வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (10/11/2016)

கடைசி தொடர்பு:14:58 (14/11/2016)

‘டாக்கிம் டாம்’ மட்டும் போதுமா உங்கள் குழந்தைகளுக்கு! பெற்றோருக்கு சில ‘சுருக்’ வார்த்தைகள்...

 

குளத்துக்கரை ஆலமரம், தெருமுக்குச் சத்திரம், சத்துணவுக்கூடத் திண்ணைகளில் கரித்துண்டுகளால் வரையப்பட்ட தாயக் கட்டங்கள், சுவரோரங்களில் கட்டம் கட்டி பளிங்குகளால் பாட்டா ஆடும் சிறுவர்களின் சிரிப்பொலி, நடுநிலைப்பள்ளி மைதானங்களில் ஒரு பக்கம் ‘இச்சா... இனியா...’ என்ற குரல், நொண்டி விளையாட்டு, மறுபக்கம், மண் குவித்து ‘கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் கீயா கீயாத் தாம்பாளம்’ எனச் சந்தத்தோடு பாடும் சிறுமிகளின் ஆரவாரங்கள், ரோட்டோரம் குவிந்துகிடக்கும் சல்லிகளில் துருத்தல் இல்லாத சின்னச் சின்ன கற்கள் கொண்டு, ஒரு கல் தூக்கிப்போட்டு அது தரை விழுவதற்குள் கீழே கிடக்கும் ஆறு கற்களையும் லாவகமாக அள்ளும் பிஞ்சு விரல்களின் கல்லாங்கா ஆட்டம், விடுமுறை நாட்களில், கடைகளில் விற்கும் ஃபிலிம் ரோல்களை, வெயில்படிகிற இடத்தில் வெள்ளை வேட்டியை பிடித்துக்கொண்டு அதில் காட்டி, ‘ஏய் ரஜினிடா’, ‘கமல்டா’ ‘ஸ்ரீதேவி பாரேன்’ என குதூகலித்த நாட்கள், ஒரு கல்கோனாவுக்காக அக்காக்களுக்கும் அண்ணன்களுக்கும் காதல் கடிதங்களைக் கொண்டுசேர்த்து காலங்கள்...

 

70, 80களின் தீராப் பக்கங்கள் இவை. இனி வரும் குழந்தைகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லாத பெருவாழ்வு. இலக்கியம், சினிமா, நாடகம், திருவிழாக்கள், காதல், நட்பு, விளையாட்டு என எல்லாவற்றையும் கொண்டாடி வாழ்ந்திருக்கிறோம். கல்விக்கும் வாழ்க்கைக்குமான பிணைப்பு அப்போது இருந்தது. பசுஞ்சாணி மொழுகிய மண் தரையில், வாழ்வியலோடு கலந்த குழந்தைகளின் விளையாட்டுகள், பஞ்ச தந்திரக் கதைகள், பெரியவர்களின் இட்டுகட்டுக் கதைகள் அனைத்தும் உள்ளார்ந்த அறக் கருத்துக்களையும் அன்பையும் கற்றுக்கொடுத்தன. தோல்வியில் வெற்றிக்கான சூட்சுமத்தையும், வெற்றியில் திறமைக்கான போராட்டத்தையும் கற்றுக்கொடுப்பது விளையாட்டு.

விட்டுக்கொடுத்தலும், சகிப்புத்தன்மையும் இல்லாத குழந்தைகள், வன்முறையின் கூடாரமாக மாறிவிடுகிறார்கள். இன்றைய குழந்தைகளின் நிலை அப்படித்தான் இருக்கிறது. பிறந்தது முதல் திருமணக்காலம்வரை பெற்றோர்களின் கவனிப்பில் இருப்பது நம் பண்பாடு. இருந்தும், பொய், பித்தலாட்டம், ஏமாற்றுதல், திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற வன்முறைகள் ஏன் பெருகிவிட்டன? அவை எங்கிருந்து துவங்குகின்றன? சமூகம் மட்டும்தான் காரணமா? குடும்பங்களின் கூட்டமைப்புதானே சமூகம்? எல்லாவற்றுக்கும் சமூகம், சமூகம் எனத் தட்டிக்கழிப்பதைவிட, நாம் குழந்தை வளர்ப்பில் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும் என்கிற பதட்டமும், ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகள் வளர்ப்பில் சரியாக இருக்கிறோமா என்பதை சுயபரிசீலணை செய்யவேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.

 

 

 

குறைந்தபட்சம், ஒரு வேளை உணவை கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். உணவுக்கு முன் குழந்தையை எப்படி தயார்செய்கிறோம்? தொலைக்காட்சி முன்பாக அமரவைத்து, ஒருவரை ஒருவர் அடிப்பதும், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே தன் எல்லையை அடைவதுமான எந்திரக் காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அதிரடிகளில் லயித்துப்போன குழந்தை, நீங்கள் சொல்லாமலேயே வாயை மூடி மூடித் திறக்கிறது. உங்களை அறியாமலேயே ஒவ்வொரு வேளைக்கும் குழந்தைக்கு உணவுடன் சேர்த்து வன்முறையையும் புகட்டுகிறீர்கள். குழந்தையின் கண்களும் மனதும் காட்சியில் இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வீடியோ விளையாட்டுகள் உங்களுக்கும் பிடித்துப்போகிறது. ஊட்டப்படும் உணவு வாய்க்கும் மூக்குக்குமாக நிரப்பப்படுகிறது. இதைவிடக் கொடுமை, உணவே மருந்து என வாழ்ந்த பரம்பரையின் நீட்சியான நீங்கள், நேரமின்மையால் கிளறி எடுத்து வருவது நொடியில் தயாராகும் துரித உணவு.

ஓடியாடி விளையாடுவதும் தரையில் வீழ்ந்து எழுவதும் குழந்தைகளின் தன்மை. வலிகள் உணராத குழந்தை மருந்துகளின் அடிமை. காயப்படும் என்பதாலும், ஹாலில் நீங்கள் வைத்திருக்கும் விலையுயர்ந்த கிரிஸ்டல் தொலைக்காட்சி உடைபடும் என்பதற்காகவும் நான்கு புறமும் அடைக்கப்பட்ட, அசைக்க முடியாத தொட்டில் போன்ற ஒன்றில் குழந்தையை உட்காரவைத்து, உங்களுக்கான வேலையைப் பார்க்கிறீர்கள். போதாக்குறைக்கு, டயப்பர் இடுப்பில் கட்டப்படுகிறது. சிறுநீரும் மலமுமாய் வியாதி மூட்டையைக் தூக்கிச் சுமக்கிறது குழந்தை. வீட்டில் இருக்கும்போதுகூட, அவர்கள் ஈரம் செய்துவிட்டால் துணி மாற்றிவிட முடியாத பெற்றோரின் அவசரமும், அலட்சியமும் எப்படி நியாயப்படுத்தப்படும்?

முதலில் குழந்தைகளோடு உட்கார்ந்து பேசுங்கள். பேச ஆளில்லாமல், மூன்று வயதுவரை பேச்சே வராமல் போகிற குழந்தைகள் ஏராளம். அரவணைத்து, தலைகோதி, ஆரத்தழுவி உங்களுக்குத் தெரிந்த நீதிக் கதைகளை அன்பாகச் சொல்லிக்கொடுங்கள். கதை சொல்வதற்காகவேனும் வாசிக்கப் பழகுங்கள். அவர்களையும் உங்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி தொடர் பார்க்க வைக்காதீர்கள். கார்டூன் சேனல்கள், சீரியல்களில் இருந்து விடுபட்டு, பெற்றோர் & பிள்ளைகளுக்கான நேரத்தைக் கண்டடையுங்கள்.

 

 

 

அம்மா, அப்பாக்களின் நிழலில், வாயசைப்பில், சொல்லில், செயலில் ஊறித் திளைத்துதான் எல்லா குழந்தைகளும் வளர்கிறார்கள். முன்பு, ‘அப்பா அம்மா’ விளையாட்டு என்று ஒன்று இருந்தது. சினிமா அதைத் தவறாக சித்திரித்திருக்கலாம். ஆனால், வீட்டு வாசலில் அமர்ந்து, உங்கள் குழந்தைகள் விளையாடுவதைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். நீங்கள் வாழ்கிற வாழ்க்கையைப் படம்பிடித்துவிடுவார்கள். ‘ஏய் என்னடி சமைச்சி வெச்சிருக்க?’ எனத் தள்ளாடியபடி அடிக்கக் கை ஓங்கும் குடிகார அப்பாவாக நடிக்கும் மகனும், ‘வரும்போது மளிகை சாமானெல்லாம் வாங்கிட்டு வந்துருங்க’ எனப் பயந்து லிஸ்ட் கொடுக்கும் மகளும்... அந்த இடத்தில் நீங்களாகப்பட்டவர்கள். உங்களைப் பிரதிபலிக்கிறார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் சூழலை எளிதில் கிரகிக்கும் சாமர்த்தியம் அதிகம் உண்டு. எனவே, நீங்கள் எப்போதும் அவர்களால் கவனிக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்.

 

‘என்ன பாடு படுத்துது... புள்ளையா இது...’ என்ற சலிப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள், பயிருக்குப் பயனில்லாமல் திக்கற்று ஓடும் காட்டாறாகவே இருப்பார்கள். குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள் எனக் கோபத்தோடு ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூலில் தள்ளிவிடுவது சரியா? பள்ளிகள் மீது தவறு சொல்ல முடியாது. இத்தனை மணி நேரத்துக்கு இவ்வளவு பணம், தொழில் ரீதியான சேவை, அவ்வளவுதான். பெற்றோர்களுக்குப் பதில்சொல்ல வேண்டுமே என்கிற பயத்தில் அங்கே கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், அவர்களால் அன்பு செலுத்த இயலுமா? வளர்ச்சியில் ஒவ்வொரு பருவம் உண்டு. 20 வயது கடந்த மகளை, ‘சிறுவயதில் நான் உன்னைச் சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லை, தவழ்ந்து காட்டு’ என்றால் ஆகிற காரியமா? அந்தந்த வயதுக்கானக் குறும்புகளை அம்மாக்கள் துள்ளலோடு ஏற்றுக்கொள்வதுதான் ஆனந்தம். காலம் மீண்டு வருவதில்லை.

இன்றைக்கு, பெண்களுக்கான வெளிகள் ஓரளவு திறக்கப்பட்டிருக்கின்றன. ‘வேலைக்கு போகல, வீட்லதான் இருக்கேன்...’ எனக் குரல் தாழ்த்திச் சுருக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து சாதனையாளர்களாக நிமிர வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம், குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்கள், இந்தச் சமூகத்துக்குப் பயனுள்ள ஒரு மகனையோ, மகளையோ தயார் செய்யும் உன்னதப் பொறுப்பில் இருக்கிறீர்கள். அதை நினைவில் இருத்துங்கள்.

 

 

ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பில் ஆழக் கவனம் வைத்தால் மட்டுமே அன்பான குடும்பம் அமையும். பிள்ளைகளின் மீள் கனவுகளில், பெற்றோர்கள் ஊட்டிய அன்பும், நைப்புத்தன்மையும், மனிதநேயமும் நிறைவான வாழ்க்கையை உருப்பெருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், குற்றவுணர்ச்சியே மேலிடும். வேடிக்கை காட்ட, சோறூட்ட, தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் சொன்னதைச் சொல்கிற, ஒரு ‘டாக்கிங் டாம்’ பூனை, உங்கள் பிள்ளையின் பால்ய காலத் தோழமை என்பதை எப்படி உங்களால் தீர்மானிக்க முடிகிறது?! தெரிந்தோ தெரியாமலோ தன்னியல்பாக உங்கள் குழந்தைகள், ‘டாக்கிங் டாம்’- ஆகவே மாறிக்கொண்டிருக்கிறார்கள். மீட்டெடுப்பது உங்கள் பொறுப்பு!

- அகிலா கிருஷ்ணமூர்த்தி

படங்கள்: சூ.நந்தினிநீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்