Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வாழ வைச்ச விவசாயம்தான், கழுத்தையும் நெறிக்குது!' - விவசாயக் குடும்பத் தலைவியின் கண்ணீர்க் கதை #SaveFarmers

விவசாயம் கைக்கொடுக்காததால், விளைநிலத்தில் சோகத்தில் படுத்திருக்கும் விவசாயக் குடும்பத் தலைவி சித்ரா

''ர்...புர்னு மோட்டார் பைக்குல ராஜாவாட்டம் டாம்பீகமா போய்வந்த என் புருஷன், இப்போ ஓட்டை சைக்கிள்ல கூலி வேலைக்கு போறார். பத்து ஏக்கரா இருந்த நிலம், இப்போ கோவணத்துணி மாதிரி ஒன்றரை ஏக்கரா சுருங்கிட்டு... விவசாயம் செய்ய முடியாம, கழுத்தை நெருக்கிற கடன்ல இருந்து மீள முடியாம கண்ணீர்ல தத்தளிச்சுகிட்டு இருக்கோம். அரசாங்கம் போடுற இலவச புழுத்த அரிசி மட்டும் கிடைக்காம போயிருந்தா, எங்க குடும்பம் எப்பவோ நாண்டுகிட்டு செத்திருக்கும்" என்று கண்களில் உதிர தயாராக இருக்கும் கண்ணீருக்கு அணை போட்டபடி ஆயாசப்படுகிறார் சித்ரா.

தமிழகத்தில் கொத்து கொத்தாக செத்து விழும் விவசாயிகள் தற்கொலை; இறப்புகளின் எண்ணிக்கை நூறை தாண்டிவிட்டன. பசுமை போர்த்தியபடி காட்சித் தர வேண்டிய பல்லாயிரகக்ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கருகிபோன நட்ட நடவோடு பாலையாக காட்சியளிக்கின்றன. அங்கே அந்த விவசாயி தற்கொலை, இங்கே இந்த விவசாயி வரப்பிலேயே விழுந்து மாரடைப்பில் இறந்தார் என்று தினம் தினம் ஒரு இழவு செய்தி கேட்டு நம் நெஞ்சம் பதைபதைத்து போகிறது. 

ஊருக்கே சோறு போடும் விவசாயிகள் லட்சக்கணக்கில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல், உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி விவசாயிகளும், விவசாயமும் வரலாறு காணாத வறட்சியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றுதான் பாடினார் வள்ளலார். ஆனால், அவரை பலபடி தாண்டி,'வாடிய பயிரை கண்டபோதே செத்து மடிந்தேன்' என்று உயிர்விடும் விவசாயிகளின் குடும்பம் என்ன நிர்கதியில் இருக்கும்?. இன்னொருபக்கம், வாழ்வா, சாவா என்று மனம் புழுங்கியப்படி இருக்கும் விவசாயிகளின் மனைவிகள் படும்பாடு எப்படி இருக்கும்?. இந்த ஒற்றைக் கேள்வியின் உயிர் சாட்சியாகதான் சித்ரா இருக்கிறார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள சௌந்தராபுரம்தான் சித்ராவுக்கு சொந்த ஊர். 

தன் இடுபாடுகளுடன் கூடிய வீட்டின் முன் அமர்ந்திருக்கும் விவசாயி சித்ரா

ஆயிரம் துக்கங்களை நெஞ்சில் தேக்கி, அதை வார்த்தைகளில் அதிகம் தெரியாதபடி மறைத்து பேசலானார்.

