Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேற்று சிறுசேரி உமா மகேஸ்வரி..இன்று புனே ரசிலா...என்ன சொல்கிறார்கள் ஐடி பெண்கள் #ITSafety

சிக்கலில் ஐடி பெண்கள்

 

‘’பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் எதுவும் நிகழ்வதே இல்லை. இரவோ பகலோ அவர்களின் தனிமைக்கு உத்திரவாதம் இருக்கிறது.  ஆண், பெண் புரிதலில் பெண்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை’’
 - இப்படியெல்லாம் நிகழ வேண்டும் என்பது தான் அனைவரின் கனவாக இருக்கும். ஆனால் நிகழ்காலம் அதற்கெல்லாம் வெகு தொலைவில்  இருக்கிறது என்பதையே பல கொடூர சம்பவங்கள் மூலமாக கோட்டிட்டு காட்டுகிறது.சமீபத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் நடந்தது என்ன?

சென்னை,சிறுசேரியில் அமைந்துள்ள டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி திடீரென காணாமல் போக 8 நாட்கள் கழித்து அவருடைய உடலை புதரில் இருந்து கண்டுப்பிடித்தனர்.  அங்கே கட்டட தொழிலாளர்களாக வேலைப் பார்த்தவர்கள் மூன்று பேர் அவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்து குப்பையைப் போல புதரில் வீசி சென்றது பின்பு விசாரணையில் தெரியவர குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைத்தது. இரவுப் பணியை முடித்துவிட்டு வந்த உமா மகேஸ்வரிக்கு இந்த நிலைமை என்றால் விடுமுறை நாளில் வேலைக்குச் சென்ற ஐடி பணியாளர் ரசிலாவின் நிலைமையும் கொடூரம்.
‘வேலியே பயிரை மேய்ந்தாற் போல’...என்பார்களே அப்படியான சம்பவம் தான் ரசிலாவுக்கு நிகழ்ந்திருக்கிறது. புனேவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர் ரசிலா. இவர் கேரளாவைச் சேர்ந்தவர். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் வேலை காரணமாகப் பணிக்குச் சென்ற ரசிலாவை நீண்ட நேரமாக தொடர்பு கொள்ள முடியாமல் போக கடைசியில் பணியிடத்திலேயே அங்கு வேலை பார்த்த காவலாளியால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
சம்பவங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு இழைக்கப்படும் இவ்வாறான கொடுங்குற்றங்களுக்கு எப்போதும் வேறு முகங்கள் இருப்பதில்லை. நாடெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படும் நிலையில் ஐடியில் வேலைப் பார்க்கும் பெண்களுக்கான அவலங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வரும் பின்னணியை குறித்து அத்துறை சார்ந்தவர்களிடமே பேச முற்பட்டோம். என்ன சொல்கிறார்கள் ஐடியில் வேலை பார்க்கும் பெண்கள்?

இரவு நேரப்பணியில் ஐடி பெண் ஊழியர்Representative Image

 

வசந்தப்பிரியா, ஐடி ஊழியர், புனே:


எனக்கு சொந்த ஊர் சென்னை. 15 வருஷமா புனேவுல தான் இருக்கேன். ரசிலா கொலையைப் பத்தி இங்க உள்ள என்னோட ஃப்ரெண்ட்ஸ் சொல்லி தான் எனக்கும் தெரியும். ரசிலாவுக்கும், அங்கே உள்ள செக்யூரிட்டிக்கும் சனிக்கிழமை அன்னைக்கே ஏதோ பிரச்னை இருந்ததா சொல்றாங்க. மறுநாள் ஞாயிற்று கிழமை ரசிலா வேலைக்கு வந்தப்பவும் அதே பிரச்னை தொடர்ந்திருக்கு. ஒரு கட்டத்துல மேனேஜ்மெண்ட்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன்னு ரசிலா சொல்லி இருக்காங்க. செக்யூரிட்டியோ கம்ப்ளெயிண்ட் பண்ண வேண்டாம்னு சொல்லி கேட்டிருக்கார். நடுவுல என்ன நடந்ததுனு தெரியல. கடைசியில அது கொலையா முடிஞ்சிருக்கு. எல்லாருமே ஒரே ஒரு செக்யூரிட்டி இருந்ததால தான் இப்படி ஆகியிருக்கு, ரெண்டு பேர் இருந்திருந்தா நடந்திருக்காதுனு சொல்லிட்டு இருந்தாங்க.ஒரு பொண்ணுக்கிட்ட தகாத முறையில நடந்துக்க ஒருத்தர் தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது எத்தனை பேர் இருந்தாலும், பெண்ணுக்கான பாதுகாப்பை அவ தான் உறுதிப்படுத்திக்கணும். ஐடியை பொறுத்த வரைக்கும் இங்கே பெண்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க. கல்யாணம், குழந்தைனு அவங்க ஏற்கெனவே தங்களோட நேரத்தை குடும்பத்துக்காக செலவு செய்றப்ப, இந்த மாதிரியான பிர்ச்சனைகளையும் சந்திச்சு மேல வர்றது ரொம்பவே சவாலா இருக்கு. வெளிநாடுகள்ல இருக்குற மாதிரி ஜென்ரல் ஷிப்ட்ல பெண்களை வேலைக்கு அமர்த்தலாம். வேலை நேரத்துல தங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் உடனுக்குடன் அதை தைரியமாகப் பேசி ஆரம்பத்துலயே தீத்துக்கப் பாக்கணும். தேவையில்லாமல் நம் குடும்ப சூழல்களை மற்றவர்களிடம் பகிர்வதோ, அல்லது பயந்து பயந்து பேசுவதோ, தேவையில்லாமல் கோபப்படுவதோ இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்கணும்.

