Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேறுகாலத்தில் கணவன் கவனிக்க வேண்டியவை! செல்லமே செல்லம் #GoodParent

கடிதம் - 03

கணவன்

அன்புள்ள தம்பி உதயனுக்கு,

வெண்பாவின் பெயர் சூட்டும் விழா புகைப்படங்களைப் பார்த்தேன். மெத்த மகிழ்ச்சி. மகளை உடனே தூக்கி மடியில் வைத்து கொஞ்ச வேண்டும் என்ற ஆசை வெகுவாக எழுந்தது. ஆனால் ஊரில் இருந்து வரும்வரையில் காத்திருக்க வேண்டும்.

நம்முடைய சமூக அமைப்பிலேயே மாறுதல் வரவேண்டும். கணவன் என்பவன் தந்தையாகும் தருணம்  முதல் கருவுற்றிருக்கும் காலம். குழந்தை வளர்ப்பில் தந்தையின் பணி கருவுற்ற உடனே துவங்கிவிடுகின்றது. ஆனால் கர்ப்பகாலத்தில் பெருவாரியான நேரம் கணவன் மனைவியுடன் இருப்பதில்லை. குழந்தை பிறந்த பிறகும் சில மாதங்களேனும் பிரிந்து இருக்க நேரிடுகின்றது. நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம் ஆனால் அதனை வென்றெடுக்க வேண்டிய கடமை கணவன் – மனைவி இருவருக்குமே இருக்கின்றது.

பேறுகாலத்தில் மனைவியுடன் நேரம் செலவழித்தலில் இருந்து ஆரம்பிக்கின்றது. அந்த சமயம் மன ரீதியாக பல குழப்பங்களுக்கு ஆளாவார்கள், கணவனை சிறப்பாக மனைவியை புரிந்து கொண்டு நடக்க யாராலும் முடியாது. குழந்தையின் வளர்ச்சியினை இருவரும் கண்காணிக்கலாம். வாரா வாரம் என்ன உறுப்புகள் வளர்கின்றன என இருவரும் சேர்ந்து வாசிக்கலாம். மருத்துவரை சந்திக்கும்போது நிச்சயம் கணவன் – மனைவி இருவருமே ஒன்றாக செல்ல வேண்டும். பல மருத்துவர்கள் இதனை தற்சமயம் நிர்பந்திக்கின்றார்கள். ஏனெனில் கணவனுக்கு நிச்சயம் மனைவி உடல்நிலை, உள்ளே வளரும் குழந்தை பற்றிய நேரடி தகவல் மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும். ஏதேனும் சிக்கல் இருப்பின் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவன் பங்குபெற வேண்டும்.

பேறுகாலத்தில் தாய்க்கு உணவில் நாட்டம் இருக்காது. சத்தான உணவினை உட்கொள்ளுதல் அவசியமாகின்றது. தந்தை இதனை கண்காணிப்பது நல்லது. தேவையான உணவு, காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாங்கி வருவது அவசியமாகின்றது.

உள்ளே வளரும் தாய் 24 மணி நேரமும் குழந்தையுடன் பேச சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் தந்தைக்கு அவ்வளவு நேரம் கிடைக்காது. கிடைக்கும் நேரத்தில் பேச ஆரம்பிக்கலாம். பேசுவது கேட்குமா? என்றால் கேட்காது தான். ஆனால் சுமார் ஐந்து மாதத்தில் காது வளர்ந்திருக்கும். இது உணர்வு சம்பந்தப்பட்டது. பிறக்கும் முன்னரே ஒரு நெருக்கத்தினை குழந்தையுடன் ஏற்படுத்திக்கொள்வது. புத்தகம் வாசிக்கலாம், பாடல் பாடலாம், அன்றைய நிகழ்வுகளைப் பற்றி பேசலாம், பிறந்து வளர்ந்துவுடன் எங்கே எல்லாம் போகலாம் என எது வேண்டுமானாலும் பேசலாம்.

பேறுகாலத்தில் தாய்க்கு குழப்பங்களுடன் நிறைய பயங்களும் இருக்கும். எப்படி பிறக்கும், அந்த சமயத்தில் வலி, உள்ளே என்ன நடக்கின்றது என பல கேள்விகள் இருக்கும். இதனை முதலில் தந்தை காதுகொடுத்து கேட்பது முக்கியம். அடுத்த கட்டமாக ஒரு நம்பிக்கையை விதைக்க வேண்டும். மருத்துவர் அல்லது ஏற்கெனவே குழந்தை பெற்ற தம்பதியினருடன் உரையாடல் இதனை பெருமளவு சரி செய்யும். பேறு காலம் முழுக்க கணவன் மனைவியுடன் தொடர்ச்சியான உரையாடலில் இருக்க வேண்டும்.

இந்த சமயத்தில் அவர்களை உற்சாகத்தில் வைத்திருப்பதும் அவசியம். அவர்களுடைய உற்ற தோழியை/தோழனை வீட்டுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம், குட்டி பயணங்களுக்கு ஏற்பாடு செய்யலாம் (ஐந்து மாதங்களுக்கு பிறகு), ஒரு சினிமா, ஒரு இசை நிகழ்ச்சி, ஒரு கடல் பார்த்தல் என இனிமையான இடத்துக்கு அழைத்துச்செல்லலாம்.
தினசரி வாழ்வில் மனைவிக்கு உதவுவதைவிட சற்றே அதிகமாக இந்த காலத்தில் உதவ வேண்டும். வீட்டு வேலைகளாகட்டும், வெளி வேலைகளாகட்டும் முன்பைவிட கொஞ்சம் அதிகம் கரம் நீட்டுதல் அவசியம். சமைக்கவே வராது என்றாலும் உங்கள் கரங்களால் சாப்பிடும்போது அது நிச்சயம் மனைவிக்கு கூடுதல் சந்தோஷமே.

இத்தனை செய்வது எதற்காக? தன் சக மனுஷியை மகிழ்வாக வைத்திருப்பதற்காகவும் (இதுவே வாழ்நாள் பழக்கமாவும் மாற உள்ளிருந்தே ஒருவர் வேலை செய்கின்றார் என்பதை நினைவில் கொள்க), வெளிவர இருக்கும் அந்த ஸ்பெஷல் வி.ஐ.பி உற்சாகமாக வளரவும் தான்.

பேறு காலத்தில் தந்தையின் காதாபாத்திரம் இத்தனை செய்ய வேண்டி இருக்கு. ஆனால், கணவன் தன் மனைவியை அவரின் தாய் வீட்டுக்கு அனுப்பி வைப்பது இதனை தட்டிக்கழிக்கும் முயற்சியா என்றும் யோசிக்க வேண்டி இருக்கு.

ஆமாம் வெண்பா அழும்போது எதற்காக அழுகின்றாள் என கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டாயா?

அன்புடன்
விழியன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement