Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வீட்டில் சும்மாத்தான் இருக்கிறேன்' இனிமேல் இப்படிச் சொல்லாதீர்கள் இல்லத்தரசிகளே!

இல்லத்தரசி

பெண்களை குடும்பப் பெண், வேலைக்குச் செல்லும் பெண் என்று இரண்டு வர்க்கங்களாகவே சமூகம் பிரித்துச் சொல்லி பழக்கப்பட்டுவிட்டது. குடும்பப் பெண் என்ற வார்த்தையின் மேல் உள்ள சர்ச்சை வேறு விஷயம். இல்லத்தரசிகள் இதுகுறித்த உரையாடலைத் தொடங்க வேண்டியது அவசியம்.

என் தோழி போனில் அழுதுகொண்டே, 'எப்போதும், வீட்டில் சும்மாதானே இருக்க? காசு சம்பாதிச்சு பாரு... அப்போதான் அதன் அருமை தெரியும்' என்று கணவர் குத்திக்காட்டுவதாகக் கூறினார்.

இன்னொரு தோழியின் கதை வேறு விதம். கணவன் வெளிநாட்டில் இருக்க, இவர் குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். எப்போது பேசினாலும் ஒரே புலம்பல். கணவரின் நிர்பந்தத்தால் வேலையை விட்டவர். 'என் கெரியர் போச்சு... வீட்டில் சும்மா இருக்கேன்...' என்று சுயபச்சாதாபம் கொள்வார்.

இன்னொரு தோழி காதல் திருமணம் செய்துகொண்டவர். நல்ல படிப்பாளி. அவர் கணவரும் இவரும் ஒரே வகுப்பு. அவர்களின் துறையில் இடமாற்றம் சர்வ சாதரணமாக நடக்கும். ஒரு கட்டத்தில் இருவரும் வேலைக்குச் செல்ல முடியாத சந்தர்ப்பத்தில், தோழி தன் கெரியரை விட்டுக்கொடுத்து இன்று மிக வலிமையான குடும்ப வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் ஒரு முறைகூட அவர், 'நான் வீட்டில் சும்மாதான் இருக்கேன்' என்றோ, அல்லது அவர் கணவர் 'உன் பைசா என் பைசா' என்று பிரித்துப் பேசியதோ இல்லை. மிக தன்னம்பிக்கையோடு, 'ஆம்... நான் ஹோம்மேக்கர்' என்று பெருமையுடனும், 'நான்  நட்புகளை, உறவுகளை பேணிக்காப்பதில் சிறந்த நிபுணர்' என்று கம்பீரமாகவும் சொல்வார்.

இன்னொரு நண்பர் அவர் சமூக சிந்தனைகள் அதிகம் கொண்டவர். அவரின், மனைவிக்கு விருப்பமான துறையில் மேலே வர வேண்டும் என மனதார விரும்பியவர். ஆனால் அவர்களின் ஒரே குழந்தை சிறப்பு கவனம் கொள்ளவேண்டிய குழந்தை. நாள் முழவதும், கண் விடாமல், இரவு பகல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் மனைவி தான் வீட்டில் இருப்பதாக முடிவெடுத்தார்.. ஆனாலும் நிதி பற்றாக்குறையை சமாளிக்கு வேலைக்கு செல்ல வேண்டியதாயிற்று.

நாளை என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில், ஒரு பெண் எந்த வயதிலும் வேலைக்குச் செல்லத் தகுதியுடனும் தயாராகவும் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. பெண் சம்பாதிக்காமல் இல்லத்தரசியாக இருந்து, ஆண் வருமானத்தில் சாப்பிடுவதில் எப்படி பச்சாதாபம் கொள்ளக்கூடாதோ, அதுபோல ஆண் சில சமயம் சரியாக சம்பாதிக்க இயலாமல் போகும்போது, அவரை பெண் இகழ்வதும் கூடவே கூடாது. இருவரும் சேர்ந்து முடிவெடுப்பதுதான் குடும்பம்.

