிதம்... அது மனதுக்குள் இருக்கும் மனிதம்... அதைச் செய்யாதீர்கள் அசுத்தம்’ என்றெல்லாம் பொங்கிப் பொரும வேண்டாம். பெண்ணுக்கும் ஆணுக்குமான நட்பு இயல்பானது, அழகானது, உண்மையானது. அந்தளவுக்கான புரிதல் போதும். இனிமேலாவது பாய் ஃபிரெண்டையும், காதலனையும் ஒரே கோட்டில் கொண்டுவராதீர்கள். ’பாய் ஃப்ரெண்ட் இருக்கா...?’ என்றோ, ‘எத்தனை பாய் ஃப்ரெண்ட்?’ என்றோ எந்தப் பெண்ணிடமும் கிண்டலாகக் கேட்காதீர்கள்.

நட்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்பவர்களைத் தவிர்த்துவிடுவோம். வாழ்க்கையின் சந்தோஷ தருணங்களில் இல்லாவிட்டாலும், துன்பங்களின் போது நமக்கு தோள் கொடுக்கும், நமது கவலைகளுக்கு காது கொடுக்கும்... ஒரு நண்பன் வாய்ப்பது வரம்.

ஆண் நண்பர்களிடம் பெண்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பெல்லாம் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வல்ல. அதைக் காது கொடுத்துக் கேட்கும் பொறுமை மட்டுமே. பகிரும் சந்தோஷம் இரட்டிப்பாகும். பகிரும் வருத்தம் சரிபாதியாகும். இதைத்தான் ஆண் நண்பர்களிடம் கேட்கிறோம். இதைத்தான் சில நண்பர்களுக்கும் எங்களுக்குத் தருகிறார்கள்.


 
இது இயல்பு. இதை சிலர் சீண்டும்போதுதான், அறிவுமதியின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. 


“கடற்கரையில் 
முகம் தெரியாத இரவில் 
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே 
உணரும்
பாக்கியம்
எத்தனை கண்களுக்கு வாய்த்திருக்கும்!"

இந்தக் கவிதையை, உங்களால் உறுத்தல் இல்லாமல் உணர முடிந்தால், நீங்களும் ஒரு பெண்ணுக்கு நல்ல நண்பனாக இருக்க முடியும். 

- கே. அபிநயா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close