வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (18/02/2017)

கடைசி தொடர்பு:12:33 (20/02/2017)

ஆண் பிள்ளைகளுக்கும் அப்பாவுக்கும் ஏன் டிஷ்யூம் டிஷ்யூம் ஆகிறது? #GoodParenting

ஆண்

ண் பிள்ளைக்கும் அப்பாவுக்குமான இணக்கம் பெரும்பாலும் எதிரும் புதிருமாகவே இருக்கும். தன் வெற்றி, சந்தோஷம், துக்கம், கவலை, காதல் என சகல விஷயங்களையும் தன் அம்மாவிடம் சொல்லும் ஆண் பிள்ளைகள் அப்பாவிடம் முகம் கொடுத்துக் கூட பேசுவது குறைவே. இந்த போக்குக்குக் காரணம் என்ன, இதனால் ஆண் பிள்ளை சந்திக்கும் வேதனைகள் என்ன என்பது பற்றிப் பேசுகிறார் குழந்தைகள் நல ஆலோசகர் பிரீத்தா நிலா .

எந்த ஒரு குழந்தையும் தன்னை தொட்டிலில் படுக்க வைத்து தாலட்டுப் பாடி, தொட்டிலில் இருந்து எழுப்பி, பால் கொடுத்து, சாப்பாடு ஊட்டி, குளிப்பாட்டி, உடன்ஆண் பிள்ளைகள் பற்றி-குழந்தைகள் நல் ஆலோசகர் பிரீத்தா நிலா விளையாடுவதுன்னு தன்னுடன் பெரும்பாலான நேரங்களை செலவிடும் அம்மாவுடன்தான் அதிக இணக்கமாக இருக்கும். மேலும், நமக்கு எல்லாமே அம்மாதான் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் ஆழமாக உருவாகும். அத்தோடு தன்னைப் பத்தி, தன்னோட செயல்பாடுகள், வேலை, உடல்நலம்னு எல்லா விஷயத்தையும் குழந்தைகிட்ட அம்மாக்கள் ஷேர் பண்ணிக்குவாங்க. குழந்தையை குளிக்க வெச்சு, டிரெஸ் மாட்டிவிட்டு, சாப்பாட்டு ஊட்டுற சமயத்துலக்கூட, ஏன்டா என்னப் படுத்துற, அம்மாவுக்கு வீட்டு வேலை, துணி துவைக்குற வேலை, கடைக்குப் போறதுன்னு நிறைய வேலை இருக்கு. நீ சமத்தா அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணுப்பான்னு கொஞ்சலுடன் சொல்லுவாங்க. அதேமாதிரி அம்மாவுக்கு உடம்பு சரியில்லப்பா. அதனால அம்மாவை சத்தம்போட வெக்காதன்னு தன் கஷ்ட நஷ்டங்களையும் பரிவாகச் சொல்லுவாங்க. இதைத் தாண்டி, உனக்கு ஒரு குட்டிப்பாப்பா பிறக்கப் போகுது. உன்கூட விளையாட புதுசா ஒரு ஆள் வரப்போறாங்க. இப்படியெல்லாம் தன்னப்பத்தின எல்லா விஷயங்களையும் குழந்தைக்குப் புரியும்படி சொல்லிப் பழகுவது அம்மா மட்டுமே. மேலும், அம்மாக்களும் தன்னோட பெரிய பலமாகவும் ஆண் குழந்தையைப் பார்ப்பாங்க.

இதனாலேயே ஒரு குழந்தை, 'அம்மா எனக்கு சுச்சா வருது. பசிக்குது. என் டீச்சர் என்னை பாராட்டினாங்க... இப்படி தன்னோட எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவில்லாம பேசுவாங்க. அம்மாவின் இந்த பரிவும், பரிசுத்த அன்புமே ஆண் பிள்ளை வளர்ந்து பெரியவனாக ஆகும்வரை அம்மாமீது பாசத்தை அதிகமாக வெச்சிருப்பாங்க. அதனால்தான் தான் கல்லூரி, வேலைக்குச் சென்ற பிறகும் தன்னோட எல்லா விஷயங்களையும், தான் ஒரு பெண்ணை காதலிச்சாலும் அதை முதலில் அம்மாவிடம் சொல்லித்தான் அனுமதி பெறுவான்.