'இந்தியப் பெண்கள் பொருளாதார ரீதியாக வளர வேண்டும்' என்று சொல்லும் சூழலில், வீட்டில் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் பெண்களை எப்படி ஆதரிப்பது? முரண் அல்லவா?' என்று கேள்விகள் எழலாம். சீனா, பொதுகிச்சன் வைத்து முன்னேறிய பெண்கள் சமூகம் கொண்ட நாடு. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்ததால்தான் அந்நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது. நம் இந்தியப் பெண்களுக்கும் சமையல் அறையில் இருந்து விடுதலை வேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக பெண்கள் வேலைவிடுத்து வீட்டில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. எப்படி கடவுள் நம்பிக்கை, மதச்சார்பு, நம்பிக்கைகள் தனிமனித விஷயமோ, குடும்பத்தில் ஒரு பெண் அல்லது ஆண் வேலைக்குச் செல்வதும், வீட்டில் இருப்பதும் அவரின், அந்தக் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம். முக்கியமாக அடுத்தவரின் தலையீடு இல்லாமல் வீட்டில் இருக்க முடிவெடுக்கும்போது, அதில் குறைபட்டுக்கொள்ளவோ, சம்பாதிக்க முடியவில்லை என்று சுய பச்சாதாபம் கொள்ளவோ ஏதுமில்லை. சந்தோஷமாக, 'ஆம் நான் வீட்டை நிர்வகிக்கிறேன்' என்று ஒரு மேலாண்மை நிர்வாகியின் பெருமிதத்தோடு நம்மை வெளிபடுத்துவது மிக முக்கியம்.

டிவி நிகழ்ச்சிகளில் கவனித்திருப்போம். 'வீட்டில் சும்மாதான் இருக்கேன்' என்பார்கள் பெண்கள். நாம் என்னவாக நினைகிறோமோ அதுவாகவே ஆவோம். 'சும்மாதான் இருக்கிறேன்' என்று ஒரு பெண் சொல்லும்போது, அவர் தன் சுயமதிப்பை மனதளவில் இழக்கும்போது, அடுத்தவர்களையும் தன் மீது அதே பார்வையே பதிய வைக்கிறார். முக்கியமாக, குழந்தைகளுக்கு அதை மனதில் பதிய வைக்கிறார். அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் அம்மாவை சிறிது குறைவாக மதிப்பிடுவது மட்டுமல்லாமல், 'எங்கம்மா சும்மாதான் இருக்காங்க, அப்பாதான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க. அதனால் வீட்டின் அதிகாரம் முழுக்க அப்பா கையில்தான்' என்பதுபோல் யோசிக்கலாம்.

ஆளுமைத் திறன் உள்ள சில பெண்களால் 'இல்லத்தரசி' என்ற பெரும் பொறுப்பின் மேன்மை உணர்ந்து, குழந்தை வளர்ப்பையும் செம்மையாகச் செய்ய முடியும். ஆனால் பல பெண்கள் ஒரு கட்டத்தில், அம்மா பேச்சை கேட்காத பிள்ளைகளை வளர்த்தவர்களாக ஆகிவிடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு 'டேக் இட் கிரான்டட்' அம்மா ஆக ஆகிவிடுகிறாள். 'எதுவா இருந்தாலும் அப்பாவைத்தான் கேக்கணும்' என்று தன் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்கும் பெண்கள், குடும்பத்தில் தன் ஆளுமையை, தன் பங்கை, முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள்.

நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களில் மிக அதிகமானோர், மன அழுத்தத்துக்கு ஆளாகி விடுகிறார்கள். சொல்ல முடியாமல் அழுந்தி, அழுந்தி... அவர்களில் நான்கில் ஒரு பெண் மனநிலை மேம்பட சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள். இது இன்னும் மோசமானால், பெண்கள் பேசுவது எல்லாம் அர்த்தம் இல்லாதது என்ற எண்ணம் சமூகத்தில் மிக அழுத்தமாக பதியவைக்கப்படும். பெண்கள் அந்தக் குற்றச்சாட்டில் இருந்து வெளியே வரமுடியாத சூழலாக அது மாறிவிடும் சாத்தியம் அதிகம்.

வீட்டை நிர்வாகம் செய்யும் ஓர் இல்லத்தரசி, ஒரு ஐ.டி ஊழியரைவிட அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறாள். பல வீடுகளில் வயதானவரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு, வெளிவேலைகள், வீட்டு வேலைகள் அனைத்தையும் பரபரவென்று முடித்துவிட்டு சிறிது நேரம் அவள் அமர்ந்திருக்கும் நேரம்கூட... 'இவளுக்கென்ன ஜாலியா 'தெய்வம் தந்த வீடு' பார்த்துக்கிட்டு வீட்ல ஜம்முன்னு இருக்கா' என்றே பார்க்கப்படுகிறது.

சில பெண்கள் நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் வீட்டில் சரியான அங்கீகாரம் கிடைக்காது. சிறு பாராட்டுகள்கூட வராது. ஆனாலும் அவர்கள் தன் கடமைகளை செய்துகொண்டே இருப்பார்கள். இதே பணிக்குச் செல்லும் பெண் என்றால், அலுவலகத்தில் அவளுக்கு என்று ஒரு வட்டம், துறை சார்ந்த, ஆர்வம் சார்ந்த நண்பர்கள், வெளிப்பழக்கங்கள் என்று இருக்கும். ஆனால், வீட்டில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் தங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் மட்டுமே நட்பு பாராட்ட முடியும். தங்கள் தனிப்பட்ட வாழ்கையை நிறைய விட்டுக்கொடுத்து, அந்த தியாகத்துக்கான அங்கீகாரமும் இல்லாமல், பொருளாதாரத்திலும் சுதந்திரம் இல்லாத நேரத்தில், பெணகள் மனம் இன்னும் பாதிக்கப்படும்.

இன்னொரு பக்கம், பாராட்டுகளை எதிர்பார்க்கும் பெண் தன் சுயவலிமையை இழக்கிறாள். எனவே எதையும் எதிர்பார்க்காமல் சந்தோஷமாக இருக்க வேண்டிய கட்டாயமும் அவளுக்கு இருக்கிறது.

இந்தியாவில் இன்று அனைத்துப் பெண்களும் வேலைக்குச் செல்ல, டிமானிட்டைஸிங் போல ஒரே நாளில் முடிவெடுத்துவிட்டால், நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் பெருகும். திருட்டு, கொலை, கொள்ளை என்று நிம்மதியற்ற சூழல் உருவாகும். எந்த மாற்றமும் சிறிது சிறிதாக நிகழ்வது நல்லது. வீட்டில் உள்ள பெண்களும் சமூக பொருளாதாரத்துக்கு தங்கள் பங்கை செய்து வருகிறார்கள் என்பதுதான் மறுக்க முடியா உண்மை.

சிக்கனம், ஒருவர் வருமானத்தில் மகிழ்சியாக இருப்பது, தன்னிறைவில் மகிழ்வாக திளைத்து இருப்பது என்று பெண்கள் திருப்தியுற நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன. கணவன், மனைவி இருவரும் சம்பாதிக்கும் சூழலில், கன்ஸ்யூமரிஸம் அதிகமாகும். அது உற்பத்தித் துறைக்கு நல்லது. ஆனால் சுற்றுச்சூழல் என்று வரும்போது உற்பத்திகள் பெருகுவது பூமிக்கு நல்லதல்ல. எனவே, வீட்டை நிர்வகிக்கும் பெண்கள் தங்களை அறியாமலேயே சுற்றுச்சூழலைக் காக்கிறார்கள். இது பாசிட்டிவ் சைடு.

கிராம தன்னிறைவு வாழ்வில் ஆண், பெண் வேலைக்குச் செல்வது, குடும்பப் பெண், வீட்டில் சும்மா இருப்பது என்ற பதங்கள் இல்லவே இல்லை. வயல் வேலைக்கு கணவன், மனைவி இருவரும் செல்வார்கள் பெரும்பாலும். அதேபோல நம் முந்தைய தலைமுறைகளில் 'நான் சம்பாதிக்கிறேன்', 'என் பணம்' என்ற பிரச்னைகளோ, கேள்விகளோ எழுந்ததில்லை. வீட்டுக்குப் பணம் வந்துவிட்டால் பெரும்பாலும் மனைவியே நிர்வகிப்பார். ஆனால் தற்காலத்தில் நிலைமை வேறு. குடும்ப அமைப்பு முதற்கொண்டு அனைத்தும் நிச்சயமற்ற சூழல். பெண் தன் கெரியரை இழந்தால் வரும் பிரச்னைகள் அதிகம்.

பெண்கள் வீட்டில் இருந்துகொண்டே, எந்த நிமிடமும் மீண்டும் தான் வேலைக்குச் செல்ல தன்னைத் தயார்படுத்திக்கொள்ளல் என்பது வேறு. அந்தத் திறனை பெண்கள் என்றும் இழக்கவே கூடாது. ஆனால் வீட்டில் இருப்பதால் நம் ஆளுமைத் திறனை இழக்க வேண்டும் என்பதில்லை. அந்தக் காலத்து பல பாட்டிகளை கவனித்து இருந்தால் தெரியும். அவ்வளவு ஆளுமையோடு வளம் வந்து இருப்பார்கள். இங்கு பலர் குழம்புவது இதில்தான்... சமூக மாற்றத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்களுடன் தங்களை ஒப்பிட்டு சிலர் தாழ்வு மனப்பான்மை கொள்வது குடும்பத்துக்கு அவ்வளவு நல்லதில்லை.

கணவன், மனைவி இணைந்து செலுத்தும்போதே குடும்பத் தேர் தடங்கலின்றிச் செல்லும், குடும்ப அமைப்பு வெற்றி பெறும். குடும்ப அமைப்புகள் சேர்ந்ததே சமூகம். சமூகம் சேர்ந்ததே நாடு. நாடுகள் சேர்ந்ததே உலகம். உலகம் நன்றாக இருக்க, வீட்டில் ஒவ்வொருவரும் மிக முக்கியம். அதற்கு ஒவ்வொரு பெண்ணின் உடல் நலம், மன நலம் அவசியம்.

நாம் நம்மை உணர்ந்து மிகப் பெருமையுடன் சொல்ல வேண்டிய வார்த்தைகள்... 'ஆம் நான் வீட்டை நிர்வகிக்கிறேன். அதில் மகிழ்ச்சியாக இருக்கேன். என்னால் எந்த நிலையிலும் மகிழ்வாக இருக்க முடியும். ஆளுமைத் திறனுடன் வாழ முடியும்!'

இவ்ளோதான். இம்புட்டேதான்.

இதில் ஆணின் பங்கும் மிக முக்கியம். நல்ல நிம்மதியான குடும்ப வாழ்கைக்காகதான் அந்தக் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து, மனைவி வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து இருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில், 'நான் சம்பாதிக்கிறேன், காசு அருமை சம்பாதிச்சாதான் தெரியும்', 'என்னுடைய காசு, சும்மா வீட்டில் இருக்கே', 'கெரியர் பற்றி உனக்கென்ன தெரியும், நாலு இடத்துல பழகத் தெரியுமா?' என்றெல்லாம் வீட்டை நிர்வகிக்கும் பெண்ணை வார்த்தை ஆயுதங்களால் தாக்கும் கணவர்கள், அந்தப் பெண்களைத் தாழ்வு மனப்பான்மையில் வைத்துவிடுகிறார்கள். அவர்களும் கழிவிரக்கத்தில் காலத்தை ஓட்டிவிடுகிறார்கள்.

நம் நாட்டில், 'இந்த வேலை தாழ்வானது, இது நல்லது' என்ற தவறான கற்பிதங்கள் அதிகம் உள்ளன. அவற்றை ஒவ்வொரு தளையாக உடைக்க வேண்டும். அதில் ஒரு பதம், 'வீட்டில் சும்மாதான் இருக்கேன்'.

குடும்பத்தில் உள்ளவர்கள் உடல் மட்டுமின்றி மனதளவிலும் நோயில்லாமல் இருந்தால்தான், அது ஆரோக்கியமாக குடும்பம். அதற்கு கணவன் மனைவி இருவரும் மனதளவில் மிக ஆரோக்கியமாக, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். இல்லத்தரசியின் பணி எளிதனாதல்ல.

மகிழ்வாய் இருக்க, எந்த விஷயத்திலும் சிறு புரிதல் தேவையாக இருக்கிறது. இனி சொல்லுவோம் மகிழ்வாக... 'நான் என் குடும்பத்தை நிர்வகிக்கிறேன்' என்று; 'என் மனைவி சிறந்த குடும்ப நிர்வாகி' என்று.

கடைசியாக 'கபாலி' ஸ்டைலில் சொல்வதென்றால்...

'நான் நிர்வாகிடா..!'

- கிருத்திகா தரன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close