Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கணவருக்கு காதலர் தினத்தில் இப்படியும் பரிசளித்து அசத்தலாம்!

காதலர், காதலர்தினம்

காதலின் கரம் பிடித்து பல காத தூரம் நடந்து வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பலருக்கும் இந்த ‘காதலர் தினமே’ ஸ்பெஷல் கிப்ட் தான். காதல்திருமணம் செய்தவர்களிடம் ஒரு சர்வே எடுத்தால் அவர்கள் இப்படியும் சொல்லக் கூடும். ‘‘வேற வழியில்லாம மாட்டிக்கிட்டேன். இவன கட்டிக்கிட்டு வாழறது எவ்வளவு கஷ்டம்னு அப்பவே தெரிஞ்சிருந்தா?’’ என்ற வசனங்கள்தான் பதிலாகக் கிடைக்கும். 

அதையும் தாண்டி வாட்ஸ் அப், பேஸ் புக் என உலகம் முழுக்க அரட்டை அடித்து பழகியவர்களுக்கு பக்கத்தில் தன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னோர் உயிர் பற்றிய எண்ணமே உலர்ந்துபோய் விட்டது. தனது இணை என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதுகூட இரண்டாம் பச்சம் ஆகிப்போனது. என்ன சாப்பிட்டான் என்பது முதல், அடுத்த நிமிடம் என்ன செய்யப் போகிறான் என்பது வரை அவனது முகநூல் தோழனுக்குத் தெரிந்த அளவுக்கு அவன் துணைக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. இந்த முரண்பாடு பல இடங்களில் கணவன் மனைவி உறவை இறுக்கமாக மாற்றி வருகிறது. 

இந்த இறுக்கமான மனநிலை, சின்னப் பிரச்னைகள் வந்தால்கூட ஒருவரைப் பற்றிய வெறுப்பை மற்றவர்கள் மனதில் அதிகம் வளரும் சூழல் உருவாக காரணமாகின்றன. ஆண்-பெண் உறவில் இருவருமே சுய சார்பு உள்ளவர்களாக இருப்பதால் மனக்கசப்பு அதிகரிக்கும் போது குடும்ப உறவில் நம்பிக்கையற்று பிரிவது இயல்பாகி வருகிறது. வாழும் காலத்தில் உறவுகளுக்கான முக்கியத்துவம் அளித்து பழைய நினைவுகளைத் திரும்பிப் பார்த்தால் இது போன்ற பிரிவுகளுக்கு வாய்ப்பிருக்காது. 

காதலர்

நினைவுகளைத் திரும்பிப் பார்க்க இந்த காதலர் தினம் எல்லாக் காதலர்களுக்கும் தன்னுள் ஒரு பொக்கிஷத்தைக் கொண்டே மலர்கிறது. காதலில் எத்தனை ஆண்டுகள் கடந்து வந்திருந்தாலும் பழைய நினைவுகளைப் பரிசளிக்கும்போது அவை மீண்டும் உங்கள் உறவைப் புதுப்பிக்கிறது. 

* பழைய நினைவுகளைப் பரிசாக்க நீங்கள் கடைகளைத் தேடி ஓட வேண்டியதில்லை. மன அலமாரியை தூசு தட்டுங்கள். 

* காதலித்த காலத்தில் வாங்கித் தந்த பரிசுப் பொருட்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் இன்னும் இருக்கும். எவ்வளவு கோபம் வந்தாலும் நிகழ்வுகளை அழிப்பதற்கான அழிப்பான் கண்டுபிடிக்கப்படவில்லையே. அந்தப் பரிசை புதுப் பொலிவூட்டுங்கள். இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப அதை புதிதாக்கலாம். அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் கூட இன்றைய பிரேமில் அழகுபடுத்தலாம். 

* காதலித்த காலத்தில் அடிக்கடி சந்தித்த இடத்துக்கு இந்த காதலர் தினத்தில் செல்ல சஸ்பென்ஸ் திட்டம் போடுங்கள். அந்த இடத்தில் உங்களுக்கு இடையில் அமரும் தனிமை உள்ளே பூட்டி வைத்த காதலை கரை தாண்டிய வெள்ளமாய் உணர வைக்கும். மனம் பேசாத பேச்செல்லாம் சேர்த்து வைத்துப் பேசும். மனம் விட்டுப் பேசுங்கள். மனக் கசப்புகள் காணாமல் போகும். 

* காதல் காலத்தில் மனம் நெகிழ்ந்த பல நிகழ்வுகளைத் தொகுக்கலாம். கடிதம், கவிதை எதுவாகவும் இருக்கலாம். பழைய நினைவுகள் உலர்ந்த மனதில் பசுமை பரப்பும். எழுத்து வடிவில் மாற்றிக் கொடுங்கள். 

காதலர்

* காதலித்த கால விருப்பங்கள் இப்போது மாறியிருக்கலாம், ஆனாலும் அந்த காலகட்டத்தில் விரும்பிய விஷயங்களை பட்டியலிட்டு அதையே பரிசாகவும் வழங்கலாம். அதில் குச்சி மிட்டாய், குருவி ரொட்டி கூட இருக்கலாம். வழக்கமாக கொடுக்கும் ரோஜா பூவாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒரு சில வண்ணத்தில் ரோஜா கொடுக்கக்கூடாது என்றெல்லாம் புதுப்புது 'ரூல்ஸ்' சொல்கிறார்கள். அதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

* இறுகிய மனதில் பெய்யும் மழை போல ஏதேதோ சந்தர்ப்பங்களில் தெரியாமல் செய்த பிழைகளுக்கான மன்னிப்பையே இந்த ஆண்டுக்கான காதல் பரிசாகவும் அள்ளிக் கொடுக்கலாம்.

* எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் எந்த விஷயத்துக்கு அடுத்தவர் மனம் இறங்குவார்கள் என்பது அனுபவத்தில் தெரிந்திருக்கும். அதையே இந்த ஆண்டின் காதல் பரிசாக அளித்து நெகிழ வைக்கலாம். அது முத்தமாகவும்கூட இருக்கலாம். 

* மன வெளி எங்கும் கொஞ்சும் மழை போல சேர்த்து வைத்த காதலை எல்லாம் கொட்டித் தீர்ப்பதற்கான பயணங்களைத் திட்டமிடலாம். பிடித்த இடத்துக்கு இருவரும் பயணிக்கலாம். இந்தக் காதல் பயணம் வாழ்வையே பிரஷ்ஷாக மாற்றிவிடும். 

* உங்களது இணை, பல ஆண்டுகளாக தனது விருப்பங்களை உங்களது காதில் கொட்டிக் கொட்டி சலித்துப் போயிருக்கலாம். அப்படியான விருப்பங்களைச் செயல்படுத்த இது நாள் வரை உங்களது ஈகோ மனத்தடையாக இருந்திருக்கும். அந்த ஈகோவுக்கு காதலர் தினத்தில் விடுமுறை விட்டு இணையின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். 

* ஊடலே காதலை மேலும் அழகு செய்யும் என்பது வள்ளுவர் நமக்கு சொல்லியிருக்கும் பாடம். ஆம் ஊடலில் இருந்து வெளி வந்து காதல் செய்துபாருங்கள்... அடடா வாழ்க்கை அவ்வளவு அழகென்று புரியும். 

- யாழ் ஸ்ரீதேவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close