Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிப்பதில் என்ன பிரச்னை'? கேள்வியெழுப்பும் நடிகை கெளதமி #OPSvsSasikala

கெளதமி

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, ஜல்லிக்கட்டு, அரசியல் பிரவேசம்... என எதைப் பற்றி கேட்டாலும் மனதில் தோன்றுவதைத் தயக்கமின்றி சொல்பவர் நடிகை கெளதமி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய குழப்பங்களைத் தீர்க்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் கெளதமி. அன்றுமுதல் அரசியல் வட்டாரத்திலும் கவனம் ஈர்க்கும் நபராக மாறியிருக்கிறார். அவரிடம் தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய நிலவரம் குறித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.   

"தமிழக அரசியல் களத்தில் நடப்பவற்றைக் கவனித்து வருகிறீர்களா?"

‘‘நான் எப்பவும் வெளிப்படையா பேசற ஆள். தமிழ்நாட்ல இப்போ என்ன நடந்திட்டு இருக்கு. மக்கள் தினமும் ஒரு புயலைச் சந்திக்கிறாங்க. ஜனநாயகம் அர்த்தம் இழந்துட்டு வருதோன்னு தோணுது. மக்களால் மக்களுக்காக நடத்தப்படற ஆட்சியில். மக்கள் சந்தோஷமா இல்லை. சின்னச் சின்ன விஷயத்துக்கும் போராட வேண்டியிருக்கு. ஜல்லிக்கட்டு எங்கள் உரிமைன்னு சொல்லி அதுக்காக போராடி அந்த உரிமைய மீட்க வேண்டிய மோசமான நிலையில நாம வாழ்ந்துட்டு இருக்கோம். ஆனா இளைஞர்கள் நடத்தினது அவ்வளவு அழகான போராட்டம். பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது." 

கெளதமி - ஜெயலலிதா

"ஜெயலலிதாவின் மரணம் பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதத் தூண்டியது எது?"

"தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அம்மாவுக்கு சிகிச்சை நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் அதோட உண்மை நிலைய அறிய முடியாம அவங்க மரணத்தை பல்வேறு குழப்பத்தோட ஏத்துக்கிட்டாங்க. அந்த குழப்பத்துக்கு தெளிவு கிடைக்கத்தான் நான் கடிதம் எழுதினேன். ஆனா அந்த கடிதம் வரலைனு சொன்னப்ப அதிர்ச்சியா இருந்தது. நான் கடிதம் எழுதியது உண்மைதான்.
 இப்போ அம்மாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்காங்க. அது எல்லாரோட சந்தேகத்தையும் தெளிவுபடுத்தல. மக்கள் சந்தேகத்துக்கு எல்லாம் பதில் கிடைக்கிற மாதிரி ஒரு தெளிவான விளக்கம் தேவை. ஜனநாயக நாடுன்னா பொதுமக்கள் கேள்விக்கு சரியான பதில் கிடைக்கணும். மக்கள் கேள்வி கேட்கறப்போ பொறுப்பான பதில் வரணும். அப்படி ஒரு பதில் மக்களுக்கு கிடைக்கும்ன்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படணும். இதெல்லாம் இயல்பா நடக்க வேண்டிய விஷயங்கள். ஆனா நாமோ எல்லா விஷயத்துக்கும் போராடிக்கிட்டு இருக்கோம். இது எனக்கு வேதனை அளிக்குது. இந்த நிலைமை மாறணும்."

"ஓ.பன்னீர் செல்வம், சசிகலா எனப் பரப்பரப்பான செய்திகளாக வந்துகொண்டிருக்கிறதே?"

"அம்மா’வுக்கும் மக்களுக்கும் எத்தனை வருஷ தொடர்பு. அவங்க மக்கள் மத்தியில் ஏற்படுத்தின நம்பிக்கை தான் மக்கள் ஓட்டுப் போட்டு தமிழக முதல்வராக அம்மாவைத் தேர்ந்தெடுத்தாங்க. மக்கள் ஓட்டுப் போட்டது அம்மாவுக்காகத்தான். தமிழ் நாட்டில் யார் முதல்வராக வருவதற்காக நடக்கிற போட்டிகளைப் பார்க்கும் போது இதெல்லாம் பேசவேண்டியதா இருக்கு. அம்மாவே அடையாளம் காண்பித்துக் கொடுத்தவர்தான் ஓ.பி.எஸ். 'ஜெயலலிதா' அம்மாமேல வச்சிருக்கிற மதிப்பு அவர் சொன்ன விஷயத்திலும் இருக்கணும்.  அவங்ளோட எதிர்பார்ப்புக்கும், கொள்கைளுக்கும் ஓ.பி.எஸ். கட்டுப்பட்டிருக்கிறார். ஒரு முறை இல்ல, இருமுறை அம்மா ஓ.பி.எஸ். கிட்ட முதல்வர் பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அப்படியிருக்கும் போது அவர் முதல்வராக தொடர்வதில் என்ன பிரச்னை. இதெல்லாம் எல்லாருக்குள்ளேயும் சாதாரணமா எழும் கேள்விகள் தான். மக்கள் உரிமைகள் மதிக்கப்படணும். அதற்கான பொறுப்பை அரசு எடுத்துக்கணும். எப்பவும் மக்களை குழப்பத்தோடவே வச்சிருப்பதற்கு பேர் ஜனநாயம் இல்லை"
 
கெளதமியின் இந்த தெளிவும், துணிவும் அரசியலுக்கு வருவாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்ப அதையும் அவரிடம் கேள்வியாகக் கேட்டு வைத்தோம். அரசியல் என்ன இப்ப வர்றமாதிரியா இருக்கு..என்று முற்றுப் புள்ளி வைத்தார்.

- யாழ் ஶ்ரீதேவி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close