ரம்யா, ஐடிஊழியர், சென்னை:

எங்க கம்மெனியில ஜென்ரல் ஷிப்ட்ல வர்றவங்க, நைட் 8 மணிக்கு  மேல தொடர்ந்து வேலைப் பாத்துட்டு  இருந்தா, அதுக்கப்புறம்  வெளிய போக அனுமதி தர மாட்டாங்க. மறுநாள் காலையில தான் வெளிய போக முடியும். அதனால சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கிளம்ப்பணும்னு விதிமுறை இருக்கு. இரவு நேர ஷிஃப்ட்ல வர்றவங்களுக்கு கம்பெனியில கேப் அரேஞ்ச் செஞ்சு தருவாங்க. கண்டிப்பா வீடு வரைக்கும் டிராப் பண்ணிடுவாங்க. கேப்ல போறவங்க,   கிளம்புற நேரத்தை,ஸ்வைப் கார்டு மூலமா  பதிவு பண்ணிட்டு தான் வெளியேற முடியும். இதனால் பெரும்பாலும் பணியாளர்கள் கண்காணிக்கப்படுறாங்க. விடுமுறை நாட்கள்ல வந்து வேலை பாக்க வேண்டி இருந்தா எச்.ஆரிடம் அனுமதி வாங்கணும். சில பேருக்கு கொடுத்திருக்கிற புராஜக்ட்டைப் பொறுத்து அவங்க வீட்ல இருந்தும் வேலை பாக்க முடியும். அப்படி முடியாதவங்க ஆபிஸ் வருவதா இருந்தா பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கிட்டு வருவது நல்லது. அதே போல நிர்வாகமும், செக்யூரிட்டி வசதிகள் சரியா இருக்கானு உறுதிப்படுத்திக்கணும்.

கிருஷ்ணவேணி, ஐடி ஊழியர், பெங்களூரு:

எங்க கம்பெனியில இரவு 7 மணிக்கு மேல வெளிய போனாலும் சரி, உள்ளே வருவதா இருந்தாலும் அவங்களே டிராவல் ரெடி பண்ணிடுவாங்க.புதுசா வேலைக்கு சேரும் பெண்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பாங்க. அதனால அவங்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் பணிச்சுமை அதிகமா இருக்கும். இந்த மாதிரியான நேரத்தில் இரவில் தங்கியும் வேலை பார்ப்பாங்க. எங்க கம்பெனியைப் பொறுத்த வரைக்கும், முதல் 10 நாட்கள் மட்டுமே இரவில் தங்க அனுமதி தருவாங்க. அதுக்கப்புறம் கிடையாது. தனியா வந்து வேலை பாக்குறதுக்கு பதிலா வீட்ல இருந்தே வேலை பாக்க அனுமதி கேட்கலாம். ஹார்ட்வேர் தொடர்பான வேலையா இருந்தா கண்டிப்பா வீட்ல இருந்து பாக்க முடியாது. அதனால அவங்க துணைக்கு புராஜெக்ட் மேனேஜர் வரணும்னு சொல்லி கேட்கலாம். எல்லாத் துறைகளிலுமே தப்பு நடக்க வாய்ப்பிருக்கு. அதனால எதையுமே மறைக்காம ஆரம்பத்துலயே குடும்பத்தாரிடம் சொல்வது நல்லது.

திவ்யா, ஐடி ஊழியர், சென்னை:

நம்மோடு பணி புரிபவர்கள் யார், எப்படி பட்டவர்கள் என்பதை எல்லாம் நாம் உடனுக்குடன் புரிந்து கொள்வது கஷ்டம். அதனால் நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வரை யாரிடமும் நெருங்கிப் பழகிவிட வேண்டாம். ஆண் பெண் குறித்த புரிதல் அடிப்படையில் சமூகத்துக்கே வர வேண்டி இருக்கிறது. விடுமுறை நாட்கள்ல கண்டிப்பா தனியாக வேலை பார்க்கவே தேவையில்லை. ஐடி துறை மட்டுமல்ல ..இங்கே பெண்களுக்கு எல்லா இடத்திலும் இப்படிப் பட்ட பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களில் ஆரம்பித்து துணிக்கடைகளில் வேலைப்பார்க்கும் பெண்கள் வரை எல்லோருக்குமே பாலியல் ரீதியிலான தொல்லைகள் இருக்கின்றன. வேறு துறையை சார்ந்த பெண்களின் பிர்ச்னைகள் எளிதில் வெளியே வருவதில்லை. ஆனால் ஐடியை பொறுத்த வரை அது பூதாகரமாக வெளிப்படுகிறது. சமூக மாற்றம் நிகழ நீண்ட காலம்  பிடிக்கலாம். அதனால் பெண்கள் தங்களை பாதுகாப்பு உணர்வோடு வைத்திருப்பதோடு, பெண்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

ஐடி துறையில் பெண்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? #ITSafety என்கிற ஹேஷ் டேக்குடன் ட்வீட் செய்யுங்களேன்...


-பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close