பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு பெரிய காதுகள் வேண்டும்! செல்லமே செல்லம் #GoodParenting

குழந்தை


அன்புள்ள தோழன் யுவராஜிற்கு,
நலம். வீட்டில் அர்ச்சனா மற்றும் குழந்தை மோகித் எப்படி இருக்கிறார்கள்?!

மோகித் பள்ளி செல்லத் துவங்கியதில் இருந்து நிறைய மாறுதல்கள் நிகழ்வதாக சுனிதா சொல்லக்கேட்டேன். அது இயல்பானது தான். மூன்று வருடங்கள் தாய்-தந்தையின் அரவணைப்பிலேயே இருந்துவிட்டு, புதிய உலகுக்கு செல்லும்போது ஏற்படும் மாறுதல்கள்தான் அவை. இது ஒருவகையில் குழந்தை வளர்ப்புக்கு தயார்படுத்தும் குறியீடு. மாறுதல்களை ஏற்றுக்கொள்ளப் பழக்கும் முதல்படி.

நீங்கள் கற்பனையிலும் யோசித்துப் பார்க்க முடியாதபடி குழந்தைகள் புதிய சூழலை உள்வாங்கிக்கொள்வார்கள். அதனை அவர்கள் எப்படி தகவமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை, அவர்கள் மொழி மூலமே நாம் அறியமுடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம்... கொஞ்சம் காதுகளைப் பெரியதாக வளர்த்துக்கொள்வதே.

குழந்தைகள் ரகசியங்களையும் பயங்களையும் தங்களுக்குள்ளே வைத்திருக்கத் தெரியாதவர்கள்.  தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் அவர்கள் அதனை நம்மிடம் சேர்த்துவிடுவார்கள். நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். அதில் பல சமயம் உண்மை மறைக்கப்படலாம். ஓர்  உரையாடல் மட்டுமே அவர்கள் உள்ளக்கிடக்கினை வெளிக்கொணறும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தங்கள் வகுப்பில் பார்க்கும் உலகினை தாங்களாகவே விவரிப்பார்கள். அவர்களின் நண்பர்கள், வகுப்பில் நடைபெறும் உரையாடல்கள், சீண்டல்கள், ஆசிரியரின் 'all of you keep quiet' கட்டளைகள், அவர்கள் கழிவறைக்குச் அழைத்துச் செல்லப்படும் முறை, பள்ளியில் இருக்கும் உதவியாளர்கள், ஆசிரியர்களின் ஆடை, மதிய உணவு, யார் என்ன நிறத்தில் பென்சில் பாக்ஸ் வைத்திருக்கின்றார்கள், யாருடைய அப்பா என்ன செய்கின்றார்கள், யார் அவர்களை பள்ளியில் விடுவது... என அவர்களாகவே எல்லாவற்றையும் சொல்வார்கள். அதையெல்லாம் கேட்க, நாம் காது கொடுக்க வேண்டும். ஆம்... காதுகள் வழியே அவர்களின் உலகினை நாம் தரிசிக்கலாம்.

உன் மூன்று வயது மோகித்தின் மழலை சொல்வளம் எவ்வளவு இருக்கும்? எத்தனை தமிழ் வார்த்தைகள் அவனுக்குத் தெரியும்? நீ கணிப்பதைவிட, நாம் நினைத்தும் பார்க்காத அளவுக்கு அவன் உள்வாங்கி இருப்பான். நாம் தினசரி பேசும் வார்த்தைகளை குழந்தைகள்  கேட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். சரியான சந்தர்ப்பத்தில் அதனை அவர்கள் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்துவார்கள். அவர்கள் பெரிய காதுகளை பிறந்தது முதலே வளர்க்கத்துவங்கி விட்டார்கள். நாம்தான் காதால் கேட்பதை, வயது ஏற ஏற குறைத்துக்கொண்டு விட்டோம்.

என் மகள் குழலியின் வகுப்பறைக்குச் செல்லும் சௌகர்யம் எனக்கு இருந்தது. தினசரி பள்ளியில் அவளுடைய வகுப்பறையில் விடுவது வழக்கம். அப்படி ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும்போது குழந்தைகள் ஏக குஷியில் இருந்தார்கள்.

'இவதான் ஹரிணி அங்கிள்!'
'அஷிதாலட்சுமிக்கு ஜுரம் அங்கிள்... வரல...'
'நேத்து டெய்லியும் நானு லீவு!'
'இன்னைக்கு நைட்டு நான் ஊருக்குப் போறேன். நேத்தும் போனேன்!'
'குர்ஷாத் இங்கதான் உக்காருவான்!'
'நேத்து சாயந்திரம் நான் கோயிலுக்குப் போனேன்!'
'இவ இவங்க சித்திகூட வண்டியில வந்தா..!'

ஓயாமல் அவர்கள் பேசத் துடிக்கின்றார்கள். அவர்களின் உலகினை உள்வாங்க பெற்றோராகிய நாம்தான் தயாராக இல்லை. எல்லா குழந்தைகளும் நம்மிடம் எதிர்பார்ப்பது நிச்சயம் சற்றே பெரிய காதுகளைத்தான். குழந்தைகள் பேசத்துவங்கியதும் நாம் மெல்ல மெல்ல நம் காதுகளை வளர்க்கத்துவங்க வேண்டும்.

அன்புடன்,

விழியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!