வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான 12 உற்சாக டிப்ஸ்!

வேலைக்குச் செல்லும் பெண்கள்  அலுவலகத்தில் பிரச்னைகள் தவிர்த்து உற்சாகமான, மகிழ்ச்சிகரமான, நிம்மதியான பணி அனுபவம் பெறுவதற்கான ஆலோசனைகள் தருகிறார், மயிலாடுதுறையைச் சேர்ந்த சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் 'பேஸ்' மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ.இராமன்.

1. ஆண்டுத் திட்டம், மாதத் திட்டம், வாரத் திட்டம், தினசரி திட்டமிடல் (yearly plan, monthly plan, weekly plan, daily plan) என்று வகுத்துக்கொள்ளுங்கள். அப்போது பணிகளை முடிக்க வேண்டிய காலத்திற்குள் முடிக்க இயலும். மேலும், மாதத் திட்டம் ஆண்டுத் திட்டத்தை ஒட்டியும், வாரத் திட்டம் மாதத் திட்டத்தையும் ஒட்டியும், தினசரித் திட்டமிடல் வாரத் திட்டத்தை ஒட்டியும் இருக்குமாறு அமைத்துக்கொள்வது சிறப்பு.

2. வேலைக்குச் செல்லும் பெண்கள் பெர்சனல், அலுவலகம் என இரண்டு மொபைல்போன்கள் வைத்துக்கொள்ளலாம். அலுவலக நேரத்தில் பெர்சனல் மொபைலை மியூட்டில் வைத்துவிட்டு, வீடு திரும்பும் நேரத்தில் அதை உபயோகித்துக் கொள்ளலாம்
 
3. பணியிடத்தில் ஏதாவது இடர்பாடுகள் இருந்தால் அதை பக்குவமாக கணவரிடமோ அல்லது தந்தையிடமோ ஆரம்பத்திலேயே சொல்லி வைப்பது நல்லது.

 

4. உடன் பணிபுரியும் நெருங்கிய தோழிகளை வீட்டுக்கு அழைத்து ஒரு விருந்து கொடுத்து, நட்பை பலமாக்கிக்கொள்ளுங்கள். அலுவல் சிரமங்களை இணைந்து எதிர்கொள்ளும் தைரியத்தையும் திறனையும் அந்த நட்பு கொடுக்கும்.

5. வீட்டுப் பிரச்னைகள அலுவலகத்தில் பகிராதீரகள். உங்கள் குடும்பம் பற்றி எப்போதும் பாஸிட்டிவ் ஆகவே சொல்லி வையுங்கள். உங்களுக்கான மதிப்பு கிடைக்க, உங்கள் குடும்பம்தான் அடிப்படை என்பதை மறவாதீர்கள்.

6. பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சம்பந்தமில்லாத அல்லது உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசாதீர்கள், யோசிக்காதீர்கள், யாருக்கும் ஆலோசனை சொல்லாதீர்கள். தோழியோ, சக அலுவலரோ, உயர் அதிகாரியோ உங்களிடம் ஒரு பிரச்னைக்குத் தீர்வு சொல்லச்சொல்லிக் கேட்டால், உடனே பதில் சொல்லாதீர்கள். தீர சிந்தனை செய்து அதில் உள்ள சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு பதிலளியுங்கள்.

7. பணி குறித்து நீங்கள் கோபமாகவோ அல்லது மூட் அவுட் ஆகவோ இருக்கும்போது அதற்கான காரணத்தை யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். அந்நிலையில் எதையும் பேசாதீர்கள்.  அந்தப் பிரச்னை குறித்து பிறரிடம் பஞ்சாயத்து வைக்காதீர்கள். மனது சமநிலைக்கு வந்த பிறகு அதைப் பற்றி யோசியுங்கள், பேசுங்கள், முடிவு எடுங்கள்.

8. ஒரு பொறுப்பு உங்களுக்குத் தரப்படும்போது, அதை நீங்கள் கையாளும் முறை மற்றும் அது குறித்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும்  உங்கள் எதிர்காலம் அடங்கியுள்ளது என்பதை மறவாதீர்கள்.

9. என்ன கோபம் என்றாலும் யாரிடமும் கோபத்தையோ, வெறுப்பையோ காட்டாதீர்கள். மாறாக ஒரு புன்னகை மட்டும் உதிர்த்துவிட்டு சென்று விடுங்கள். பணிச்சூழலில் பிரச்னை, நிரந்தரப் பகையெல்லாம் தேவையற்றது.

10. அலுவலகத்தில் சக பணியாளரோ, மேலதிகாரியோ ஒரு குறை/புகார் கூறினால், அது உங்கள் வேலை குறித்த குறையேயன்றி, தனிப்பட்ட முறையில் உங்களைப் பற்றியதல்ல என்ற புரிதலுடன் அதை அணுகுங்கள். அதேபோலவே நீங்களும் மற்றவர்களின் மீதுள்ள குறைகளைக் கையாளுங்கள்.

11. அலுவலகத்தில் ஒரு கெட் டு கெதர் என்றால், மகிழ்ச்சியான மனநிலையுடன் கலந்துகொள்ளுங்கள்.

12. கூடியவரை தனியாக அலுவலகத்தில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். உங்களுடன் யாரேனும் ஒரு பெண் உடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 நீங்கள் உயரதிகாரியாக இருந்தால், உங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் கவனமாகவும், கண்டிப்புடன் அதே சமயம் அன்புடனும் நடந்துகொள்ளுங்கள்.

ஆக, வீட்டில் இருந்து அலுவலகத்துக்குக் கிளம்பும்போது, தினமும் இந்த நாள் வெற்றிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடம் கிளம்பிச் செல்லுங்கள்.

-என்.மல்லிகார்ஜூனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!