Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’அந்த’ 24% தமிழக சிறுமிகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்!

பெண்  குழந்தைகள்
 

ந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திராகாந்தி பதவி ஏற்றுக்கொண்ட தினம், ஜனவரி 24. இதுவே தேசிய பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தைவிட, பெண் குழந்தைகளின் நலன் குறித்த அலசலே இந்நாளின் தேவையாக இருக்கிறது. காரணம் இன்றும் தமிழகத்தில் 24% சிறுமிகள் குழந்தைத் திருமணத்துக்கு ஆளாகிறார்கள். மாலையும் தாலியுமாக இருக்கும் அவர்களுக்கு எப்படிச் சொல்வது நம் பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை...

உயர உயரப் பறந்தாலும் பெண் இனம் சந்திக்கும் பிரச்னைகளின் எண்ணிக்கை குறையவில்லை. இன்றும் அரங்கேறும் சிசுக்கொலைகள், பெண் இனம் வேரோடு அறுக்கப்படுவதற்கான சமூகத்தின் விருப்பத்தை  உணர்த்துகிறது. பிறந்த பின்னர் பெண் என்பதற்கான ஒதுக்குதலால் அவள் போதிய சத்துணவு கிடைக்காத குழந்தையாக வளர்கிறாள். பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண் எனும் அடையாளம் அந்தக் குழந்தைகளின் தலையில் பெரும் சுமையாக வைக்கப்படுகிறது. 

பெண் குழந்தைகளுக்கு ஒரு மேம்பட்ட சமூக சூழலைக் கொடுக்க, நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சொல்கிறார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு.

பிரபு

* ''கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிந்து சொன்னதற்காக, தமிழக அளவில்  சமீபத்தில் பல ஸ்கேன் சென்டர்கள் இழுத்து மூடப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் இன்றளவும் கருக்கொலைகள் நடப்பதை உறுதிப்படுத்துகின்றன. கருவிலேயே பெண்ணை அழிக்கும் மனப்போக்கு மாற வேண்டும். பிறப்பிலேயே பெண் சிசுவை அழிப்பது பெண் இனத்துக்கே செய்யும் துரோகம். 

* பிறந்த பின் பெண் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய அன்பும், அரவணைப்பும் வழங்கப்பட வேண்டும். கல்வியிலும் பெண்ணுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 

* பெண் குழந்தைகளுக்கு துவக்கத்தில் இருந்தே ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்பட வேண்டும். வளர்ந்த பின் அடுத்த தலைமுறையை உருவாக்கித் தரும் பெண்ணுடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கான சத்துகள் நிறைந்த உணவு கிடைக்கப்பெறுவது அவர்களின் உரிமை. இன்றளவும் பெண் குழந்தைகள் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகை பாதிப்புடன் உள்ளனர் என்கின்றன பள்ளிகளில் நடத்தப்படும் ஆய்வுகள். அறிவுக் கூர்மை, உடல் நலம் இரண்டுக்கும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

* பெண் குழந்தைகள் சிறு வயதில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவது பரவலாக நடக்கிறது. அவர்களுக்கு மிகவும் தெரிந்த நபர்களாலேயே, வீட்டிலேயே இந்த பயங்கரம் நடக்கிறது என்பதும் அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள். பள்ளி, வீடு மற்றும் குழந்தைகள் கூடும் இடங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளின் பிரச்னைகளை மனம் விட்டு பேசுவதற்கான ஆலோசகர்கள் அமர்த்தப்பட வேண்டும். 

* இந்தாண்டு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பாலியல் தொல்லையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 குறித்த விழிப்பு உணர்வை தமிழக மாவட்டங்களில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் தீர்வு காணலாம். 

* பாலியல் ரீதியாக குழந்தைகள் துன்புறுத்தப்பட்டால் 1098 என்ற இலவச அழைப்பு சைல்டு லைன் எண்ணில் யாரும் புகார் தெரிவிக்கலாம். அந்தந்த மாவட்டத்தில் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, குழந்தைகள் நலக் குழுமம் ஆகியவற்றிலும் புகார் தெரிவிக்கலாம். 

* உலகளவில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நடக்கிறது. குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால், 2050ம் ஆண்டுக்குள் உலகளவில் நூறு கோடி சிறுமிகள் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படுவார்கள் என யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. தமிழகத்தில் 24%  பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கான பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. 

பெண் குழந்தைகள் 1

* குழந்தைத் திருமணங்களால் கல்வி மறுக்கப்பட்டு குழந்தைப் பருவ சந்தோஷங்களை இழக்கின்றனர் பெண்கள். மிகச்சிறிய வயதில் தாம்பத்ய உறவு, குழந்தைப் பேறு, சத்துணவின்மை, கணவனை சார்ந்து வாழ வேண்டிய நிலை போன்ற நெருக்கடியான நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனர். சிலர் சிறு வயதிலேயே கணவனை இழந்து நிற்க வேண்டிய நிர்கதி நிலைக்கும் ஆளாகின்றனர். 

* குழந்தைப் பருவத்தை தாண்டுவதற்குள்ளாக இவ்வளவு பிரச்னைகளை சந்திக்கும் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது  பிரச்னைகளை பேசுவதற்கான தளம் உருவாக்கப்பட வேண்டும். பிரச்னைகளை சந்திக்கும் குழந்தைகளுக்கு தீர்வு காண்பதற்கான அமைப்புகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். 

* வளர் இளம் பருவத்தில் பெண்கள் அதிகளவில் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடுவது, ஸ்லிம் உடல் வாகைப் பெற சாப்பிடாமல் தவிர்ப்பது இவை இரண்டும் உடல் நலத்தைக் கெடுக்கிறது. பருவம் அடையும் காலகட்டத்தில் பெண் குழந்தைகள் சந்திக்க நேரிடும் சுகாதாரமின்மை, சத்தான உணவுப்பழக்கமின்மை இரண்டும் இரும்புச் சத்து பற்றாக்குறையை ஏற்படுத்தி கருவுறும் காலத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். பிறக்கும் குழந்தையும் இதனால் பாதிக்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கு உரிமை அளிப்பதுடன் அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை சூழலையும் வழங்க வேண்டும். பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்த வேண்டும். பாதிப்பு ஏற்படும்போது சட்டத்தை அணுகி தீர்வு காண வேண்டும்'' என்கிறார் பிரபு.   குழந்தைகள் விரும்பும் பெற்றோராக என்ன செய்ய வேண்டும் தெரியுமா

- யாழ் ஸ்ரீதேவி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close