"எனக்கு வயசு நாப்பத்தஞ்சு. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இங்க வாக்கப்பட்டு வந்தப்ப, பத்து ஏக்கர் நிலமிருந்துச்சு. மாட்டு வண்டி, மோட்டார் பைக், ஐம்பது மாடுகள், நூத்துக்கணக்கான ஆடுகள், கோழின்னு செழிப்பா இருந்துச்சு குடும்பம். பக்கத்துல உள்ள நாங்காஞ்சி ஆத்துல தண்ணீர் கரைபுரண்டு ஓடும். அதை வச்சு முப்போகம் விவசாயம் பண்ணுவோம். இருபது பேரை பண்ணை ஆளா வச்சு வேலை வாங்குற அளவுக்கு நிலைமை நல்லா இருந்துச்சு. வீடு முழுக்க எப்போதும் நெல், மிளகாய், சோளம், கம்புன்னு தானியங்களா நிறைஞ்சு கிடக்கும். என் புருஷன் கையில லட்சக்கணக்குல பணம் புழங்கும். நான் செருவாடு காசாவே ஆயிரக்கணக்கில் பானைகளில் ஒளிச்சு வைச்சிருப்பேன். 

இந்த நிலைமையில், எங்களுக்கு ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணுன்னு ஒரு பையனும், ஒரு பொண்ணும் பொறந்தாங்க. அவங்கள மத்த ஆட்கள் மாதிரி நல்லா படிக்கட்டுமேன்னு தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வச்சோம். அவங்க கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தோம். ஆனால், கடந்த அஞ்சு வருஷமா, நங்காஞ்சி ஆத்துல தண்ணீர் வர்றது குறைஞ்சுட்டு. இதனால், முப்போகம் இருபோகமாகி, இருபோகம் ஒருபோகமாகிட்டு. அந்த ஒருபோகத்தையும் அறுவடை செய்ய வயல் ஓரத்துல லட்சக்கணக்குல கடன் வாங்கி கிணறும், மின்சார மோட்டாரும் அமைச்சோம். ஆனால், இப்ப ரெண்டு வருஷமா அந்த கிணத்துலேயும் தண்ணீர் பாதாளத்துக்கு போய், போட்ட நெல் கருக ஆரம்பிச்சுச்சு.

சோகத்தில் படுத்திருக்கும் விவசாயக் குடும்பத் தலைவி சித்ரா

வெதைச்ச சோளம், கம்பு, தினையெல்லாம் கருகி ஏகப்பட்ட நஷ்டம். இரண்டரை லட்சம் வரை கடனாயிட்டு. அதுக்கு வட்டி கட்ட வீட்டுல இருந்த முப்பது பவுன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமா வித்தோம். அதுலயும் கடனுக்கு வட்டியே கட்ட முடியாம போக, அடுத்து என் புருஷன் கையில் புழங்குன பணம், என் செருவாட்டு சேமிப்பு பணம் எல்லாம் வட்டியே முழுங்கிட்டு. கடன் சுமை தாங்க முடியாததால தனியார் பள்ளியில் படிச்ச புள்ளைகளை அரசு பள்ளிகள்ல சேர்த்தோம்" என்றவர், "செத்த இருங்க தம்பி. கேஸ் கனெக்ஷன் இருந்தும், அத வாங்க காசில்லாம சும்மா வச்சுருக்கேன். விறகு அடுப்புல சோறு பொங்குது. அத சரி பண்ணிவிட்டு வந்துர்றேன்" என்றபடி வீட்டுக்கு முன்னே இருந்த அடுப்பில் இருந்த பொங்கிய சாதத்தை வடித்துவிட்டு, மறுபடியும் கவலைகளை இறக்கி வைக்கத் தொடங்கினார் சித்ரா. 

"இதுவரைக்கும் எட்டரை ஏக்கரை வித்துட்டோம். அப்படியும் கடன் அடையலை. இப்போ இரண்டு லட்சம் வரை கடன் இருக்கு. எந்நேரமும் கறி, கோழின்னு புள்ளைங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுவேன். அதுக்கும் வழியில்லாம, வெறும் சோறு சாப்பிட, நல்லது கெட்டதுகளுக்கு செலவுக்குப் பணம் சம்பாதிச்சுக் கொடுத்து, வீட்டுல நின்ன மாடு, ஆடுகள், கோழிகளை எல்லாம் ஒவ்வொண்ணா விக்க ஆரம்பிச்சோம். இப்போ, ஒரே ஒரு மாடும், பத்து ஆடுகள் மட்டுமே நிக்குது. 

நாங்க வாழ்ந்த மாடி வீட்டை சரி செய்ய முடியாம, அது இடிஞ்சு போக, மாட்டுக்கொட்டகையா இருந்த பழைய ஓட்டு கொட்டகையை வீடாக்கி, அதில் குடி வந்துட்டோம். என் புருஷன், 'நம்மை வாழ வச்ச விவசாயம் இப்படி குப்புறத் தள்ளிட்டே'ன்னு உள்ளுக்குள் மருகிப்போயிட்டார். அவரை தேத்தி, அவர் தவறான முடிவு எதுவும் எடுக்கக் கூடாதேன்னு வேண்டிக்கிட்டு, நான் கூலி வேலைக்கு வெளி ஆட்களோட வயல்களுக்கு போக ஆரம்பிச்சேன். அந்த சொற்ப வருமானத்தை வச்சும், அரசாங்கம் போடுற இலவச ரேஷன் அரிசியை வச்சும் இரண்டு வேளை கஞ்சி குடிக்கிறோம். பொன்னி அரிசியா சாப்பிட்ட பிள்ளைங்களுக்கு இந்த புழுத்த அரிசி சாப்பாடு ஆரம்பத்துல இறங்கலை. ஆனால், போகப் போக அதுக்கு பழகிட்டுங்க. 

 இந்த நிலைமையில்தான், போன வருஷம் என் பொண்ணு வயசுக்கு வந்தப்பவும் சரி, ஆறு மாசத்துக்கு முன்னாடி, என் மவனுக்கு பேரே தெரியாத கொடூர காய்ச்ச வந்தப்பவும் சரி... ஒத்த காசில்லாம நின்ன எங்க நெலம யாருக்கும் வரக்கூடாது சாமி. கடவுள் அருளால என் பையனை கவர்மென்டு ஆஸ்பத்திரியில சேர்த்து கொணப்படுத்திட்டேன்.

குடும்ப சூழலை பார்த்துட்டு, இருபது பேரை வச்சு வேலை வாங்கிட்டு இருந்த என் புருஷன் திண்டுக்கல் மாவட்டம், காசிப்பாளையத்தில் உள்ள டெக்ஸ்டைல்ஸ்க்கு தினக்கூலியாக வேலைக்கு போக ஆரம்பிச்சார். அப்படியும் குடும்ப பாரம் குறையலை. கடன் கடனாவே நின்னுச்சு. இதனாலேயே, என் புருஷனுக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை. ஆண்டாண்டு காலமா எங்க குடும்பத்துக்கு சோறு போட்ட நிலத்தை, மூழியா சும்மா போட மனசு வராமதான் விவசாயம் செஞ்சேன். ஆத்துல தண்ணீர் வராமலும், வானம் பேயாமல் ஏமாத்துனதுக்கும் அந்த வயல் என்ன பண்ணும்?. நிலம்ங்கிறது நம்பிக்கை. சம்சாரிகளுக்கு குல அடையாளம். அத தரிசா போட, என் மனசு ஒப்புக்கலை. எத்தனை இடர் வந்தாலும், வானமும், அரசும் விவசாயிகளை வஞ்சித்தாலும், நாங்க இருக்கிற கொஞ்ச நிலத்தையும் விக்க மாட்டோம். எங்களுக்கு இழப்பையே கொடுத்தாலும், அதுல வெள்ளாமை போட்டுக்கிட்டுதான் இருப்போம். ஏன்னா, எங்களை வீழ வச்சாலும், பழையபடி எங்களை வாழ வைக்கும்ங்கிற நம்பிக்கை மனசுல தெம்பா இருக்கு" என்று முடித்தார் உருக்கமாக!.

- துரை.வேம்பையன்,
       படங்கள்: செ.ராபர்ட்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement