Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'புடவைக் கடையில் சலிக்காமல் காத்திருப்பார்!' - கணவருக்காக உருகும் செளமியா அன்புமணி!

SOWMYA WITH HUSBAND ANBUMANI

பொதுவெளியில் அன்புமணி ராமதாஸ் கம்பீரமாக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு கவனமாக இருப்பவர். ஆனால், அவரின் உடை, உணவு, பேச்சு, செயல் என அத்தனைக்கு பின்னாலும் இருப்பவர் செளமியா அன்புமணி. அதை தெரிந்து கொள்ள செளமியாவிடம் பேசினோம்.

உணவு விஷயத்தில் அவர் சமர்த்து!

''காலையில் தொண்டர்கள் மற்றும் விருந்தினர்களுடன் வீட்டிற்கு வந்து விட்டால் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார். காலையில் என்னுடன் காபி மட்டுமே குடித்திருப்பார். 9 மணிக்கு மேல் ஆகிவிட்டால், அவர் சாப்பிடாமல் இருக்கிறார் என்கிற அலாரம் என்னுள் அடிக்கத் தொடங்கி விடும். வீட்டுக்குள் கையை பிசைந்து நடந்துகொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருப்பேன். அப்படியும் அவர் கவனிக்காவிட்டால், சற்று சத்தமான குரலில் 'சாப்பிட்டுவிட்டு மற்றதை கவனியுங்களேன்' என்பேன். எங்களுடைய வீட்டில் ராகி,கேழ்வரகு,கம்பு,சோளம் போன்றவற்றில் செய்த பாரம்பர்ய உணவுகள்தான் பெரும்பாலும் காலை டிபனாக இருக்கும். மதியம் அவர் வீட்டில் இருந்தால் குறைவாக சாதம், சாம்பார், ரசம், நிறைய பொரியல் மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்வார். ஒரே மாதிரியாக உணவு முறை போய் கொண்டிருந்தால், அவ்வப்போது மெனு லிஸ்டை மாற்றித் தருமாறு என்னிடம் கேட்பார். ஒரு நாள் காய்கறிகளுடனும், மறுநாள் மாமிசத்தையும் எடுத்துக் கொள்வார். அசைவத்தில் சிக்கன், மட்டன் அவருக்கு அதிகம் பிடிக்கும். பிரசார நாட்களில் தொண்டை வலியை போக்க கட்டாயம் கொள்ளு ரசம் வைத்துக் கொடுப்பேன்.

அவருக்கு எளிதில் நோய்கள் தாக்காது. அப்படியே தாக்கினாலும் மருத்துவர் என்பதற்காக உடனடியாக மருந்துகளோ, மாத்திரைகளோ எடுத்துக் கொள்ள மாட்டார். சளி, இருமல் போன்றவற்றுக்கு உணவிலேயே குணமாக்கச் சொல்லுவார். அப்போதெல்லாம் என்னுடைய சமையல் மருத்துவ குணம் நிரம்பியதாக இருக்கும். வெளிநாட்டுப் பயணத்தில் எல்லா நாட்டு உணவுகளையும், அது எப்படி பரிமாறப்படுகிறதோ, அப்படியே அப்பாவும், மகள்களும் சாப்பிடுவார்கள். நான் தான் திண்டாடிக் கொண்டிருப்பேன். அவருடைய உணவில் கீரை கட்டாயமாக இடம் பிடித்திருக்கும். எங்களுடைய தைலாபுரத் தோட்டத்தில் இருந்து அரிசி, காய்கறிகள் மற்றும் நாட்டுக்கோழி, வேர்க்கடலை போன்றவை வீட்டுக்கு வந்துவிடும். 

மகள்களுடன் செளமியா அன்புமணி

''அப்பாகிட்ட இருந்து காப்பாத்துங்கம்மா''!

காலையில் சரியாக ஆறு மணிக்கு எழுந்து விடுவார். அனைத்து பேப்பரையும் படித்துவிடுவார். பிறகு, தொண்டர்களை சந்தித்து விட்டு மாலையில் ஷட்டில் காக் விளையாடுவார். பல நேரம் வீட்டுக்கு வருவதற்கு 9 மணி கூட ஆகி விடும். வெளியூர் பயணத்தின் போது மலையேற்றம், ஓட்டப்பந்தயம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவார். நாங்க சென்றிருக்கும் நாட்டில் மாராத்தான் நடந்தால் உடனே தானும் கிளம்பி எங்களையும் கிளப்பி ஓட ஆயத்தப்படுத்துவார். 'அம்மா... அப்பாகிட்ட இருந்து எங்களை காப்பாத்துங்க'னு பொண்ணுங்க கெஞ்சுவாங்க. நானும், 'பிள்ளைகளுக்கு கால் வலிக்குதாம், நாங்க வரல. நீங்க போங்க' என்று சமாதானப்படுத்தி அனுப்பிவிடுவேன். அவருடைய எனர்ஜிக்கு முன்னால் எங்களால் ஈடுகட்ட முடியாது. அதேப் போல் விளையாட்டில் பெண்கள் குழந்தைகள், பெண்கள் டீமைதான் அதிகம் உற்சாகப்படுத்துவார். 'எவளோ கடுமையான சூழல்ல விளையாடுறாங்க பாரு" என்று அவர்களுக்காக கவலைப்பட்டாலும் உற்சாகப்படுத்துவதை விடமாட்டார்.

மீன் பிடிப்பதில் வல்லவர்!

அதேபோல், படகு சவாரியும் அவருக்கு விருப்பம். அயல்நாடுகளில் படகை எடுத்துக் கொண்டு தனியாளாக கிளம்பிவிடுவார். ஆனால், அவர் வரும் வரை எனக்குத்தான் உயிரே கையில் இருக்காது. உள்ளூர் கடலில் மீன் பிடிப்பது என்றால் அவருக்கு கொள்ளை விருப்பம். கடல் மீன்கள் ஆளை இழுத்துவிடும் என்றாலும் கேட்க மாட்டார். இதே போல ஒருநாள் அவர் மீன் பிடிக்கச் சென்று வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. எனக்குப் பயம். ஆனால் மாமியாரோ, அன்பு கொண்டு வரும் மீனைத் தான் சமைக்க போகிறேன் என்று காத்திருந்து அதுபடியே நடந்தது எல்லாம் தனிக்கதை.

 துணிக்கடையில் சலிக்காமல் காத்திருப்பார்!

அவருடைய உடை விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். அவரே தான் தேர்ந்தெடுப்பார். அது அவருக்கு அழகாகவும், பெர்பெக்டாகவும் இருக்கும். எங்களுடைய திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பில் அவர் ஷெர்வாணியும், நான் பட்டு புடவையும் அணிந்திருந்தேன். அன்று வந்தவர்கள் எல்லோரும் உங்கள் இருவர் உடையும் சூப்பர் என்றார்கள். நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் எடுத்த உடைகள் அவை. இன்று வரையும் உறவினர்கள் மத்தியில் பேசப்படும் புகைப்படங்களும் அவை தான்.

எங்களுடன் ஷாப்பிங் வரும்போது ஒருநாள் கூட அலுத்துக் கொள்ள மாட்டார். நாங்கள் எத்தனை மணி நேரம் எடுத்துக் கொண்டாலும், அதை அமைதியாக ரசித்துக் கொண்டே, இன்னும் எடுங்கள் என்று எங்களை உற்சாகப்படுத்துவார். பிள்ளைங்களுக்கு பார்த்துப் பார்த்துப் வாங்கிக்கொடுப்பார். எனவே அப்பா தன்னுடன் ஷாப்பிங் செல்லும்போதெல்லாம் வரவேண்டும் என்பார்கள். பத்து கடைகள் ஏறி இறங்கினாலும், கூலாக இருப்பார். அதனாலேயே அவர் வரவேண்டும் என்று விரும்புவார்கள் பிள்ளைகள். வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட, ஷாப்பிங் என்றாலே அன்பை கூப்பிடு என்பார்கள்.

உணர்வுகளுக்கு  மதிப்பளிக்க கூடியவர்!

என்னுடன் இருக்கும் நேரங்களில் மற்றதை யோசிக்கவோ, செய்யவோ மாட்டார். அவையெல்லாம் எனக்கான நேரங்கள். என் விருப்பங்களை அவருக்காகவும், அவருடைய விருப்பங்களை எனக்காகவும் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கைதான் எங்களுடையது.

'செளமியா' என்றழைக்கும் நேரங்கள் எல்லாம் காதல் தருணங்கள்!

'ஐ லவ் யூ' என்று சொல்லாமல் இத்தனை வருட தாம்பத்யம் நீடிக்குமா? என் மீதான அன்பை மிக அழகாக வெளிப்படுத்துவார். நாங்கள் பிரிந்திருக்கும் நேரங்களில் எல்லாம் தொலைபேசி ஒன்றே அவரது அன்பை பெற எனக்கு வசதியான தொடர்பாக இருக்கும். இப்போது வாட்ஸ்அப், வீடியோ கால் வந்துவிட்டது என்பதால் எங்கள் அன்பு அது மூலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'சௌமியா' என்று அவர் அழைத்தாலே அவை என் மீதான காதல் தருணங்களாக எடுத்துக் கொள்வேன். சில நேரம் முதலாளியம்மாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்பார். அவை, வெளியாட்களுக்கான வார்த்தை. எங்கள் இருவருக்குள்ளும் இதுவரை சண்டையே வந்ததில்லை. முரண் இருந்தால் கூட, விட்டுக் கொடுத்தலால் வாழ்கை இன்பமாக போய்கொண்டிருக்கிறது. எங்களை பார்க்கிறவர்கள் எல்லாம் 'நண்பர்கள்' போல் இருக்கிறீர்கள் என்பார்கள். பலசமயம் அவரிடம்  புதிதாக திருமணமானவர்களுக்கு அறிவுரை கொடுக்கலாமே என்று சொல்லியிருக்கிறேன். என்னை எப்போதும் தோழியாகவே நடத்துவார். அம்மாவின் மீது அன்பு கொண்ட பிள்ளைகள் தனக்கு வருபவர்களையும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்பதற்கு உதாரணம் இவர்தான்.

- கே.புவனேஸ்வரி

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close