Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தீக்கு காரணம் எங்கள் பிள்ளைகள் அல்ல!' - ஓர் அம்மாவின் குரல் #Marinabeach

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட பிள்ளைகள்

ம்பிக்கையுடன் அமர்ந்த, நல்வழியில் சென்ற எங்கள் பிள்ளைகள் இன்று ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து விரட்டப்படுகிறார்கள். எது நடக்கக்கூடாது என்று தமிழ் மனங்கள் தவித்துக்கொண்டிருந்தனவோ, அது இன்று நடந்துகொண்டிருக்கிறது. மனதின் வலியை மொழியில் சொல்லும் முன் நடுங்குகின்றன விரல்கள்.

சமையல், வீடு, வாசல் என்றிருந்த தமிழ் அம்மாதான் நான். ஜல்லிக்கட்டு இல்லை என்றபோது, வருத்தமாக  இருந்தது. ஆனால், மெரினாவிலும், மதுரையிலும், அலங்காநல்லூரிலும் என தமிழகம் எங்கும் சாரை சாரையாக எங்கள் பிள்ளைகள் அமர்ந்தபோது, என் வருத்தத்துக்கும் சமூகக் கோப வடிவம் கிடைத்தது. 'டேய் இன்னைக்கு நானும் வர்றேன்டா' என்று எங்கள் பிள்ளைகளுடன் கிளம்பினேன். மூன்றாவது நாள் போராட்டத்தில் முழு நாளும் உடன் இருந்தேன்.

'நம்ம புள்ளைங்களா இது' என்று நான் ஆச்சர்யப்படும் அளவுக்கு போராட்டக் களத்தில் அத்தனை ஒழுங்குடனும், பொறுப்புடன் இருந்தார்கள் எங்கள் பிள்ளைகள். உணவு கொடுத்தார்கள். குப்பை பொறுக்கினார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு களம் உள்ளே செல்ல, வெளியேற அரணாகி நின்று வழி அமைத்துக்கொடுத்தார்கள். வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, பனியில் உறைந்து கிடந்தார்கள். ஆறு நாட்களாக அமைதியின் வழியின் போராடிய எங்கள் பிள்ளைகளை, இன்று அதிகாரம் வெறிகொண்டு அடித்து விரட்டுகிறது. என்ன நியாயம் ஆள்பவர்களே?

'அம்மா... வெளிய போக வழி அந்தப் பக்கம்', 'சிஸ்டர் இந்தாங்க இளநீர், 'அக்கா, குழந்தையை நீங்க தூக்கிக்கோங்க, குடையை நான் பிடிச்சிக்கிறேன்' என்றெல்லாம், போராட்டக் களத்திலும்கூட பாசமும் பொறுப்புமாக நின்ற எங்கள் பிள்ளைகளை, விரட்டி விரட்டி அடிக்கும் உங்கள் வெறிக்கு என்ன காரணம், நியாயம் சொல்ல முடியும் உங்களால்? 'காவல்நிலையத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு' என்று சொன்னால், நம்புவதற்கு ஒரு வாரத்துக்கு முந்தைய தமிழகம் அல்ல இது. இந்த ஆறு நாட்களில் எங்கள் பிள்ளைகள் கற்றிருக்கும், அவர்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் அரசியல் நிறைய நிறைய.

நிதானத்துடன்தான் இருந்தார்கள் எங்கள் பிள்ளைகள். ஆனால், நிலைமை சீர்குலைவதால் ஆதாயம் பெறுபவர்கள்தான் காவல் நிலையத்து தீவைத்திருக்க வேண்டும். அது ஆளும்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை யாராக வேண்டுமானாலும் இருக்கலாமே தவிர, எங்கள் பிள்ளைகளின் கைகளுக்கு அந்த வன்முறை, தேவையில்லாத ஆயுதமாகத்தான் இன்று காலை வரை இருந்துவந்தது என்பதை நாங்கள் அறிவோம். அதற்குப் பிறகும்கூட கல் எறிவதும், கை உயர்த்துவதுமாக எங்கள் பிள்ளைகள் எதிர்வினையாற்றுவது, தற்காப்புக்குத் தானே தவிர, கலவரத்துக்கு அல்ல.

இத்தனை நாட்கள் அறத்துடன் போராடினார்கள் எங்கள் பிள்ளைகள். 'ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்' என்றீர்கள். உங்கள் அரசியல் சாணக்கியத்தனம் பற்றி தெரிந்துவிட்ட கூட்டம் அது என்பதால், 'நிரந்தரத் தடை வேண்டும்' என்று கேட்டார்கள். 'இந்தத் தடை நிரந்தரமானதுதான்' என்றீர்கள். நம்பிக்கை மெலிந்திருந்த அந்த வார்த்தைகளில் உடன்பாடின்றி, போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

சனி இரவு, 'டேய் போலீஸ் லத்தி சார்ஜ்னு சொல்றாங்கடா... வந்துடுடா...' என்று அழைத்தோம் எங்கள் பிள்ளைகளை. 'அம்மா... அதெல்லாம் இல்லம்மா. போலீஸ் இப்பவும் எங்ககிட்ட ஃப்ரெண்ட்லியாதான் இருக்காங்க' என்ற அவர்களின் குரல் இப்போதும் காதில் ஒலிக்கிறது. தீயாக. உங்களை நம்பி உட்கார்ந்திருந்தார்களே காக்கி உடுப்புகளே... என்ன தவறு, தேச துரோகம் செய்தார்கள் எங்கள் பிள்ளைகள் என்று, இன்று அவர்களை இரக்கம் மரத்துப்போன உங்கள் லத்திகளுக்கு இரையாக்குகிறீர்கள்?

நல்மாற்றமாக, பொதுவெளிக்கு வந்து முழங்கிய பெண் பிள்ளையின் குரல்களை எல்லாம் ரசித்துக் கொண்டாடியது தமிழகம். 'அக்கா... உங்க பொண்ணு கூட்டத்துல எப்படி சத்தமா, வேகமா கோஷம் போடுறா பார்த்தீங்களா?' என்று சொன்னபோது, அந்தப் பெண்களைப் பெற்ற அம்மாக்கள் அகமகிழ்ந்து போனார்கள். ஆனால், இன்று அந்தக் கல்லூரிப் பெண்ணின் முகத்தில் ரத்தம் கொட்டவைத்துவிட்டு, அந்தக் காட்சியை எப்படி உங்களால் கடமை உணர்வுடன் கடந்து செல்ல முடிகிறது காவலர்களே? அதைப் பார்த்து பதறும் பெண் குழந்தைகளின் அம்மாக்கள், 'அம்மாடி... நீ எங்க இருக்க? போலீஸ் கண்மூடித்தனமா அடிக்கிறாங்கம்மா...' என்று பதறும் விசாரிப்புகள் அலைபேசி வழி அலைந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு அம்மாக்களின் இந்தத் தவிப்பு, உங்கள் அரசியலை திசைமாற்றவிருப்பதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இனி நீங்கள் எந்தத் திட்டம் தீட்டியும் பயனிருக்கப் போவதில்லை.

'நாங்க கலைஞ்சுபோக சொல்லி சொல்லிட்டே இருந்தோம்... அவங்க கேட்கல' என்ற வாதத்தில், கொஞ்சமாவது அடிப்படை இருக்கிறதா? அரசின் பிரதிநிதியாக யாராவது எங்கள் பிள்ளைகளிடம் வந்து பேசினீர்களா? எப்படிப் பேசுவீர்கள்? உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த, தன்னெழுத்தியாகச் சேர்ந்த லட்சம் லட்சம் இளைஞர்களின் போராட்ட களத்துக்கு முன் வந்து, அவர்கள் முன் நின்று, அவர்களின் கோரிக்கை குறித்த சட்ட நிலைப்பாட்டினை, அரசியல் சூழலை சொல்லக்கூடிய யோக்கிதையான ஆள் அரசிடமோ, அதிகாரத் தரப்பிடமோ இல்லை என்பதால், குள்ளநரித்தனம் செய்துபார்த்தீர்கள். ஆனால், 'நீங்க கலைஞ்சுபோயிடுங்க' என்று பயமுறுத்தினால் பின்வாங்கும் கூட்டம் அல்ல அது என்பதையும் நீங்கள் அறிந்திருந்ததால்தான், இன்று காலை லத்திகள், கண்ணீர்ப்புகை குண்டுகள், துப்பாக்கிகள் என்று உங்கள் 'தைரியம்' காட்டுகிறீர்கள். 'ஒருத்தி பெத்த புள்ளைய இப்படி காட்டுமிராண்டித்தனமா அடிக்கிறீங்களே... அவனை இங்க அனுப்பிவெச்ச பெத்த வயித்துக்கு என்ன பதில் சொல்லுவீங்க?' - அலங்காநல்லூரில், ஆறு நாட்களாக ராத்திரி பகலாக களத்தில் நின்று, இன்று மண்டை உடைந்துகிடக்கும்  அந்தப் பையனை மடியில் போட்டுக்கொண்டு, கிழவி ஒருத்தி குரலெடுத்து அழுகிறாள்.  பெற்ற வயிறுகளின் சாபத்தை, இனி தமிழகம் பார்க்கும்.

குடியரசு தின விழாவுக்கு உங்களுக்கு மெரினா வேண்டும். அதற்கு விலை எங்கள் பிள்ளைகளின் ரத்தமாக இருந்தாலும், உயிராக இருந்தாலும் கவலை இல்லை உங்களுக்கு. எடுத்துக்கொள்ளுங்கள். 'இந்தக் கேடுகெட்ட நாடு எப்படிப் போனா என்னடா?' என்று இல்லாமல், 'இது என் மாநிலம், என் கலாச்சாரம், என் மக்கள்' என்று திரண்டெழுந்த அந்த இளம் ரத்தத்துக்கு, நீங்கள் கொடுக்கும் பரிசை எங்கள் பிள்ளைகள் வலியுடன் வாங்கிக்கொள்வார்கள். பதிலை, நிச்சயம் வரும்காலத்தில்  சொல்வார்கள்... அறவழியில், அறிவு வழியில், அரசியல் களத்தில்!

காத்திருங்கள்!

- போராட்டத்துக்குப் பிள்ளைகளை அனுப்பிவைத்த அம்மாக்களில் ஒருத்தி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close