Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தரையிறங்க 16 நிமிடங்களில் வெடித்த விண்கலம்..! கல்பனா சாவ்லா விண்ணில் கலந்த நாள் இன்று

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா

விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, உலகமே வியந்த விண்வெளி வீராங்கனையாக வாழ்ந்த கல்பனா சாவ்லா, அமெரிக்காவின் கொலம்பியா ஓடத்தில் இருந்து விண்வெளிக்குப் பறந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அவருடைய நினைவு நாளை முன்னிட்டு சில துளிகள்...

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 1961ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி கர்னால் என்ற ஊரில் பிறந்தார் கல்பனா. வீட்டின் நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. அவர் தந்தை ஒரு வியாபாரி, தாய் இல்லத்தரசி. பொம்மை வைத்து விளையாடும் வயதில் கல்பனாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு, விமான ஓவியங்கள் தீட்டி அழகுபார்ப்பது. விமானங்களின் சத்தம் கேட்டாலே வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடிவந்து அந்த அலுமினியப் பறவை புள்ளியாக மறையும் வரை கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டே நிற்கும் குழந்தைகளில் ஒருவர்தான் கல்பனாவும்.

கர்னாவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த கல்பனாவுக்கு, அந்த வயதிலேயே விண்வெளி வீரராக ஆக வேண்டும் என்ற இலக்கு மனதில் பதிந்துவிட்டது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமானப் பொறியியல் பயில விரும்பினார். ஆனால் அது அப்போது ஆண்களின் படிப்பாக இருந்ததால், பெற்றோர் மறுத்தனர். என்றாலும் கல்பனாவின் பிடிவாதத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை. அந்தக் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற கல்பனாவை, 1982ல் அமெரிக்கா வரவேற்றது. 1984ம் ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கல்பனா நான்கு ஆண்டுகள் கழித்து கொலோராடோ பல்கலைக்கழகத்தில் விமானப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 1993ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே அவரின் விண்வெளி வீரர் கனவு நனவாகத் தொடங்கியது. நாஸாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பத்திருந்த சுமார் 3,000 பேரில், ஆறு பேர் மட்டுமே தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர். ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ச்சிப் பட்டியலில் இடம்பிடித்தார். 

1995ம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாக தகுதி பெற்ற கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நிகழ்ந்தது. ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87-ல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்ட கல்பனாவுக்கு அதில் ஆராய்ச்சி குறித்த முக்கியப் பொறுப்புகளும் தரப்பட்டன.  பூமியை சுமார் 252 தடவை சுற்றிய அந்த விண்கலத்தில் சுமார் 10 மில்லியன் மைல் தொலைவு பயணித்த கல்பனா, சக விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார்.

விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார் கல்பனா. கொலம்பியா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முன் கல்பனா, 'முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால் எனக்கும் ஊக்கம் ஏற்படும்' என்றார். ஆராய்ச்சியாளர்களின் சரிதைகளை விரும்பிப் படிக்கும் அவர், தன் ஆசிரியர்களுக்கு எப்போதும் தன் நன்றிகளை தெரிவித்தபடி இருப்பார். 

முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா, பிறகு அதே கொலம்பியா விண்கலத்தில் 2003 ஜனவரி 16ம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் விண்ணுக்குப் பயணித்தார்.  பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர்கள், பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக  திட்டமிட்டபடி பிப்ரவரி ஒன்றாம் தேதி தரையிறங்க ஆயத்தமானார்கள். பூமியைத் தொட 16 நிமிடங்களே இருந்த நிலையில், அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது. 41 வயது கல்பனா, தேவதையாக விண்ணில் கலந்தார்.

இந்திய அரசு கல்பனா சாவ்லாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில், 2011ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வீரதீர சாதனைகள் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவப்படுத்துகிறது. அந்த விண்வெளி தேவதை, நம் வீட்டின் பல குட்டி தேவதைகளுக்கு ப்ரியமான ரோல்மாடல்!

-என்.மல்லிகார்ஜுனா
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close