Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களைக் கொல்லும் ஆயுதமாகிறதா... காதல்!

காதல்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜகோபாலன் பட்டியில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவி விஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் பள்ளி சென்றுகொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர் நவின்குமார் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். காரணம்..?! ஆம்... அது நமக்குச் சுலபமான யூகம்தான். ஒருதலை காதல். விஜி, நவின்குமாரைக் காதலிக்க மறுத்ததால் நடந்த விபரீதம் இது.

என்ன கொடுமை இது? மனம் கொதிக்கிறது. பெண் பிள்ளைகள் உள்ள வீடுகளில் எல்லாம் இதுபோன்ற செய்திகள் தரும் கலக்கம், மிக அதிகம். காதல் என்பது உன்னதமான ஓர் உணர்வு. ஆனால் இன்றோ காதலெனும் பெயரில் கொலைவெறி கோரத் தாண்டவமாடும் இதுபோன்ற விபரீதங்கள் தொடர்கதை ஆகிக்கொண்டிருக்கின்றன. மனநோய் பீடித்த சிலரின் வெறியாட்டம் இது என்று அசட்டை செய்ய இயலவில்லை. காரணம், கொலையாளிகள் அனைவருமே ஏதோ ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்த, அவர்கள் நம்பி வளர்த்த பிள்ளைகள்தான்.

தூத்துக்குடி சர்ச் ஒன்றில் பிரான்சினா என்ற இளம் ஆசிரியை அவர் மீது காதல் கொண்ட வெறியனின் கத்திக்கு இரையானார். சோனாலி என்ற மாணவி அவர் மீது காதல் கொண்ட சக மாணவனால் கல்லூரி வளாகத்தில் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார். 17 வயது நவீனா, தன்னைப் பல மாதங்கள் தொடர்ந்துவந்து தொல்லை கொடுத்த 34 வயது நபரால் நெருப்புக்கு இரையாக்கப்பட்டார். முகநூலில் அறிமுகமான முகமறியாத நபர் ஒருவர் ஊர்விட்டு ஊர் வந்து பெண்ணைத் தாக்கிய கொடுமையும் செய்தியாக அறிந்தோம். இந்தக் குரூர நிகழ்ச்சிகளுக்குச் சிகரம், ஸ்வாதி என்ற இளம் பெண் சென்னை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பலர் நடுவே அரிவாளுக்குப் பலியானது. இந்த வாரம், விஜி!

ஒரு கையில் காதல் கடிதமும் மறு கையில் அரிவாளும், ஆசிட் குப்பியும் ஏந்தி வருகிறது இன்றைய பயங்கரவாதக் காதல். இதை  தொலைக்காட்சிகளும், சினிமாவும் உசுப்பேற்றுகின்றன. ஒரு பெண்ணைத் தொடர்ந்து வந்து வம்பு செய்வது காதல் என்ற ஒரு கோட்பாடே பூதாகாரமாக உருவெடுத்திருக்கிறது.

'உன்னைப் பாக்கவே பிடிக்கல' என்று விலகும் பெண்ணிடம், 'என்னப் பாக்கப் பாக்கத்தான் புடிக்கும்' என்று வசனம் சொல்லும் கதாநாயகர்களை உருவாக்கியவர்கள், இப்போது, 'உனக்குப் பிடித்திருக்கிறதா? நிச்சயமான பெண்ணையும் துரத்தித் துரத்திக் காதலிக்கலாம். அவளை உன்னைக் காதலிக்க வைக்கலாம்' என்ற புது நியாயம் சொல்கிறார்கள்.

இப்போது நடைபெறும் மெகா சீரியல் ஒன்றில் கொண்டை போட்ட இளம் வில்லன் ஒருவன் தான் அடைய விரும்பும் பெண்ணைத் தாக்கிக் கைகால்களைக் கட்டிப் போட்டுக் கள்ளிப் பெட்டியில் அடைத்துக் கடத்தி வந்து மிரட்டுகிறான்.

'என்னைக் காதலிக்க மறுத்தால் உன்னை என்ன செய்கிறேன் பார்...' என்ற மிரட்டல் யாரிடமிருந்து எப்போது வரும் என்று பெண்களும் பெற்றோர்களும் பதைக்கும் நிலை இன்று.

சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில்... ஒரு புறம் இளைஞர்கள், இன்னொரு புறம் இளம் பெண்கள். பெண்களை ஆண்கள் காதல் என்ற பெயரில் விடாப்பிடியாகத் தொடர்வதும், தொந்தரவு செய்வதும் தவறாகுமா என்பதுதான் நடுவரின் கேள்வி. 'முதலில் பிடிக்கவில்லை என்று சொன்ன பெண்ணின் மனம் மாறி அந்த ஆணை ஏற்றுக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறதா?' என்று நடுவர் போட்ட கிடுக்கிப் பிடியில் மிரண்டு போய் ஓரிரு பெண்கள் 'இருக்கிறது' என்று தயங்கிச் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

காதல் என்ற பெயரில் துரத்துவதையும், தொடர்வதையும், தொல்லை கொடுப்பதையும் ஆதரித்து வக்காலத்து வாங்க திரைப்பாடல் ஆசிரியர் ஒருவரும் இயக்குநர் ஒருவரும் அங்கே வரவழைக்கப்பட்டிருந்தனர். முத்தாய்ப்பாக மூன்று இளம் தம்பதியர் வந்தனர். முதலில் காதலை ஏற்க மறுத்த பெண்ணே மனம் மாறித் தன்னைத் தொடர்ந்த ஆணை மணந்து கொண்ட சுயசரிதைகளைச் சொன்னார்கள்.

அங்கு அழைக்கப்பட்டு வந்தவர்கள் ஆசிட் தாக்குதலுக்கு இரையான பெண்களாகவோ அல்லது கொலை செய்யப்பட்ட பெண்களின் பெற்றோராகவோ இருந்திருந்தால், இப்படிப்பட்ட அபத்தமான கோணத்தில் அந்த வாதத்தை எடுத்துச் சென்றிருக்க முடியுமா?

காண்பதும், கேட்பதும், படிப்பதும் மக்களிடையே எத்தகைய விளைவுகளைத் தூண்டும் என்பதை உணர்ந்து ஊடகங்கள் பொறுப்போடு செயல்படுவது அவசியம். காதல் என்பது கலர் பார்ப்பதும், ஃபிகர் பார்ப்பதும், கலாய்ப்பதும், கடலை போடுவதும் என்று நினைப்பது விடலைப் பருவத்தின் விளையாட்டு. அது கொலை வரை நீடித்தால் அது மனநோய். அந்த நோய் வராமல் தடுக்கவும், வந்தால் எப்படி அதைக் குணப்படுத்துவது என்று ஆராய்வதும்தான் அவசரத் தேவை.

எல்லாவற்றுக்கும் மேலாக, குடும்பங்களில் இருந்து ஊடகங்கள்வரை பெண்ணுக்குத் தர வேண்டிய மரியாதை, பாதுகாப்பு குறித்து  ஆண்களிடம் சொல்லவேண்டியதே காலத்தின் தேவை.  காதல் என்ற பெயரில் தன்னைத் தொடரும் நபர் பற்றிப் பெண்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது, அதற்கான தொடர்பு எண்கள் என்ன, அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், புகார் அளிக்கும் பெண்ணின் விபரம் குறித்து காக்கப்படும் ரகசியம் உள்ளிட்டவற்றைப் பற்றி பேச வேண்டும். ஒருதலைக் காதல், காதல் தோல்வி என்றிருக்கும் ஆணை மனோதத்துவ ஆலோசனை மையங்களுக்கு அழைத்துச் செல்வது, அவர்களைக் கண்காணிப்பில் வைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கலாம். ஆபத்தான சூழலை எதிர்கொள்ளவது பற்றிய கற்பிக்கலாம்.

அமெரிக்காவில், ஆபத்தில் இருக்கும் ஒரு பெண் 911 என்ற எண்ணுக்கு போன் செய்தால் சைரன் கூவலுடன் மூன்று நிமிடங்களுக்குள் போலீஸூம் தீயணைக்கும் படையும் வந்துவிடும். பெண்கள் பாதுகாப்புக்கென அழைக்க நம் ஊரில் உள்ள எண்கள் பெயரளவில் மட்டும் இல்லாமல், உடனே வந்து உதவும் பறக்கும் படை தேவை.

ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும். கண்ணியமும், தீரமும் வாய்ந்த ஆண்கள் அணி திரண்ட ஸ்வாதிப் படை ஒன்று உருவாகவேண்டும். சுற்றியுள்ள பெண்களின் உடலுக்கும், உயிருக்கும் பாதுகாப்புத் தரும் மக்கள் படையாக அது செயல்பட்டால் சமூகத்தில் பரவி வரும் இந்தக் காதல்வெறி வைரஸின் தாக்குதலிலிருந்து பெண்கள் காப்பாற்றப்படலாம். அந்த வைரஸினால் புத்தி கலங்காமல் ஆண்களும் காப்பாற்றப்படலாம்.

 - சுஜாதா விஜயராகவன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close