பிறப்பில் இருந்து விடுதலை பெறுவதே, சந்தோஷம்! - இதுவரை வெளிவராத ஜெயலலிதா பேட்டி

ஜெயலிலதா

சிமி கேர்வல், 'ரான்டவுஸ் (Rendevous)' என்ற தன் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக 1999-ம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த நேர்காணலின் எடிட் செய்யப்படாத தொகுதியை நேற்று இரவு வெளியிட்டுள்ளார்.

''ஜெயா ஜி உடனான எனது நேர்காணல், ஒரு மணி நேரத்துக்கும் மேல் சென்றது. ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நேரச் சுருக்கம் காரணமாக, அதை 46 நிமிடங்களுக்குள் எடிட் செய்ய வேண்டியதாயிற்று. மிக அழகான அவரின் பல வார்த்தைகளை, நிகழ்சியில் இருந்து வெளியே எடுத்ததில் எனக்கு மிகவும் வருத்தம். ஆனால், மக்கள் அதை முழுமையாகக் காண விரும்புகிறேன்.

ஜெயா ஜி அவர் எண்ணங்களையும் வாழ்க்கையையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்தார். அவருக்கான நினைவஞ்சலியாக என் நேர்காணலின் முழு பகுதியையும் நான் மக்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்" என்ற குறிப்புடன், சிமி வெளியிட்டுள்ள வீடியோவில், பார்க்கப்படாத அந்த 24 நிமிட ஃபுட்டேஜ் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வைரலாகி கொண்டிருக்கிறது இந்த வீடியோ.

ஜெயலலிதா ஜெயலலிதாவின் கேட்கப்படாத அந்த வார்த்தைகளின் ஹைலட் தொகுப்பு இங்கே படிக்கலாம்.

"மகிழ்சியின் அளவுகோல் இங்கு யாரிடமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.''

''நான் கர்மாவை நம்புகிறேன்.''

''ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமை என்று ஒன்று இருக்கும்.''

''சிறு வயதில் நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ள பெண். மேடை வெளிச்சத்தை எப்போதும் நான் சௌகர்யமாக உணர்ந்ததில்லை. மேடையில் ஏறுவதையும், ஒரு கூட்டத்தின் முன் நடனமாடுவதையும் நான் வெறுத்திருக்கிறேன்.

''என் அம்மா மட்டுமே என் உலகமாக இருந்தார். அம்மாவின் இறப்புக்குப் பின், அந்த இழப்பை எம்.ஜி.ஆர். என் வாழ்க்கையில் ஈடுசெய்தார். அவர் எனக்கு அனைத்துமாக இருந்தார். அவர் ஒரு வகையில், என் வாழ்க்கையின் பொறுப்பை எடுத்துக்கொண்டார்."

 

 

''என் சினிமா வாழ்க்கை...  வெல்... என் காலகட்டத்தின் நம்பர் 1 நடிகையாக நான் இருந்தேன்.''

''ஆரம்பகாலத்தில், அனுமதி மறுக்கப்பட்ட, வாழவே பாதுகாப்பில்லாத ஓர் அரசியல் தளத்தில் நான் வைக்கப்பட்டேன். பழைய ஆங்கிலத் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்... பழிவாங்கப்பட வேண்டியவர்கள் பகைமை சூழ்ந்த பாழ் கட்டடங்களில் வைக்கப்பட்டிருப்பார்கள். அப்படியான ஒரு மிடீவல் கால சிறைச்சாலை போலதான் என்  சூழலும் இருந்தது."

''கட்டுப்பாடுகள் களையப்பட்ட, சுதந்திரம் மிகுந்த நாடாகச் சொல்லப்படும் அமெரிக்காவில்கூட, கண்ணுக்கு முன் தெரியக்கூடிய எதிர்காலத்தில்கூட ஒரு பெண் ஜனாதிபதியாக வரும் சூழலை உங்களால் பார்க்கமுடிகிறதா? குறைந்தபட்சம், துணை ஜனாதிபதியாகக் கூட இன்னும் அங்கு ஒரு பெண்ணால் தலைமையைக் கைப்பற்ற முடியவில்லை. ஆணாதிக்கம் என்பது அமெரிக்க சமூகத்திலும் உள்ளது. எனில், இந்திய அரசியலில் எந்தளவுக்கு ஆணாதிக்கத்தின் வேர்விட்டிருக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.''

''சசிகலா கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிறையில் கழிக்க நேர்ந்தது. அவர் மிகவும் சிரமங்கள் அனுபவிக்க நேரிட்டது. என்னுடன் பிறந்த சகோதரி யாரும் இல்லை. அப்படி ஒரு சகோதரியாக சகிகலா எனக்குக் கிடைத்தார்.''

''இப்போது அச்சம் என்பது என் வாழ்க்கையில் இல்லை.''

''ஒருவர் சந்தோஷத்தை அடையும் ஒரே வழியாக நான் நம்புவது, மோட்சத்தை அடைவதால் மட்டுமே. அதாவது, பிறப்பில் இருந்து விடுதலை பெறுவது!"

- தீபிகா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!