Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதியோர் இல்லங்களைக் குறைக்க...என்ன செய்யலாம்?

முதியோர்

க்கள் தொகை அதிகமாக அதிகமாக, கால மாற்றங்கள் புதிதாக ஏற்பட, தனிக்குடித்தனங்களின் எண்ணிக்கையும், முதியோர் இல்லங்களும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. கணவன், மனைவி, குழந்தை என்ற குறுகிய வட்டத்துக்குள் குடும்பம் என்ற அளப்பரிய மதிப்பு சுருங்கிவிடுகிறது. 

'காலையில சீக்கிரம் எழுந்திருச்சு, வீட்டு வேலைகளைச் செய்து, பிள்ளைங்களை ஸ்கூலுக்கும், கணவரை ஆஃபீஸுக்கும் அனுப்பிட்டு, அடுத்தடுத்த வீட்டு வேலைகளை கவனிச்சுக்கிட்டே, வீட்ல இருக்குற வயசான மாமனார், மாமியாரையும் கவனிக்குறது ரொம்ப சிரமமா இருக்கு. செலவுகளும் அதிகமாயிடுது. இதனால எல்லாம்தான் அவங்களை எங்களோட வெச்சிக்கிறது கஷ்டம்' என்பது பல குடும்பத் தலைவர், குடும்பத் தலைவிகளின் கருத்தாக இருக்கிறது.

கூட்டுக் குடும்பங்களில் 10-க்கும் அதிகமான பெரியவர்கள் இருந்த காலம் மலையேறி, இன்று சொந்த அம்மா, அப்பாவையே பலரும் பாரமாக நினைக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. அதனால் அவர்கள் சொந்த ஊர், தனி வீடு, முதியோர் இல்லம் என்று நம்மிடம் இருந்து தனித்தே வைக்கப்படுகிறார்கள். ஆனாலும்  தோழிகளே... நாம் மனது வைத்தால் நிச்சயம் இந்த நிலையைத் தவிர்க்கலாம். குறிப்பாக, பெருகி வரும் முதியோர் இல்லங்களை குறைப்பதற்கான முயற்சியை நாம் நம் வீட்டிலிருந்து துவங்குவோமே! இதற்கு முக்கியத் தேவை, மடி நிறையக் காசு இல்லை; மனம் நிறைய அன்பு! கூடவே கொஞ்சம் சகிப்புத்தன்மையும், அதிகப் பொறுமையும். 

முதியோர்

'என் மகன்', 'என் பொண்ணு' என்று மடியில் சுமந்து, மனதில் நிறுத்தி, நமக்காகவே தங்கள் சுக, துக்கங்களைக் கூடத் தள்ளிவைத்துவிட்டு, நமக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்து, நம் மகிழ்வுகளை ரசித்து, 'அப்பாடா...' என ஓய்ந்து அமரும்போதுதான், தங்களுக்கு வயதாகிவிட்டதை உணர்ந்து மேலும் ஒடுங்கிப் போகிறார்கள் நம் பெற்றோர்.

பெற்றோரின் மொத்த சக்தியையும் பெற்று, வளர்ந்து, வாழ்வில் ஒரு நிலைக்கு வந்த பின், அவர்களை வேண்டாத பொருளாக கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பது நியாயமில்லையே? குறிப்பாக மருமகன்களே, மருமகள்களே... மாமனாரும் மாமியாரும் நமக்கு வேண்டாதவர்களாக இருந்தால், இன்று நாம் கணவர்/மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ முடிந்திருக்காது அல்லவா? இந்த அருமையான குடும்பமும், வாழ்க்கையும் நமக்கு எட்டாக் கனியாகி இருந்திருக்கும் அல்லவா? 

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். நம் வயதான மாமனார் - மாமியார், அப்பா - அம்மா ஆகியோரை நாம் பாரமாக நினைத்து, முதியோர் இல்லத்தில் சேர்க்க நினைத்தால், இதுபோன்ற நிலை நாளைக்கு நமக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது அல்லவா? நம் வயதின் இயலாமையை சுட்டிக்காட்டி பிற்காலங்களில் நம் பிள்ளைகள் நம்மை புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டால்..? 

நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது அல்லவா!

'அய்யய்யோ... நான் என் பிள்ளைகளை அப்படியெல்லாம் வளர்க்கல' என்கிறீர்களா? ஆனாலும், அடுத்தடுத்தகட்ட தலைமுறை மாற்றங்களும், கால மாற்றங்களும் நாம் நினைத்துப் பார்த்திராத வகையில் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.

முதியோர்

'சரி... அப்படியானால் என் மாமனார்-மாமியார், நான், என் கணவர் ஆகியோர் எப்படி ஓர் இணக்கமான சூழலில் ஒரே வீட்டில் வாழ்வது?' என்ற கேள்விதான் உடனே எழும்.

மிகவும் சுலபமானது. ஒரு பெண் நினைத்தால் ஒரு குடும்பத்தில் எவ்வித பிரச்னை ஏற்பட்டாலும், அதனை சுலபமாகத் தீர்க்க முடியும். அவர்கள் அறியாமையில் ஏதாவது தப்பே செய்தாலும்கூட, முடிந்தவரையில் அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக எடுத்துச் சொல்லலாம். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. அதை உடனுக்குடன் சரிசெய்து, மறந்து, அடிக்கடி அவர்கள் செய்யும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தால் முதுமையும் அவர்களுக்கு குழந்தைப் பருவம்போலவே மாறிவிடும். இது கணவன் - மனைவி இருவரின் கூட்டு முயற்சியால்தான் வெற்றிபெறும். அதிலும் குடும்பத் தலைவிகளின் பொறுப்பு சற்றே அதிகமாக இருந்தால், நல்ல மாற்றங்களை உடனடியாக எட்டலாம். மாமனார் - மாமியாரின் முதுமைக்கு நம்மால் முடிந்த ஆறுதலும், அரவணைப்பும் கொடுத்தால், எல்லோருடைய வாழ்க்கையும் இனிமையாகக் கழியும். 

மாமனார், மாமியாரை வீட்டில் வைத்துக்கொண்டால், குடும்பச் செலவீனங்கள் அதிகமாகும் என்று பலரும் சொல்வதுண்டு. இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக, பெரும்பாலான பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். அப்போதுதான் செலவீனங்களைச் சமாளிக்க முடியும். அப்படியான சூழலில், மாமனார்-மாமியார் உடன் இணைந்த கூட்டுக்குடும்பத்தில், ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த வீட்டு வேலைகளைப் பிரித்துச் செய்யலாம். அப்போது சுமை என்ற வார்த்தையே பயன்பாட்டுக்கு வராது. குறிப்பாக, தாத்தா - பாட்டியின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள், அவர்களின் வாயிலாக பல நல்ல கருத்துகளை கற்று ஆரோக்கியமான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான சூழலில் வளர முடியும்.

முதியோர்

வயதானவர்களும் குழந்தைகளைப் போன்றவர்கள்தான். அவர்களை பாசத்துடன் அணுகும்போது, ஒருவேளை அவர்கள் முதலில் நம்மை புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டிருந்தால், நாட்கள் செல்லச் செல்ல நிச்சயம் புரிந்துகொள்வார்கள். முதியோர் இல்லம் பற்றி, நம் வீட்டில் யோசிக்க வேண்டிய நிலை வராது. குடும்பத்தலைவிகளுடன், குடும்பத் தலைவர்களும் சேர்ந்துதான் இந்த நிலையை உருவாக்க வேண்டும். அதில், பெண்களின் பங்கு அதிகமாவே இருக்க வேண்டும். 

ஒரு குடும்பத்துல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். அந்தக் குடும்பத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட தாத்தா, பாட்டியைப் பற்றி, 'அவங்க எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாங்க தெரியுமா?' என்று குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதைக் கேட்டு வளரும் பிள்ளைகள், பிற்காலத்தில் உங்களையும் கைவிட மாட்டார்கள். உங்கள் பிள்ளைகள் உங்கள் செயல்களை கவனித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதை மறக்காதீர்கள். 

முதுமையை மதிப்போம் தோழிகளே! முதியோர் இல்லங்களுக்கு மூடுவிழா நடத்த மனது வைப்போம்

- சுபா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close