Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"எங்களுக்கு எதிர்பார்ப்பு கிடையாது; பிரார்த்தனைதான் உண்டு" -வெண்புள்ளி உள்ளவர்களின் சுயம்வரத்தில் பெண்கள் நெகிழ்ச்சி!

                                                         வெண்புள்ளி

 

வெண்புள்ளிகள் பாதிப்பு உள்ளவர்களுக்கு, சமூகம் தரும் புறக்கணிப்பின் வலி கொடியது. குறிப்பாக, திருமணத் தடைகளால் காலமெல்லாம் தனித்திருக்கும் முடிவு அவர்கள் மீது திணிக்கப்படுவது மிகத் துயரம். அதற்குத் தீர்வாக, அப்பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையாக தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்விதமாக, சுயவரம் நிகழ்வுகளை நடத்தி வருகிறது, 'வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா' என்ற அமைப்பு. 

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, சென்ற ஞாயிறு மதுரையில் நடத்திய சுயம்வரத்தில், தங்கள் வாழ்வுக்கான வெளிச்சம் தேடி பல ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர். மேடையில் ஒவ்வொருவரும் குடும்பத்துடன் ஏறி, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். பின்னர், மணபந்தத்தில் இணைய இசைந்து முதற்கட்ட முடிவு எடுத்த  குடும்பங்களுக்கு, அமைப்பு சார்பில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. 


சென்னையில் இருந்து வந்திருந்த ஆசிரியர் கவிதா, ''மத்தவங்க எங்களைப் பார்க்கிற பார்வையிலேயே தீண்டாமை தெரியும். குடும்பம், நண்பர்கள் தர்றசுயம்வரம் அன்பும் ஆதரவும்தான் வாழ்க்கை மீதான பிடிப்பு விலகாம வெச்சிருக்கு. திருமணம் என்பதெல்லாம் எங்களுக்கு விதியில் எழுதப்படலைனு நினைச்சிருந்தோம். ஆனா, இந்த சுயம்வரம் புது நம்பிக்கை தந்திருக்கு. ஜாதி, மதம் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு, நானும் எங்கப்பாவும் இங்க வந்திருக்கோம். என்னை மாதிரியே பாதிக்கப்பட்ட ஒருத்தருக்கு, என் வலி புரியும்; அவரோட வலி எனக்குத் தெரியும். அப்படி ஒரு துணை கிடைக்கிற நாளா இது இருக்கும்னு நம்பிக்கை இருக்கு'' என்றார். 

கும்பகோணத்தில் இருந்து வந்திருந்தார் பொறியாளர் ப்ரீத்தா. ''பஸ்ல போகும்போது, என் பக்கத்துல வந்து உட்கார்றவங்ககூட எனக்கு வெண்புள்ளி இருப்பதைப் பார்த்ததும் எழுந்திருச்சிடுவாங்க. இதில் கல்யாணம் பண்ணிக்க யாரு முன்வருவாங்க? ஆனாலும் எங்க வீட்டுல எனக்கு பல இடத்துல மாப்பிள்ளை பார்த்தாங்க. ஏமாற்றமும் அவமானங்களும்தான் மிச்சம். அப்போதான் இந்த அமைப்பு பற்றியும், சுயம்வரம் பற்றியும் கேள்விப்பட்டோம். என்னை மாதிரியே பாதிக்கப்பட்ட ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கும்போது, ஒரு பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையோட வந்தோம். அது நிறைவேறின மாதிரிதான் தோணுது. முதற்கட்ட சந்திப்பு, பேச்சுவார்த்தையில எங்க ரெண்டு குடும்பத்துக்கும் பிடிச்சிருக்கு. எங்க வாழ்க்கையும் அழகாகும்னு காத்திருக்கோம்" என்றார் ப்ரீத்தா  சுயம்வரம்

பெங்களூருவில் பணிபுரியும் ஐடி ஊழியர் ஆனந்த், ''பொதுவா, மாப்பிள்ளை, பொண்ணுனா பல எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனா, இங்க வந்திருக்கிற எங்களுக்கு எல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. எங்களைப் பிடிக்கணுமே என்ற பிரார்த்தனை மட்டும்தான் இருக்கும். இந்த சுயம்வரத்தில் ஒரு பெண்ணை எங்க குடும்பத்துக்குப் பிடிச்சிருக்கு. ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் பேசியிருக்கோம். நல்லது நடக்கணும்'' என்றார்.
 
அமைப்பின் செயலாளர் கே. உமாபதியிடம் பேசினோம். ''வெண்புள்ளி என்பது, ரத்த வெள்ளை அணுக்கள் சருமத்துக்கு நிறம் தரும் மெலனோசைட்களை அறியப்படாத காரணங்களால் அழிப்பதால் ஏற்படும் ஒரு நிறமிக்குறைபாடு மட்டுமே. இது நோயல்ல. இது பரவும்தன்மை கொண்டதல்ல. இது மரபுக் கோளாறும் அல்ல. அதை மக்களிடம் கொண்டுசேர்த்து, வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை சமூகப் புறக்கணிப்பில் இருந்து மீட்பதே எங்கள் நோக்கம். 

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் திருமண உறவு கிடைக்கப்பெறாமல் தனித்து வாழ்வதைத் தடுக்கும் விதமாக, சுயம்வரம் நிகழ்வுகளை இலவசமாக நடத்திவருகிறோம். திருச்சி, திருநெல்வேலி என தமிழகத்தின் பல நகரங்களிலும் இதுவரை நான்கு சுயம்வர நிகழ்வுகளை நடத்தியுள்ளோம். எங்கள் அமைப்பு மூலம் இதுவரை 383 திருமணங்கள் முடிந்துள்ளன. அந்தத் தம்பதிகளின் குழந்தைகளில் ஒருவர்கூட வெண்புள்ளி பாதிப்புடையவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது மரபு நோயல்ல என்று நாங்கள் வார்த்தைகளால் சொல்வதைவிட, தங்கள் புன்னகையால் பல நூறு மடங்கு வலிமையாகச் சொல்கிறார்கள் அந்தக் குழந்தைகள். 

இன்றைய ஐந்தாவது சுயம்வர நிகழ்வில், ஐந்து திருமணங்கள் நிச்சயக்கப்பட்டுள்ளன. அனைவருக்குமே 30 வயதுக்கு மேல். இதுவரை இருளில் நீந்திவந்த அந்த 10 பேரின் வாழ்க்கை, இனி அன்பாலும் அங்கீகாரத்தாலும் அழகாகவிருக்கிறது.  அவர்களுக்கான வாழ்த்துகளுடன், எங்கள் அமைப்பின் 20 வருடப் பயணத்தை அடுத்தகட்டத்தை நோக்கித் தொடர்கிறோம்'' என்றார்  

வெண்புள்ளி உள்ளவர்களின் வாழ்வில் அன்பும் மகிழ்வும் சூழட்டும்! 

- ஜெ. எம். ஜனனி, வெ.வித்யா காயத்ரி(மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: வெ.வித்யா காயத்ரி(மாணவப் பத்திரிகையாளர்)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close