Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வேலைக்காரி'... இது சசிகலாவைப் பற்றிய கட்டுரை அல்ல! #MustRead

முதல் நாள் ’வேலைக்காரி’ ராணி அக்கா காய் நறுக்கியபோது, விரலில் வெட்டிக்கொண்டார். ஆழமான காயம். மறுநாள் பாத்திரம் துலக்குகையில், அந்த ஸ்டீல் ஸ்கிரப்பர், வெட்டிய காயத்துக்குள் அவ்வப்போது இறங்கிக் குத்த, தாங்கவே முடியாத அந்த சுரீர் வலியைத் தவிர்க்கக்கூடிய வாழ்க்கை அவருக்கு வாய்க்கவில்லை. இரண்டு கூடை பாத்திரங்களையும் துலக்கிவைத்த பின்னர் காயத்தை ஈரம் வற்றத் துடைத்துக்கொண்டார். வீட்டுக்காரப் பெண்மணி மூன்று இட்லிகளைக் கொடுக்க, 'டப்பாவுல எடுத்துக்கிறேம்மா' என்று, மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் பகிர்ந்துகொடுப்பதற்காக எடுத்து வைத்துக்கொண்டு, பட்டினி வயிற்றுடன் அடுத்த வீட்டுக்குப் பாத்திரம் துலக்கச் சென்றார் ராணி அக்கா. கணவன் எங்கோ சென்றுவிட, யாரையும் எதிர்பார்க்காமல், தன் உழைப்பால் குடும்பத்தைத் தாங்கும் தன்மானமுள்ள பெண்.

வேலைக்காரி

'பிறக்கும்போதே பணிப்பெண்' என்று இங்கு யாரும் இல்லை. ராணி அக்காக்கள் சூழ்நிலையால் உருவாகிறார்கள். அனுதினமும் தங்கள் உடலை வருத்தி உழைத்து, வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். இவர்களின் வாழ்க்கை எந்த விதத்தில் இழிவானது, ஏளனமானது, நகைப்புக்கு உரியது என்ற கேள்வியை, சிலரின் முன் வைக்க வேண்டும்.

'வேலைக்காரி', 'ஆயா', 'ஆயாம்மா'... கடந்த சில நாட்களாக சசிகலா சம்பந்தப்பட்ட கேலி, கோபப் பதிவுகளில் இந்தச் சொற்கள் கையாளப்படும்போது தமிழகம் விழுந்து விழுந்து சிரிக்கிறது. சமூக வலைதளப் பதிவுகளிலும், மீம்களிலும் மிக அதிகாரமாக, உறுதியாக இந்த வார்த்தையை 'தகுதியற்ற', 'இழிவுக்கு உரிய' என்ற அர்த்தங்களில் கையாண்டு வருகிறார்கள். 'சசிகலாவுக்கு முதல்வராவதற்கு என்ன தகுதி இருக்கிறது?' என்ற கேள்வியில் நையாண்டி சேர்ப்பதாக நினைக்கும் கிரியேட்டர்களால்(!), தங்கள் குடும்பத்துக்காக அன்றாடம் பாடுபடும் அந்த உழைப்பாளிப் பெண்களின் வாழ்க்கை சர்வசாதாரணமாக இழிவுபடுத்துப்படுகிறது  என்பதை நாம் உணர்கிறோமா?

அந்த மீமில், கிழிந்த ஆடை, கலைந்த தலையுடன் நிற்கிறார் கோவை சரளா. 'வேலைக்காரி'க்கான குறியீட்டுப் படமாம் அது. மற்றொரு மீமில், கையில் துடைப்பத்துடன் நிற்கும் பெண்ணின் புகைப்படத்தில், சசிகலாவின் தலை பொருத்தப்பட்டுள்ளது. பார்ப்பவர்கள் மனதில் ஒரு குபீர் சிரிப்பு எழுகிறது. சுற்றி பாத்திரங்கள் கிடக்க, அமர்ந்தபடி அவற்றைத் துலக்கிக்கொண்டிருக்கிறார் ஒரு பெண். 'இவதானே நீ?' என்ற இழிவை ஏற்படுத்துவதே அந்தப் புகைப்படத்தின் நோக்கம்.

