Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய பட்ஜெட் பெண்கள், குழந்தைகளுக்கு சாதகமா... பாதகமா? - பொருளாதார நிபுணரின் அலசல்

மத்திய பட்ஜெட் தாக்கல்

2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்வேறு சாதக, பாதக அம்சங்களைக் கொண்ட இந்த பட்ஜெட் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எப்படிப்பட்டது என கூறுகிறார் பொருளாதார நிபுணரான அனிதா பட்.

''இன்றைய பட்ஜெட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒருசில அறிவிப்புகளைத் தவிர பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த சாதகமானபொருளாதார நிபுணர் அனிதா பட் அம்சங்களும் இல்லை. ஆனால், பெண்கள், குழந்தைகளுக்கான நலத் திட்டங்களுக்கு ரூ.1,56,000 தொகை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.1,84,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயம்.  

அதுபோல 2016-17-ம் நிதியாண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு 40 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 55 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கக்கூடிய விஷயம். மேலும் இத்திட்டத்தை வலுப்படுத்தும் விதமாக விண்வெளி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதுடன் இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு இத்திட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு கால நிதியாக ரூ.6,000 வங்கியில் வரவு வைக்கப்படும் எனக் கூறியுள்ளார்கள். இது வரவேற்கும் விஷயம் என்றாலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறுகால நிதி வழங்கப்படுகிறது. அதனால் இந்த திட்டத்தை எந்த வகையில் செயல்படுத்தப்போகிறார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குழந்தைகள் நலம் மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களிலும் பெரிய ஏமாற்றமே. இருப்பினும் வெளிநாட்டு மொழிக் கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இது பள்ளி மாணவர்களுக்கா அல்லது கல்லூரி மாணவர்களா என எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டால் அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதில் பயன்கிடைக்கும். மேலும் கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் எனச் சொல்லியிருப்பதிலும் தெளிவான விளக்கங்கள் இல்லை. 
                     
ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல பயனுள்ள நலதிட்ட அறிவிப்புகள் வரும் என நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். குறிப்பாக ஏழைக் குழந்தைகள் ஊட்டசத்துக் குறைபாட்டினால் பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள். தரமான கல்வி கிடைக்காமல் தவிக்கிறார்கள். அதுபோல தற்போது பெண்கள் படித்தாலும் வேலை வாய்ப்பைப் பெறுவதில் பல சிக்கல்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இருக்கின்றன. கிராமத்தில் படித்து வெளியூர்களுக்குச் சென்று வேலை செய்வதில், உயர் பதவிகளுக்கு வருவதிலும் பல சிக்கல்களும், பாதுகாப்பின்மையும் இருக்கிறது. இதனையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் பாராட்டும் வகையில் ஒரு திட்டமும் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

பொது பட்ஜெட்டைப் போலவே இதுவரை நடைமுறையில் இல்லாத வகையில் இந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரயில் பயணத்திலும் பெண்களும், குழந்தைகளுக்கும் என புதிய சலுகைகள், அறிவிப்புகள், திட்டங்கள் எதுவும் வரவில்லை. மொத்தத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரிதளவில் ஏற்றம் இல்லாத ஏமாற்ற பட்ஜெட்டாகத்தான் பார்க்க முடிகிறது" என்று வருத்தத்தோடு சொல்லி முடித்தார் அனிதா பட்.


- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close