Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நலம் நலம் அறிய ஆவல்! - கடிதம் எழுதிய ஞாபகம் வருகிறதா?!

கடிதம்


ன்புள்ள அத்தை, மாமாவுக்கு, அகிலா எழுதும் கடிதம். இங்கு யாவரும் நலம். உங்கள் அனைவரின் நலம் அறிய ஆவல். இந்த வருடம் பொங்கல் திருவிழாவுக்கு நீங்கள் அனைவரும் இங்கு வர வேண்டும் என்பது எங்கள் அனைவரின் அவா. தாத்தாவுக்கு எப்போதும் சங்கரியின் ஞாபகம்தான். சங்கரிக்காக மாவுச் சாமான்களை வாங்கி வைத்திருக்கிறார். அண்ணன் இந்த வருடம் பள்ளியில் நடந்த கபடிப் போட்டியில் முதல் பரிசை வாங்கி இருக்கிறான். நான் ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கி இருக்கிறேன். நம் வீட்டில் இருந்த செவலைப் பசு மூன்றாவதாக கன்று போட்டுள்ளது என்பதை அப்பா உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். பாட்டிக்கு முன்பைவிட இப்போது உடல்நலம் தேறிவருகிறது.

அம்மா மிளகாய்ப்பொடியை அரைத்து வைத்திருக்கிறார். கூடவே மாங்காய் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய்களையும் போட்டு வைத்திருக்கிறார். ஆதலால் வத்தல், வடகம் என எதையும் கடையில் வாங்க வேண்டாம் என அம்மா சொல்லியிருக்கிறார்.  இந்த வருடம் பொங்கலுக்கு சங்கரியுடன் சேர்ந்து  புதுப்பாவாடை அணிந்து கொண்டு எல்லை அம்மன் கோயிலில் நடக்கும் மஞ்சுவிரட்டுக்கு போகலாம் என நினைக்கிறேன். இங்கே பக்கத்துவீட்டில் இருக்கும் என் தோழிகளான சுகந்தியும் பரிமளாவும் சங்கரியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். அனைவருமே உங்கள் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.
 

இப்படிக்கு,
அகிலா

ப்படியான கடிதங்களை  இன்றைய தலைமுறை குழந்தைகள் எழுதுவது அபூர்வத்திலும் அபூர்வம்தான். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் , ஸ்கைப் என வளர்ச்சி அடைந்துவிட்ட தகவல் தொடர்பால் கடிதம் எழுதுவதே இந்தக் காலத்தில் காணாமல் போய்விட்ட ஒன்றாகிவிட்டது. கடிதம் எழுதுவது வெறும் எழுத்துப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் மட்டும் அல்ல. அது உணர்வுகளின், உறவுகளின் அன்பின் பரிமாற்றமாக இருந்தது. கடிதங்கள் எழுதுவதும் அதை காலம் காலமாக பத்திரப்படுத்துவதும், பின்னொரு காலத்தில் அந்தக் கடிதங்களைப் பிரித்துப் படித்து மலரும் நினைவுகளைப் புரட்டிப் பார்ப்பதும் அழிக்க முடியாத வரங்களாய் கிடைக்கப் பெற்றவை.

சென்ற தலைமுறையினருக்கு காதலின் பெரும் பாலமாக அமைந்தவை கடிதங்களே. தபால்காரனின் வருகையை எதிர்ப்பார்க்க வைத்து, ஒரு கடிதம் அனுப்பப்பட்டு, அதற்கு பதில் கடிதம் வரும்வரை அந்த ஒற்றை கடிதத்துக்காக தபால்காரரின் மிதிவண்டி மணிச்சத்தம் தெருவீதியில் எப்போது ஒலிக்கும் என கால்கடுக்கக் காத்திருக்க வைத்தவை இந்தக் கடிதங்களே.

பத்தாம் வகுப்புக்கு முன்பு வரை, தேர்வில் வெற்றி பெற்றதை பள்ளியில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களே உறுதி செய்தன. முகம் காணாத பேனா நட்பு பல நல்ல நண்பர்களின் அறிமுகத்தை, அவர்களிடத்தில் இருந்த பரந்த நட்பை, ஆளுமையை மற்றவர்களிடமும் பகிரச் செய்தது. கடிதங்களில் கொட்டப்படும் உணர்வுப் பூர்வமான எழுத்துகள் எழுத்தாற்றலுக்கும் கையெழுத்துக்கும் பலம் சேர்த்தன.

இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப உலகம் அப்படி இல்லை. அதன்போக்கு அதிவேகமானது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட நினைக்கும் மாய உலகம் இது. ஒரு தகவல் பரிமாறப்பட்ட அடுத்த நொடிக்குள் அதற்கான பின்னூட்டங்களை உடனடியாக தனதாக்கிக் கொள்கிறது. கடிதம் கொடுத்த காத்திருப்பில் இருந்த நிதானமும், பொறுமையும் இல்லாமல் போனதால் 'யார் முந்தி' என்னும் இணையச் சண்டைகளில் நேரத்தை விரையமாக்கிக் கொண்டு சுயத்தையும் தொலைக்கிறோம்.

காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மைதான். கால மாற்றத்திற்கேற்ப இணைய வழி எழுத்தை தட்டித் தீர்த்து கொண்டிருக்கிறோம் என்பதும் இங்கே மறுக்க முடியாத உண்மை. உங்கள் பெயரை ஒருமுறை கடற்கரை மணலின் மீதோ அல்லது ஒரு தாளிலோ எழுதிப்பாருங்கள். அதே பெயரை தட்டச்சு செய்து பாருங்கள். இரண்டும் அந்த பெயருக்கு ஒரே பொருள் கொடுத்தாலும். பேனாவின் வழி வந்த எழுத்தால் உங்கள் மனம் வேறு ஓர் உணர்வை உணர்ந்திருப்பதை நிச்சயம் உங்களால் மறக்க முடியாது.

கால மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கட்டும். தவறில்லை. நம் காலத்தில் நம்மை உணர்வுப்பூர்வமாக மீட்டெடுத்துக் கொண்டிருந்த கடிதங்களை குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையேனும் உங்களுக்குப் பிடித்தவருக்கு எழுதுங்கள். அல்லது உங்கள் குழந்தைகளை உங்களுக்காவது எழுதச் சொல்லுங்கள்.

நலம் நலமறிய ஆவல்!

- பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close