'இவையெல்லாம் சசிகலாவுக்கு எதிரான பதிவுகள்தாம்.  தகுதி இல்லாத ஒருவர், முதல்வர் பதவிக்கு வருவதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை, கோபத்தை, ஆற்றாமையைச் சொல்லும் பதிவுகள்தாமே தவிர, பணிப்பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதல்ல' என்று சிலர் விளக்கம் தரலாம். உண்மையில், சசிகலாவை 'வேலைக்காரி', 'ஆயாம்மா', 'ஆயா' என்று அழைக்க ஆரம்பித்ததன் காரணமே, சமூகம் அந்தப் பெண்கள் மேல் கொண்டிருக்கும் இழிவு எண்ணத்தின் வெளிப்பாடுதான். சசிகலாவை ஜெயலலிதாவுக்குத் தோழியாகவோ, உதவியாளராகவோ குறிப்பிடும்போது, உங்களுக்கு அவரைத் தரக்குறைவாகக் குறிப்பிட தளம் கிடைக்கவில்லை. ஆனால், 'வேலைக்காரி' என்று குறிப்பிடுவதால் அந்த ஏளனத்தை, இழிவை, அவமானப்படுத்தும் நோக்கத்தை உங்களால் எளிதாக அடைய முடிவதாக நினைக்கிறீர்கள். எனில், உங்களின் மனதின் ஆழத்தில் மட்டுமல்ல, மனம் முழுக்க உழைக்கும் பெண்கள் குறித்து இழிவான எண்ணத்தை மட்டுமே கொண்டிருக்கிறீர்கள்.  'வேலைக்காரியெல்லாம்...' என்பதே உங்களின் எண்ணம். ஆனால், இந்த உலகில் நாம் ஈட்டும் ஒவ்வொரு ரூபாயும், யாரோ ஒருவருக்கு நாம் வேலைசெய்து கொடுத்துப் பெறும் ஊதியம்தான் என்பதே உண்மை. நாம் அனைவருமே வேலைக்காரர்கள்தாம்.

அது ஒரு நட்சத்திர விழா. அதில் கலந்துகொண்ட நடிகை சுஹாசினியிடம், 'இந்தத் தருணத்தில் நீங்கள் யாருக்கு நன்றி கூற விரும்புகிறீர்கள்?' என்ற கேள்வி மேடையில் கேட்கப்பட்டது. தன் வீட்டின் பணிப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்ட அவர், 'இந்த நொடி நான் அவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். ஏன்னா, காலை பிரேக்ஃபாஸ்ட், மதிய உணவுனு என் பொறுப்புகள்ல இருந்தெல்லாம் நான் நிம்மதியோட விடுபட்டு, இந்த நிகழ்ச்சிக்கு இன்னைக்கு நான் வந்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் அவங்கதான்' என்றார். நாடகத்தனமான, உணர்ச்சிமயமான பதிலை எதிர்பார்த்திருந்த அரங்கத்துக்கு,  உண்மையில் அந்த பதில் சுவாரஸ்யமற்றதாகத்தான் இருந்தது. ஆனால், அந்த பதிலில் நிறைந்திருந்த நேர்மையும் நன்றியும் இன்றும் நினைவில் நிற்பதாக இருக்கிறது. சுஹாசினி மட்டுமல்ல... உண்மையில் பல பெண்களை சமையலறையில் இருந்து விடுவித்திருக்கும் தேவதைகள் அவர்கள். குறிப்பாக, பணிக்குச் செல்லும் பெண்கள் பல்லாயிரம் சம்பளம் ஈட்டுவதற்கான சூழலை, சில நூறுகள் சம்பளம் பெறும் பணிப்பெண்களே அவர்களுக்குத் தருகிறார்கள். 'ரெண்டு நாள் மெய்டு வரலைன்னா...' என்ற சூழலை உங்கள் வீடுகளில் கற்பனை செய்து பாருங்கள். குடும்பத்தில் ஒவ்வொருவரின் இயல்பு வாழ்வும் ஏதோ ஒரு வகையில் ஸ்தம்பிக்கும். அந்தளவுக்கு, அவர்கள் நமக்கு இன்றியமையாதவர்கள்.

'அதற்குத்தான் சம்பளம் வாங்குகிறார்களே?' என்றால், பிறகு அவர்களின் உழைப்புச் சுரண்டலைப் பற்றியும் சில பத்திகள் பேச வேண்டியிருக்கும். அதை விடுவோம். 'அதான் பார்க்கிற வேலைக்கு சம்பளம் கொடுக்கிறோமே?' என்ற கேள்விக்கே வருவோம். அவர்கள் உழைப்புக்கு நீங்கள் ஊதியம் கொடுக்கிறீர்கள். அதைத் தாண்டி, அவர்களைக் கீழ்த்தரமாகப் பார்க்க வேண்டிய, பேச வேண்டிய அவசியம் என்ன? எளிய பதில்தான். அவர்கள் விளிம்புநிலைப் பெண்கள்.

வேலைக்காரி மீம்

சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் மேடையில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், 'வேலைக்காரி' கதை ஒன்றைச் சொல்லியுள்ளார். அதில் அவர் 'வேலைக்காரி' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தியுள்ளார். 'தான் செத்துப்போயிட்டா தன் பிள்ளைங்க வேலைக்காரியை சின்னம்மானு கூப்பிடுவாங்க என்பதால் மனைவி அவரை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்' என்பதாக அமையும் அந்தக் கதையின் கருவும். வருத்தம்! பகுத்தறிவுப் பாரம்பர்யம் கொண்ட ஓர் அரசியல் கட்சியின் முதன்மைத் தலைவர், மேடையில் அப்படி நையாண்டியாகக் குறிப்பிடும் அளவுக்கு கேட்பாரற்றுக் கிடக்கிறது பணிப்பெண்களுக்கான  மரியாதை. 'வேலைக்காரி'களின் குடும்பத்தினரும், குழந்தைகளும் கடந்த சில மாதங்களாக இந்த வார்த்தைகளை எந்த மாதிரியான மனநிலையில் எதிர்கொண்டு வருகிறார்கள் என்பது பற்றிச் சிந்திக்க, மாண்புமிகு சமூகவலைதள மக்களுக்கு மனமில்லை. தொடர் அரசியல் நிகழ்வுகளால், மீம்ஸ்களுக்கும் போஸ்ட்களுக்கும் 'வேலைக்காரி'கள் இன்னும் தேவைப்படுவார்கள்.

நிகழ்த்துங்கள்.

'இந்தப் பேரை எனக்கு வெச்சதுதான் கொடுமை' என்று தன் வாழ்வின் துயரத்தை அவ்வப்போது சிரித்துக்கொண்டே சொல்வார் ராணி அக்கா. கணவர் இறந்துவிட்டார். இப்போது தன் இரண்டு குழந்தைகளுக்காக நான்கு வீடுகளில் வேலைபார்க்கிறார். அறுந்த செருப்பை ஊக்குக் குத்தி அணிந்துகொண்டு, 'புதுச் செருப்பா? அந்தக் காசுல இந்த மாசத்துக்கு டீத் தூளு வாங்கிடலாம்ல? இந்த ஊக்கு ஒரு மாசத்துக்குத் தாங்கும்... அப்புறம் பாத்துக்கலாம்' என்று சொல்லி நகர்ந்தது அந்த மெழுகுவர்த்தி.

அவர்களைப் பார்த்து நகைக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது இங்கே?
 
குறிப்பு: இந்தத் தலைப்புக்கு வருந்துகிறோம்.

- தீபிகா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close