Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் இப்படி மாறினால் குழந்தைகளுக்கு உங்களைப் பிடிக்கும்! #GoodParent

குழந்தைகளுக்கு

குழந்தைகள் உலகம் மகிழ்ச்சியானது. அவர்களின் ராஜ்ஜியத்தில், ராஜா, மந்திரி, ஜோக்கர் எல்லாமே அவர்கள்தான். குழந்தைகளுக்கு கற்பனை உலகத்துக்குள் சிறகடித்துப் பறப்பது மிகவும் எளிது. அவர்களிடம்  ஏமாற்று, பொய், பித்தலாட்டம், சூது, வன்முறை போன்ற கயமைகள் கிடையாது. ஆனால், பெரியவர்கள் ஆனதும் எல்லோரும் அப்படி இருப்பதில்லை. வேலைப் பளு, பொருளாதார நெருக்கடிகள், உறவுகளில் ஒட்டாத நிலை என ஒவ்வொருவருக்கும் ஒரு சூழல் மலைப்பாம்பைப் போல கழுத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும். ஆனாலும், அப்படியே இருந்துவிடுவதும் நல்லதல்ல. நீங்கள் கொஞ்சமாவது உங்கள் குழந்தைகளின் மனம்போல மாற வேண்டியது அவசியம். எப்போதும் குழந்தைகளைப்போல மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

முதலில், குழந்தையை சந்தோஷமாக இருக்க விடுவது நல்லது. அப்போதுதான் பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்க முடியும். எப்படியென்றால், குழந்தைகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அதன் பாதிப்பு அவர்களை விட பெற்றோர்களையே அதிகம் தாக்கும். உடலளவிலும் மனதளவிலும் குழந்தை பாதுகாப்புக் கவசம் நீங்களே.

குழந்தை சின்னச்சின்ன விஷயங்களைப் பார்த்துக் குதூகலிக்கும். பட்டம் பறப்பதையும் வானத்தில் விமானம் பறந்து செல்வதையும் பார்த்து அவர்கள் அளப்பறிய ஆனந்தம் அடைவார்கள். குயில் கூவுவதையும், இரு சேவல்கள் சண்டைபோடுவதையும் பார்த்து குதூகலிப்பார்கள். அதை நீங்கள் காதில் விழாததுபோல கேட்டு, 'சேவல்னா சண்டை போடத்தான் செய்யும்' என்று முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சொல்லாதீர்கள். சேவல் சண்டை போடுவது உங்களுக்குத்தான் பழைய விஷயம். ஆனால், உங்கள் குழந்தைக்கோ முதன்முறையாகப் பார்க்கும் காட்சி. அவன் கண்டுகொண்ட உண்மையைத் தயவுசெய்து மறுக்காதீர்கள். இங்கே, உங்கள் குழந்தை ஒரு கண்டுபிடிப்பாளனாக இருக்கிறான் என்பதையும் நீங்கள் அங்கீகரிக்கத் தவறிவிடும்போது, அவன் அதை யாரிடம் சொல்லி பெருமைப்பட முடியும்? 'சண்டைபோடும் இந்தச் சேவலும் கூவும் தெரியுமா... இரவு விடியப்போகிறது என்பதை ஊருக்கே கேட்கும்படிக் கூவி, நம்மைத் தினமும் எழுப்புவது சேவல்கள்தான்' என்று சொல்லி சேவல் போல குரல் எழுப்பிக் காட்டுங்கள். குழந்தையையும் குரல் எழுப்பச் செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது, உங்கள் குழந்தையும் மகிழ்ந்திருப்பான், அந்த மகிழ்ச்சி உங்களையும் தொற்றிக்கொள்ளும். 

குழந்தைகளுடன் விளையாடுவது மிக முக்கியம். அதுவும் குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி விளையாடப் பழக வேண்டும். விளையாடும்போது, குழந்தை ஓடிச்சென்று ஒளிந்துகொள்ளும் இடம் உங்கள் பார்வையில் தெரியும்படியாக இருக்கும். குழந்தையை, நீங்கள் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிப்பதாக பாவனைசெய்து அவர்களைக் கண்டுபிடிப்பதையே குழந்தை விரும்பும். எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதாகச் சொல்லி, கையை மட்டும் தூக்கி உதவுமாறு சொன்னால், கூடுதல் சந்தோஷத்துடன் குழந்தைகள் விளையாட்டை ரசிப்பார்கள். இந்தமாதிரி மாறும் நிலையில் மாறாமலிருப்பது சந்தோஷம் தரும்.

உங்கள் மன அழுத்தத்தை வேறு வடிவங்களில் காட்டாமல், என்ன நடந்ததோ அதை ஏற்றுக்கொண்டு, அதற்குக் காரணமானவர்களை மன்னிக்கும் குணத்தைப் பெறுவதே உயர்ந்த குணம். ஏதோவொரு வேகத்தில் குழந்தையை பெரியவர்கள் தண்டித்துவிட்டாலும் ஒரு சில நிமிடங்கள் அவர்களை மன்னிப்பதோடு, அதை மறந்துவிடவும் செய்கிறார்கள். அந்தக் குணத்தை குழந்தைகளிடம் கற்றுகொள்வது மட்டுமல்ல, அதை குழந்தைகளிடமும் பயன்படுத்த வேண்டும். மிகச்  சாதாரணமான தவறுகளுக்கு கடிந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். கையில் எடுத்துவரும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டால், உடனே திட்டவோ, அடிக்கவோ செய்யாமல் ஒரு துணியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்; குழந்தைக்கும் ஒரு துணியைத் தந்து இருவரும் பாட்டுப் பாடிக்கொண்டே துடையுங்கள். பிறகு, சிறிது நேரம் கழித்து 'நீ தண்ணீர் கொட்டியதால் இவ்வளவு நேரம் வேஸ்ட் ஆயிடுச்சு... இந்நேரத்தில் டி.வி-யில் கார்ட்டூன் பார்த்திருக்கலாம் இல்லையா" என்றால், புரிந்துகொள்வதோடு உங்களையும் பிடித்துப்போகும்.


நீங்கள், ஒரு வித்தியாசமாக உடை அணிந்து செல்லும்போது, பிறர் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ எனத் தயங்காதீர்கள். தைரியமும் நம்பிக்கையும் இருந்தால், இதுவரை செய்யாத புது விஷயங்களையும் சிறப்பாகச் செய்யமுடியும். நீங்கள், உங்கள் குழந்தைகளுடன் பர்ச்சேஸ் பண்ண கடைக்குச் சென்றால், இதை வாங்கலாம் அப்பா, இதை வாங்கலாம் அம்மா என ஆவல் மிகுதியாக எல்லாவற்றையும் எடுப்பார்கள். அது தவறொன்றுமில்லை. ஒவ்வொன்றையும் நிதானமாகப் பாருங்கள். ஒவ்வொன்றின் நிறம், விலை, அளவு இதுபற்றியெல்லாம் குழந்தைகளே சொல்லும்வரை காத்திருங்கள். கூறும் பதிலைப் பாராட்டுங்கள். வருடத்தில் நான்கைந்து முறைகளே ஜவுளிக்கடைகளுக்குச் செல்லப் போகிறீர்கள். அதனால் அவசரம் காட்ட வேண்டாம். ஒரு கட்டத்தில் அவர்களே சோர்வாகிவிடுவார்கள். நீங்கள் அதுவரை இந்த விளையாட்டைத் தொடருங்கள். குழந்தைகள் ஜவுளிக்கடையில் நுழையும்போது இருந்த மகிழ்ச்சியோடு வெளியே வரும்போதும் இருப்பார்கள்.

குழந்தைகள் எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்கான பதிலையும் தேடிக்கொண்டே இருப்பார்கள். அதற்காக குழந்தைகளிடம் வெறுப்பைக் காட்டாதீர்கள். நன்றாக கவனித்தீர்கள் என்றால் அதில் ஒரு உண்மை, ஆச்சர்யம் இருக்கும். இதுநாள் வரை நீங்கள் அதுபற்றி யோசித்திருக்கவே மாட்டீர்கள். அப்படி ஏதேனும் நிகழ்ச்சி நடந்தால் அதைக் கொண்டாடுங்கள். வீட்டுக்கு வரும் விருந்தினரிடம் உங்கள் குழந்தைதான் அதை கற்றுக்கொடுத்ததாக சொல்லுங்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றிய பல கற்பனை எண்ணத்துடன் இருங்கள். பிஸ்கட் மலை, சாக்லேட் ஆறு, ஐஸ்கிரீம் வீடு எனப் பலவிதமாகக் கற்பனை செய்யும் உங்கள் குழந்தையைப் போல இருக்கட்டும். முதலில் சின்னச்சின்ன  விஷயத்திலிருந்து தொடங்குங்கள். உங்கள் குழந்தையின் பிறந்தநாளை எப்படி ஜாலியாகக் கொண்டாடலாம் என கற்பனை செய்யுங்கள். அதற்கு, உங்கள் குழந்தைகளிடமே ஐடியா கேளுங்கள்... அதில் சாத்தியமுள்ள விஷயங்களை அவசியம் செய்யுங்கள். குழந்தைகளின் நலன் குறித்த அக்கரையும் முக்கியம். குழந்தைகளுக்கு உங்களைப் பிடிப்பதோடு உங்களுக்கே உங்களைப் பிடித்துப்போகும். எப்போதும் மன அழுத்தம், டென்ஷன் உங்களை நெருங்காது!
 

-கே.ஆர்.ராஜமாணிக்கம் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement