Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘வீட்டுக்கு போனா... என் ரஞ்சிதம் இல்லையே’ - பிரிவுத் துயரில் தோழர் நல்லக்கண்ணு!

நல்லகண்ணு

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு. இந்திய அளவில் அரசியல் தளத்தில் இயங்குபவர்களில் நல்லக்கண்ணுவைத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். மக்களுக்கு எதிரானவற்றுக்கு எதிரான போராட்டங்களில், காத்திரமாகவும் உறுதியாகவும் போராடும் இவர், நட்போடு பழகுவதற்கு இனிமையானவர். கட்சிப் பணிக்காக கன்னியாகுமரிக்கு வந்திருந்த தோழர் நல்லகண்ணுவைச் சந்தித்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த அவரது மனைவி ரஞ்சிதம் அம்மாளின் பிரிவு அவரை எந்தளவுக்கு உருக்குகிறது என்பதை கண்களைத் தளர்த்தியபடி பகிர்ந்துகொண்டார்.

"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அவளோட இழப்பை என்னால ஜீரணிக்க முடியல. போராட்டம், பொதுக்கூட்டம்னு என் உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு இருந்தாலும், மனசு அவளை நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த வேதனையைச் சுமந்துட்டேதான் திரியுறேன்.

என்னை, என்னைவிட முழுசா புரிஞ்சிகிட்டவ என் மனைவி. என் வாழ்க்கையில எல்லா வகையிலும் அவளோட பங்களிப்பு இருந்துச்சு. அவ அப்பாவும் கம்யூனிஸ்ட் கட்சிகாரர்தான். அதனால என்னை ஏத்துக்கிறது அவளுக்கு சுலபமா இருந்திச்சி. டீச்சரா வேலை பாத்தா. காசி பாரதி, ஆண்டாள்னு எங்களோட ரெண்டு பொம்பளப் புள்ளைகள வளர்த்து படிக்க வெச்சது, ஆளாக்குனது அவங்களோட எல்லா தேவைகளையும் என்னை எதிர்பார்க்காம அவளே செஞ்சிருவா.

அரசியல் வாழ்க்கை, போராட்டம், காசு பணம் சேர்க்கத் துடிக்காத மனசுனு என் போக்குக்கு என்னை விட்டவ என் மனைவி. கட்சி வேலைகள்ல திரிஞ்சிட்டு வீட்டுக்குப் போகும்போது, கூடடைஞ்ச திருப்தி கிடைக்குற விதமா அந்த வீட்டை எனக்கானதா வெச்சிருப்பா. இப்போ வீட்டுக்குப் போனா, அவ இல்லாத அந்த வெறுமையும் தனிமையும் ரொம்ப கொல்லுது. தாங்கவே முடியாம வருது. சுத்தி எத்தனையோ பேர் இருந்தாலும், எனக்குனு யாரும் இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே இருக்கு அவளோட பிரிவு.

எந்த ராத்திரி வீட்டைக் விட்டுக் கிளம்புவேன், எந்த ராத்திரி வீடு திரும்புவேன்னு தெரியாத ஒரு வாழ்க்கை என்னோடது. உண்ணாவிரதம் இருக்கக் கெளம்புனாலும், ஜெயில்ல இருக்க வேண்டி வந்தாலும் ஒரு வார்த்தை வருத்தமாவோ, மறுப்பாவோ சொல்லாம அனுப்பிவைப்பா. என் புள்ளைங்க, 'அப்பா உங்களுக்கு வயசாயிருச்சு... அரசியல் வேலைகளையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கோங்கங்க'னு சொன்னப்போகூட, என் மனைவி அப்படி ஒருநாளும் எங்கிட்ட சொன்னதே கிடையாது. ஏன்னா, கட்சிப் பணிகள் இல்லாம என்னால இருக்க முடியாதுனு அவளுக்குத் தெரியும். ஆனா, 'நான் இல்லாமயும் உங்களால இருக்க முடியாது'ங்கிறதை இப்படிப் பிரிவுல உணர்த்திட்டுப் போயிட்டா.

நல்லக்கண்ணு, மனைவி ரஞ்சிதம்

எங்க கிளம்பினாலும், 'போய் சேந்துட்டீங்களா?'னு ஒரு போன் பண்ணுவா. 'சாப்புட்டீங்களா?'னு கேட்பா. 'எங்க இருக்கீங்க?'னு ஒரு போன் வரும். இப்போ எதுவுமே இல்ல. கண்ண மூடுனா முழுக்க ரஞ்சிதம் நெனப்பாதான் இருக்கு.

முன்னாடி நான் அசைவம் சாப்பிடுவேன். இப்ப அஞ்சு வருசமா சைவம்தான். அவ வைக்கிற மீன் குழம்புல சோத்தை ஒரு பிடி பிடிப்பேன். அவ வைக்கிற ரசம் ரொம்ப நல்லா இருக்கும். எனக்குப் பிடிக்கும்னு அடிக்கடி ரவா லட்டு செய்வா. 'என்னை நீ எதிர்பார்த்து இருக்கக் கூடாது, உனக்கு பசிச்சா சாப்பிடு'னு என் கல்யாணத்தை ஒட்டியே சொல்லிட்டேன். அதனால நாங்க சேர்ந்து சாப்பிடுவதே குறைவுதான். ஆனாலும் நான் சாப்பிடும்போது கூட உட்கார்ந்து பேசிட்டு இருப்பா.

ஒரு சுவாரசியம் என்னனா நான் ஜெயில்ல இருந்து வந்த பிறகுதான் எங்களுக்கு கல்யாணமே நடந்திச்சி. புதுமணத் தம்பதியா நாங்க பேசிக்கிட்ட விஷயங்கள்லாம், என்னோட ஜெயில் அனுபவங்களாதான் இருந்துச்சு. நிறைய கல்யாணத்தை தலைமை தாங்கி நடத்திருக்கேன். அப்போவெல்லாம், 'மனைவியை அதிகாரமா மிரட்டக் கூடாது. அன்பா இருக்கணும், சமமா நடத்தணும்'னு சொல்லித்தான் ஆசிர்வதிப்பேன். என் வாழ்க்கையில ரஞ்சிதத்துக்கு அப்படி ஒரு சமத்துவத்தை நான் கொடுத்தாலும், அவ எனக்காக ரொம்ப விட்டுக்கொடுத்து போயிருக்கா. என்னைத் தேடி வர்றவங்களைப் பத்தி அவளுக்குத் தெரியும். என் மனசு நினைக்கிற மாதிரியே அவங்களை உபசரிப்பா.

ரஞ்சிதம் நிறைய புத்தகங்க படிப்பா, பேப்பர் படிப்பா. ஜெயகாந்தன் சிறுகதைகள் பத்தி பேசுவா. நான் எதையாவது படிக்காம விட்டுட்டாலும், 'இதப் படிக்கலையா நீங்க?'னு கேட்பா. திடீர்னு எதாவது செய்தியைக் காட்டி, 'இதப் பாத்தியளா?'னு கேட்பா. 'இல்லையே...'னு சொன்னா, 'இதக்கூடப் பாக்காம என்ன படிக்கிய?'னு கேட்பா. இப்போவெல்லாம் பேப்பர், புத்தகம் படிக்கும்போது, 'எதையாச்சும் படிக்காம விட்டுட்டா அதை எடுத்துக்காட்ட அவ இல்லையே'னு ரஞ்சிதத்தோட நினைவுகள் நான் படிக்கிற ஒவ்வொரு எழுத்துலயும் பின்னிக்குது.

நான் சம்பாதிச்சுது என்னனு எல்லாருக்கும் தெரியும். வெளியே போகும்போது செலவுக்கு அவகிட்டதான் காசு வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம் நிலம் இருந்து அதுல அரிசி வரும். மத்தபடி 'அது இல்ல இது இல்ல'னு எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே சமாளிச்சு குடும்பத்தக் கொண்டு போனா. என் பிறந்தநாளுக்கு துணிமணி எடுத்துக் கொடுப்பா. அவளுக்கு, நான் வீட்டுல இருந்தாலே பரிசுதான்னு சொல்லுவா. எப்பவாச்சும் டெல்லிக்குப் போனா அவளுக்கு சேலை எடுத்துட்டு வருவேன். ரொம்ப சந்தோசப்படுவா. வெளிய போயிட்டு நேரடியா வீட்டுக்கு வர்றதா இருந்தா எதாவது பண்டம் வாங்கிட்டு வந்து கொடுப்பேன். எங்க அப்பா, என் கூடப் பொறந்தவங்களுக்கு எல்லாம் அவங்கவங்க பேருல வீட்டை எழுதிவெச்சாரு. என் பங்கு வீட்டை மட்டும் என் மனைவி பேருலதான் எழுதி வெச்சிருக்காரு. பொது வாழ்க்கையில இருக்கேன், வீட்டையும் வித்து செலவு பண்ணிடுவேனோனு பயம் அவருக்கு என்கிறார் நல்லக்கண்ணு. சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு தொடர்ந்தார்.

ரஞ்சிதம் கிறிஸ்டியன். அதனால பைபிள் கதைகளை அடிக்கடி சொல்லுவா. எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும், எல்லாரையும் சமமா நடத்தணும்னு சொல்லுவா. 'நான் செத்துப் போயிட்டேன்னா, நம்ம சொந்த ஊருலதான் அடக்கம் பண்ணனும்னு'னு சொன்னா. அவ ஆசைப்படியே செய்தேன். அவ இறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே,  அவ இனி நாள்கணக்குலதான் என்கூட இருக்கப்போறானு தெரிஞ்சுபோச்சு. அந்த நாட்கள்ல ஆஸ்பத்திரியும் வீடுமாதான் இருந்தேன். அவ இறந்த அன்னைக்கு, என்னுல இருந்து பாதி உசுரு கழண்டுபோன மாதிரி இருந்துச்சு. இப்பக்கூட அப்படியேதான் இருக்கேன்.

வயசான காலத்துல, பொண்டாட்டி போனதுக்கு அப்புறம் புருஷன் இருக்குறது கொடுமையினு சொல்லுவாங்க. இப்பதான் எனக்கும் புரியுது இந்தப் பிரிவு எவ்வளவு துயரமானதுனு. என் மனசு அவளுக்குத் தெரியும்னாலும், 'எனக்கு எல்லாமே நீதான்'ங்கிறதை இருக்கும்போது அவகிட்ட எத்தனை தடவை வார்த்தையில சொல்லியிருக்கேன்னு தெரியல. வருசா வருசம் காதலர் தினக் கொண்டாட்டங்களை செய்தியாதான் பேப்பர்ல படிப்பேன்.  இந்த வருஷம் படிக்கும்போது, ரஞ்சிதம் முகம்தான் வந்துபோகுது. அவ நெனப்பை என்ன செய்ய?!''

- த.ராம்,
படங்கள்: பா.காளிமுத்து.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close