Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளின் சண்டையை எப்படி சமாளிப்பது? #செல்லமே செல்லம் #GoodParenting

கடிதம் - 02

                                                 


ன்புள்ள நண்பன் நந்தாவிற்கு, 


நலம். பிள்ளைகள் நலமும் செல்வமணியின் நலமும் அறிய ஆவல். நாம் சந்தித்தபோது, இரவு உணவுக்குப் பிறகு, மொட்டை மாடியில் நிலா பார்த்துக்கொண்டே எல்லோரும் பேசிக்கொண்டிருந்தது நல்ல அனுபவம். அப்போது உன் மனைவி செல்வமணி, நிதிலனைப் பற்றி பேசியபோது நான் பேச்சை மாற்றியது உனக்கு நினைவிருக்கலாம். அதற்குக் காரணமிருக்கிறது. 

ஒரு குழந்தையை பற்றிய விமர்சனத்தை, அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டே பேசுவது அத்தனை சிறப்பானதல்ல. நேர்மறையாகப் பேசினால் சிறப்பு. ஆனால் அதே சமயம் 'அவன் எப்பவும் அப்படித்தான்', 'ஆமாம் அவன் கூச்ச சுபாவம் உடையவன்' என்று சொல்லும்போது, அதுதான் தன்னுடைய குணம் என்று ஒரு கருத்துருவாக்கத்திற்கு குழந்தைகள் வந்துவிடுவார்கள். 'ஓ! நான் இப்படித்தான் இருக்கணும்போல' என நினைத்துக்கொள்வார்கள். அதனால்தான் தவிர்த்தேன்.
 
மற்றபடி, இங்கே வீட்டில் வித்யாவும் பிள்ளைகள் இருவரும் நலம். பெரியவள் குழலிக்கும் சின்னவர் செழியனுக்கும் மத்தியஸ்தம் செய்து வைப்பதிலேயே நேரம் கடக்கின்றது. அதுவும் ஒரு சுவாரஸ்யம்தான். என்னதான் செய்தாலும் இரண்டு குழந்தைகள் இருக்கும் இல்லங்களில் அடிதடி, சீண்டல்களுக்கு குறைவே இருக்காது. நம் கவனம் இருக்கவேண்டியது, அது இருவருக்குள்ளும் நிரந்தரமான பகைமை உணர்வினை விளைவித்துவிடக்கூடாது என்பதில்  மட்டுமே.

                                            


பெரும்பாலான பிரச்னைகள், ஏதாவது ஒரு பொருளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. 'அப்பா, என் பொம்மையை எடுத்துட்டான்', 'அம்மா, என் பெட்ல அவ படுக்கிறா', 'மா, என் புக்கல வரையிறான்' என்றே துவங்கும். தன்னுடைய உடைமையில் அதிக கவனம் குழந்தைகளிடத்தே இருக்கும். அதனை நாம்தான் மெனக்கெட்டு தளர்த்திட வேண்டும். 

வீட்டில் எல்லா பொருட்களும் இருவருக்கும் சமம், என மெல்ல மெல்ல புரியவைக்க வேண்டும். பொருட்களை சுழற்சி முறையில் ஒருவருக்கானதாக மாற்றி முயற்சிக்கலாம். எடுத்துக்காட்டாக, பச்சை தலையணை இந்த மாதம் பெரியவருக்கு, மஞ்சள் தலையணை சின்னவருக்கு. அடுத்த மாதம் அப்படியே முறையை மாற்றி செய்திடலாம். இந்த முயற்சியால் 'இரண்டுமே நம்முடையதுதான்' என்ற எண்ணம் விளையும்.

பெரும்பாலும், சற்று வளர்ந்த குழந்தைகள் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் விட்டுக்கொடுத்தால், தான் தோற்கும் நிலைக்கு வந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். கொஞ்சம் அடம்பிடிப்பார்கள், அது முரட்டுத்தனமாக மாறலாம். இங்கேதான் பெற்றோர்கள் நாம் தலையிட வேண்டும். சண்டைக்குள் அல்ல. சின்னவரின் வருகையால் தான் எதையும் இழந்துவிடவில்லை என்ற உறுதியை பெரியவருக்குக் கொடுக்க வேண்டும். அதை உணரச்செய்ய வேண்டும். நம் பேச்சினால் அது சாத்தியமாகும்.

இந்த உரிமைப் போராட்டத்தில், ரசிக்கவைக்கும் ஒரு க்ளைமாக்ஸும் இருக்கும். பிரச்னை என்று அவர்கள் வரும்போது, நாமும் பஞ்சாயத்திற்கு சொம்பைத் தூக்கிட்டு போனால்... அதற்குள் இருவரும் பரஸ்பரம் நட்பு பாராட்டிக் கட்டிப்பிடித்து கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். அழகு!
 

                                           
 

கற்பனை உலகத்தில் இருந்து நிதர்சனத்துக்கு(Fantacy to Fact)!

குழந்தைகள் வளர வளர இருவரின் உலகமும் வேறுவேறு நிலையினை எட்டும். முதல் குழந்தை மன முதிர்ச்சி அடைவதுபோல இருக்கும்; ஆனால் இரண்டாம் குழந்தையின் மழலைத்தனத்தால் அதன் வேகம் குறையும். முதல் குழந்தையும் தன் வயது முதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் கீழ் இறங்குவதைக் காணலாம்.

வளரும் குழந்தைகளுக்கு, தாங்கள் மீண்டும் மழலைக்குத் திரும்புவது நிச்சயம் குதூகலமாகவே இருக்கும். என்றாலும், தங்கள் வயது, படிப்பு பொறுப்புகள், பெற்றோரின் அறிவுறுத்தல் போன்ற காரணங்களால் மெல்ல மெல்ல மழலைத்தனத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு நிஜ உலகிற்குள் காலடி எடுத்து வைப்பார்கள்... ஒரு ஃபேன்டசி உலகத்தில் இருந்து நிதர்சன உலகத்திற்குள் காலடி வைப்பதுபோல. இந்தச் சமயம், பெற்றோர்கள் இரண்டு குதிரைகளை ஓட்ட வேண்டும். ஒன்று சின்னவருக்கான கற்பனைக்குதிரை; மற்றொன்று நிதர்சனத்துக்கு சற்று அருகே பயணிக்கும் குதிரை. 
 
இருவரிடமும் ஒரே சமயத்தில் நேரம் செலவிட்டாலும், இருவரின் மன முதிர்ச்சியையும் கணக்கில்கொள்ள வேண்டும். ஒரு கதை கேட்கிறார்கள் என்றால் அது ஃபேன்டசியாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் பெரிய குழந்தையின் அறிவுத்தேடலுக்கு தீனி போடுவதாகவும் இருக்க வேண்டும். 

                                            

மழை எப்படி வருகின்றது என்று விளக்கும்போது, மழை ஒரு மாயமாக சின்ன குழந்தைக்குத் தோன்றும். அதே சமயம் பெரிய குழந்தைக்கு அதன் அறிவியல் என்ன, எப்படி நீர் ஆவியாகின்றது என்று விளக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய், அதே விஷயத்தை பெரிய குழந்தையை விட்டு சின்ன குழந்தைக்கு விளக்கவைக்கலாம். அவர்கள் சற்று முன்னரே கடந்துவந்திருக்கும் மொழி மற்றும் மழலை உலகம் அது என்பதால், அவர்கள் எளிதில் விளக்கிடுவார்கள். குழலி அப்படித்தான் சில சிக்கலான பொழிப்புரைகளை மிக எளிதாக தன் தம்பி செழியனுக்கு விளக்குகின்றாள்.

இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை நந்தா. இதன் நுட்பத்தைப் புரிந்துகொண்டால் பொங்கப் பொங்க மகிழ்ச்சிதான்.

செல்வாவிற்கும் நிதிலனுக்கும் என் அன்பினை தெரிவிக்கவும்.அன்புடன்,
விழியன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close