Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கவனம்... குழந்தைக்குத் தொட்டிலால் இந்தக் காயங்கள் ஏற்படலாம்!

தொட்டிலில் குழந்தை
''ராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ
காத்தடிக்கும் திண்ணையிலே 
என் கண்ணனுக்குத் தொட்டில் கட்டி
காத்தசைய கலகலங்கும் 
என் மன்னனோட பொன்னூஞ்சல்
ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ" என குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறோம்.

தாலாட்டு, நம் தாய் மரபு.  காலப்போக்கில் அது வழக்கமிழந்து வந்தாலும், தொட்டிலில் குழந்தைகளைத் தூங்கவைக்கும் பழக்கம் இன்றும் தொன்றுதொட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக தொட்டிலில் தூங்கும் குழந்தைக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தொட்டில் காயங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து விளக்குகிறார் இயன் முறை மருத்துவர் ரம்யா. 

''குழந்தை தாயின் கருவில் இருக்கும்போது பனிக்குட நீரில் மிதக்கும். அந்தப் பெண் நடக்கும்போதும் அவள் உடல் அசைவின்போதும் ஒருவித ஊஞ்சல் ஆட்டத்தை உணரும். கருப்பையின் கதகதப்பும் இருட்டும் அதற்கு பாதுகாப்பைக் கொடுக்கும். பிரசவத்தின்போது திரவ மண்டலத்திலிருந்து காற்று மண்டலத்திற்கு வரும் குழந்தை நுரையீரலில் காற்றை நிரப்பிக்கொள்ளும் இயக்கத்தில்தான், பிறந்தவுடன் அழுகிறது. இது ஆரோக்யத்தின் முதல் மொழி. 

பிஞ்சுக் குழந்தையை பஞ்சு மெத்தையில் கிடத்தியும், தொட்டிலில் இட்டு ஆட்டியும் தூங்க வைக்கிறோம். எனினும் பஞ்சு மெத்தையை விட தொட்டிலே தாயின் கருவறையில் உணர்ந்த பாதுகாப்பை குழந்தைக்குத் தருகிறது. தொட்டிலை ஆட்டும்போது ஏற்படும் அசைவு, தாயின் உடலசைவை ஒத்து இருப்பதால் குழந்தையும் பயமின்றி உறங்கும். 

ஏன் தொட்டிலிடுகிறோம்? 

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு நல்ல தூக்கம் இருக்காது.  குழந்தையை அருகில் கிடத்தி புரண்டு படுக்கும்போது அதன் மேல் படுத்துவிடுவோமோ என்ற பயம் ஏற்படும். மேலும் குழந்தையை வெறும் கட்டிலிலோ, மெத்தையிலோ படுக்க வைக்கும்போது அயர்ந்து உறங்க முடியாமல், அசைவுகள் ஏற்படும்போதெல்லாம்  திடுக் திடுக் என்று விழித்து, சிணுங்கிக்கொண்டே இருக்கும். இதனால் குழந்தை பிறந்தவுடனேயே மருத்துவமனையில் உள்ள தொட்டிலில் படுக்க வைப்போம். தொட்டிலிடுதலை ஒரு விழாவாகவும் கொண்டாடுகிறோம். 

குழந்தை வளர வளர அதன் குறும்பு வளர்கிறது, தூங்கும் நேரம் குறைகிறது. தொட்டிலில் கிடத்தினால் எளிதாக ஆட்டவும், உறங்கியவுடன் நமது வேலைகளைச் செய்ய ஏதுவாகவும் இருப்பதால் தொட்டிலிடுவது வழக்கம். சில நேரங்களில் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும் தொட்டிலிடுகிறோம். 

தொட்டிலின் வகைகள்

பழங்காலத்தில் மரத்தினாலான, குறிப்பாக தேக்குமரத் தொட்டில் பிரபலம். குடும்பத்தின் பாரம்பர்யத்தையும் செல்வத்தையும் குறிக்கும் பொருளாகவும் இத்தொட்டில் விளங்கியது. வெப்பப் பகுதிகளில் பருத்தி துணியிலோ, வேட்டி, புடவையிலோ தொட்டில் கட்டுவர். பிரம்பு, மூங்கில் நாரைக் கொண்டும் தொட்டில் செய்யலாம். மருத்துவமனைகளில் இரும்புக் கம்பியினால் ஆன  தொட்டில் இருக்கும். 

இப்போது கடைகளில் பவுன்சிங் சேர், ராக்கி சேர், ஸ்பிரிங் தொட்டில் என பலவகையான தொட்டில்கள் விற்பனைக்கு உள்ளன. இவற்றில் பல சௌகர்யங்களும் உள்ளன. கைக்குழந்தையாக இருக்கும்போது உறங்க வைக்கும் தொட்டிலாகவும் வளர வளர உணவு ஊட்ட சேர் மாடலிலும் அவற்றைப் பயன்படுத்தலாம். பணியிடங்களுக்குக் கூடவே எடுத்துச் செல்ல, விமானத்தில் எடுத்துச் செல்ல என பல வகையான தொட்டில்கள் உள்ளன. பேபி கேரியர் எனப்படும் ஒரு வகை தொட்டில், குழந்தை உட்கார்ந்தவாறு ஊஞ்சலாடவும், குழந்தையை உடலோடு ஒட்டிக் கட்டியபடி தாய் வாக்கிங் செல்லவும் உதவும். 

 

ஹைடெக் தொட்டில்கள், குழந்தையின்  சிறு அசைவை கூட பதிவு செய்யும். அந்த மானிட்டரை நாம் இருக்கும் அறைகளில் வைத்து கண்காணித்துக் கொள்ளலாம். குழந்தை அசைந்தால் ஒரு பீப் சத்தம் கொடுக்கும். கொசு போன்ற பூச்சிகள் தொட்டில் மேலோ குழந்தை மேலோ அமர்ந்தால் சென்சார் சத்தம் கொடுக்க ஆரம்பிக்கும். இப்படி பல தொட்டில்கள் இருந்தாலும், கிராமப்புறங்களில் மரத்தில் புடவையால் தொட்டில் கட்டி குழந்தையை காற்றாட உறங்க வைத்து விட்டு தாய் வயல் வேலை செய்ய, தொட்டில் காற்றில் அசையும் அழகு தனிதான்.

தொட்டில் காயங்கள்

தொட்டிலிடப்படும் குழந்தையை இடைவெளிவிட்டு கண்காணித்தவாறு இருப்பது நல்லது. தொட்டில் காயங்கள் பெரும்பாலும் மூன்று வகைப்படும். கழுத்து மாட்டிக் கொண்டு இறுகுதல், கீழே தவறி விழுதல் மற்றும் கழுத்து தசையில் ஏற்படும் தொடர்ச்சியான அழுத்தம் அல்லது காயம்.
    
தொட்டிலில் கிடத்தப்படும் குழந்தை விழித்தவுடன் கீழே இறங்க முற்படும்போது கைகால்களோ அல்லது கழுத்து பகுதியோ மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. இது பெரும்பாலும் துணியினாலான தூளியினால் ஏற்படும். தொட்டில் ஆடியபடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இறுக்குவதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பு நேரிடலாம். சில சமயங்களில் மூத்த குழந்தை இளைய குழந்தைக்கு விளையாட்டு காட்ட எண்ணி தொட்டிலை சுற்றும்போது மூச்சடைப்பு, இறப்பு ஏற்படலாம்.    

கீழே விழுந்து அடிபடுதல் என்பது ஒரு வகை. தொட்டிலை மிக உயரமாகக் கட்டும்போதும், குழந்தை கீழே இறங்க எத்தனிக்கும்போதும் விழுந்து விடலாம். தலை குப்புற விழுந்தால் குழந்தையின் பிஞ்சு மண்டை ஓடு முற்றாமல் இருப்பதால் தலையில் அடிபட்டு மூளைக்கு அதிர்வு செல்லும். மேலும் கை, கால் வீக்கம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.    
    
தொட்டிலை ஒரே சீராக ஆட்டாமல் வேகமாக ஆட்டுவதாலும், குழந்தையை தொட்டிலில் பக்கவாட்டில் ஆட்டுவதாலும் குழந்தையின் கழுத்து தசைகளில் உள்காயம் ஏற்படலாம். மேலும் குழந்தைகள் தொட்டிலில் குப்புற படுக்கும்போது, குறிப்பாக தலை நிற்காத குழந்தைகளுக்கு ‘சடன் இன்ஃபேன்ட் டெத் சிண்ட்ரோம்(SIDS - Sudden Infant Death Syndrome)’ என்றழைக்கப்படும் மூச்சுத் திணறலுடன் கூடிய மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொட்டிலில் குழந்தையை உறங்க வைக்கும்போது அதிக கவனம் அவசியம்.

அமெரிக்காவில் 2004 முதல் 2008 வரை நடந்த ஆய்வில் ஆண்டொன்றுக்கு 9500 குழந்தைகள் தொட்டில் காயங்களால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 83% தவறி கீழே விழுவதால் ஏற்படுகிறதாம். சராசரியாக நாளொன்றுக்கு 26 குழந்தைகள் தொட்டிலில் இருந்து விழுவது வாடிக்கையாகியுள்ளது. ஆண்டொன்றுக்கு 100 குழந்தைகள் கைக்குழந்தை பருவத்திலோ, தவழும் பருவத்திலோ பாதுகாப்பற்ற தூங்கும் முறைகளால் இறப்பது அதிர்ச்சி ரகம். நம் நாட்டில் இது போன்ற ஆய்வுகள் இல்லையெனினும் பாதுகாப்பு முறைகளில் அதிகக் குறைபாடு உள்ளன. பாதுகாப்பு அம்சங்களின் குறைபாட்டால் அமெரிக்காவில் 11 மில்லியன் தொட்டில்கள் திரும்பப் பெறப்பட்டன.
    
என்ன செய்ய வேண்டும்?

தொட்டில் காயங்கள், மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உடனடியாகக் குழந்தையைத் தொட்டிலில் இருந்து தூக்கி சுவாசம் தடைபடாமல் வருகிறதா என்று பார்க்க வேண்டும். சுவாசம் தடைபடும் பட்சத்தில், முதலுதவியாக வாய்வழியே செயற்கை சுவாசம் அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டும். காயம், வீக்கம், எலும்பு முறிவு ஆகியவற்றை உறுதி செய்த பின் மிகக் குறைந்த அளவு ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.
    
தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தை செல்வத்தை நம் கவனக்குறைவால் இது போன்ற காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நமது தலையாய கடமை." குழந்தைகளுடன் இருக்கும் போது இதையெல்லாம் கடைபிடிக்கலாம்

- யாழ் ஸ்ரீதேவி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close