வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (08/02/2017)

கடைசி தொடர்பு:12:19 (09/02/2017)

'தமிழகத்தை கிரிமினல்களிடம் இருந்து மீட்க வேண்டும்' - பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நடிகை ரஞ்சனி

actress ranjini

மிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தொடரும் மர்மம் சசிகலாவின் மீதான வெறுப்பாக மக்கள் மத்தியில் உருவெடுத்துள்ளது. இந்நிலையிலும், அவர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் முடுக்கப்பட்ட சூழலில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் மௌனம் கலைத்து, 'என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள்' என்று பேட்டி கொடுத்தது அரசியல் திருப்புமுனை. அவருக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் பேசிவரும் நிலையில், 'சசிகலாவை எப்படி முதல்வராக ஏற்பது?' என்று ஏற்கெனவே தன் முகநூல் போஸ்டில்  வெடித்துப் பொங்கிய நடிகை ரஞ்சனி, தானும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நிற்பதாகக் கூறுகிறார். 

இதுதான் அந்த போஸ்ட்:

''தமிழ்நாட்டு மக்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன். அது எப்படி சசிகலாவை போய் முதல்வராக ஏற்பது? அம்மாவின் பணிப்பெண் என்பதைத் தவிர சசிகலாவுக்கு என்ன தகுதி உள்ளது... மன்னார்குடி மாஃபியா தமிழக மக்களை முட்டாள் என்று நினைக்கிறதா? இந்த அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுக்குமாறு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு விஷயத்தில் இளைஞர்களின் சக்தியை உலகம் பார்த்துள்ளது. தற்போது இந்த முட்டாள்தனத்தை மக்கள் சக்தி தூக்கி எறிவதை பார்க்க விரும்புகிறேன். அதிமுகவை நடிகரும், முதல்வருமான மறைந்த எம்.ஜி.ஆர் துவங்கினார். அவர் இறந்த பிறகு அன்புக்குரிய அம்மா அவர்கள் பொறுப்பேற்றார்கள். கிரிமினல் சசிகலா முதல்வராவதை தமிழ் மக்கள் தயவு செய்து தடுத்து, அதிமுகவை காப்பாற்ற வேண்டும். முக்கிய பதவிக்கு வருபவர்களுக்கு நல்ல தகுதி மற்றும் அனுபவம் இருக்க வேண்டும். அம்மாவின் கடைசி நாட்களின்போது அனைவரையும் சசிகலா எப்படி தடுத்தார் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தை கடவுள் காக்க வேண்டும்." 

நாம் ரஞ்சனியிடம் பேசினோம். ''நான் தற்போது கேரளாவில் வசித்தாலும், எப்போதும் தமிழ்ப்பெண்தான். ஒரு தமிழச்சியாக, இது போன்ற அநியாயங்களை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தமிழக மக்களின் நலன் கருதியே நான் எனது கருத்தை முகநூலில் பதிவு செய்தேன். 

நமது பாரம்பர்யமான ஜல்லிக்கட்டை மீட்க இளைஞர்கள் எப்படி மெரினாவில் திரண்டார்களோ, அப்படி இந்த விஷயத்துக்கும் திரள வேண்டும். தமிழக முதல்வர் நாற்காலி என்பது விளையாட்டுப் பொருள் கிடையாது. 

ரஞ்சனிஅ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் கட்டுக்கோப்பாக உருவாக்கி வழிநடத்தினார். அவர் அம்மாவை, அரசியலுக்குக் கொண்டு வர பலவகையிலும் தயார்படுத்தினார். அம்மாவுக்கு உடனடியாக முதல்வர் பதவி கொடுக்கப்படவில்லை. கட்சிக்காக கஷ்டப்பட்டார். மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிரூபித்த பின்னரே அவர் முதல்வரானார். தென்னிந்தியாவில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்த பெண் என்ற பெருமைக்குரியவர் அம்மா. மக்களுக்காகவே தனது வாழ்வை அர்பணித்துக் கொண்டவர். அவர் இருந்த காலத்தில் சசிகலாவுக்கு எந்த கட்சிப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை.

அம்மாவின் மறைவுக்குப் பின் அரங்கேறிய நாடகக் காட்சிகள், சகிக்க முடியாதவை. சசிகலா, தன்னை கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு ஏற்க ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் கேட்டுக்கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்கினார். தொடர்ந்து, முதல்வர் நாற்காலியை எட்ட அவர் நகர்த்திய காய்கள் நாடு அறிந்ததே. அம்மாவின் உதவியாளராக இருந்த, அரசியலுக்கு எந்தத் தகுதியும் இல்லாத சசிகலா, இன்று கட்சியின் பொதுச்செயலாளர், நாளை தமிழகத்தின் முதல்வர் என்பதை எல்லாம் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் கண் முன்னால் ஓர் அநியாயம் நடக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டு பேசாமலும் இருக்க முடியவில்லை. அதனால் தான் குரல் கொடுத்தேன். 

இன்றைக்கும் கிராமங்களுக்குச் சென்று பாட்டிகளுடன்  பேசினால், எம்.ஜி.ஆர் உயிரோடு இருப்பதை நம்மால் உணர முடியும். அப்படியான கட்சி அது. அவரது வழியில் மக்கள் பணி செய்து வந்தவர் அம்மா. அம்மாவின் மனசாட்சியாக இருந்தவர் ஓ.பி.எஸ். நெருக்கடியான நேரங்களில் அம்மா ஓ,பி.எஸ்ஐயே முதல்வர் பொறுப்பில் அமர்த்தியுள்ளார். அவர் முதல்வர் பொறுப்பில் தொடர்வதே கட்சிக்கும், ஓட்டளித்த மக்களுக்கும் விருப்பமானது. சசிகலா முதல்வராக வந்தால், மக்கள் மத்தியில் கட்சியின் மீதான வெறுப்பே அதிகரிக்கும். தமிழக மக்கள் இதற்கு எதிராகத் திரண்டு சசிகலா முதல்வராவதைத் தடுக்க வேண்டும். அம்மா வாழ்ந்த காலத்தில் அவரது நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ஓ.பி.எஸ் சரியான நேரத்தில் தனது மவுனத்தைக் கலைத்துள்ளார். 

சசிகலா முதலில் மக்களின் செல்வாக்கையும், நன்மதிப்பையும் பெறட்டும். பின்னர் தேர்தலில் நின்று முதல்வராகட்டும். அதை யார் தடுக்கப் போகிறார்கள்? ஆனால், அவசர அவசரமாக வரும் 9ம் தேதியன்று முதல்வராக அவர் தீவிரம் காட்டுவது ஏன்? 

தமிழக மக்களுக்காகத்தான் நான் மனம் திறந்து பேசினேன். இன்னும் நிறையப் பேர் இது பற்றி பேச வேண்டும். இளைஞர்கள் ஜல்லிக்கட்டை மீட்டதுபோல, தமிழகத்தையும் இந்த கிரிமினல் கும்பலிடம் இருந்து மீட்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரபலங்களிடையே குவியும் ஆதரவு! என்ன சொல்கிறார்கள்

-யாழ் ஶ்ரீதேவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்