மேற்சொன்ன அம்மாக்களின் செயல்பாடுகளை எல்லாம் அப்பாக்கள் பெரும்பாலும் செய்வதேயில்லை. தனக்கு ஓய்வு கிடைக்கும்போது, தோன்றினால் மட்டுமே குழந்தையை தூக்கி கொஞ்சுவார்கள். குழந்தை அழும்போது அம்மாவிடமே குழந்தையைக் கொடுப்பது. தான் கோபமாக இருக்கும்போது அக்கோபத்தை குழந்தை மேல் காட்டுவது. குழந்தை யூரின், டாய்லெட் போனால் சுத்தம் செய்ய கூச்சப்படுவது. சின்ன விஷயத்துக்குகூட திட்டுவது, அடிப்பது. இதெல்லாம் அப்பாவின் மீது குழந்தைக்கு பயத்தையும், வெறுப்பையும் உண்டாக்கி விடுகிறது. ரொம்பவே பழக்கம் இல்லாத, ஓரளவுக்கு மட்டுமே பழக்கம் இருக்குற யார்கிட்டயும் நாம மனம் விட்டுப் பேசமாட்டோம். அதுதான் குழந்தைப்பருவத்துல இருந்தே தொடரும். இந்த பழக்கம்தான் அப்பா-மகன் உறவிலும் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே தொடர்கிறது.

ஆண் 

பெண் குழந்தைங்களை அப்பா அடிச்சாலும், திட்டினாலும் அக்குழந்தை அதே இடத்துல இருக்கும். கோபத்தை மறந்து கொஞ்ச நேரத்துல அப்பாக்கூட பெண் பிள்ளைங்க சகஜமா பேசுவாங்க. ஆனா ஆண் பிள்ளை உடனே அந்த இடத்தை விட்டுப் போவதோடு, ரொம்ப காலம் அப்பாகிட்ட பேசாம கோபமா இருப்பாங்க. அப்பாவின் முகம் பார்த்தே பேச மாட்டாங்க. இந்நிலை ஆண் பிள்ளை வளர்ந்து பெரியவனாக ஆனப்பிறகும்கூட தொடரும்.

பொதுவா ஒரு குழந்தை தன் அம்மாவிடம் அன்பும், அப்பாவிடம் அறிவும் பெற வேண்டும் எனச் சொல்வார்கள். அம்மாவிடம் அன்பு கிடைத்தாலும், அப்பாவுடனான இணக்கம் இல்லாததால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அப்பாவிடம் இருந்து அறிவு கிடைப்பதில்லை. தனக்கு தெரிஞ்ச வெளியுலக அனுபவங்கள், வாழ்க்கை முறைகளை குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது அப்பாவின் கடமை. அக்கடமையை பெரும்பாலான அப்பாக்கள் செய்வதில்லை. அதுமாதிரியே முன்பெல்லாம் அப்பாக்கள்தான் குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கத்துக்கொடுப்பாங்க. இப்போ சைக்கிள் விழாம இருக்க அதன் பின்னாடி ரெண்டு சின்ன  வீல் இருக்கும்படியான சைக்கிளை வாங்கிக் கொடுத்து,  குழந்தைகளையே ஓட்டி பழகிக்கச் சொல்லுறாங்க. இதெல்லாம் பார்க்கவே கஷ்டமா இருக்கு. இது வெறும் ஒரு சைக்கிள் ஓட்டும் பழக்கமா பார்க்காம, தன் பையனோட வாழ்க்கையில ஒரு அத்யாயமா பார்த்தால்தான் அதோட வலியும், உணர்வும் புரியும். இப்படி அப்பாகிட்ட இருந்து கிடைக்க வேண்டிய அறிவு கிடைக்காத ஆண் பிள்ளைங்க, அப்பாமேல வெறுப்பைக் காட்டுவாங்க. அதோட தனக்காக அடையாளத்தை, வெற்றியைப் பெற அதிக முயற்சிகளையும் எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். அத்தோடு அப்பாவால் மட்டுமே சரிசெய்யப்பட வேண்டிய ஒரு பிரச்னையைக்கூட, அப்பாக்கூட இணக்கம் இல்லாததால, தானே சரிசெய்ய முயன்று கூடுதல் சிக்கல்களையும் ஆண் பிள்ளைகள் ஏற்படுத்திக்கொள்வாங்க.

பல அப்பாக்கள் குழந்தையை தன் தோள், மார்பு மேல் வைத்து வளர்ப்பதையும், அத்தகைய அப்பாக்களின் மீது ஆண் பிள்ளைகள் பாசத்துடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது. அப்போ குழந்தை பிறந்தது முதல் அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்துலயும் அம்மா, அப்பா ரெண்டு பேருமே போதிய அக்கறையும், பாசமும் கொடுத்து வளர்க்கறப்போ நிச்சயம் பெற்றோர் இருவர் மீதும் குழந்தைங்க பாசமா இருப்பாங்க. இதுமாதிரி இருக்குற தன் ஃப்ரெண்டைப் பார்க்கறப்போ, தன் அப்பாகிட்ட பாசம் கிடைக்காத குழந்தைங்க ஏங்கிப்போறதோடு, தனக்குள்ள தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்குவாங்க. குறிப்பா எல்லா அப்பாக்களுமே தன் பிள்ளை நல்லா இருக்கணும்னுதான் மனசுல நெனசுட்டு இருப்பாங்க. ஆனா தங்கிட்ட இருக்குற பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாம இருப்பாங்க. அதுவே ஆண் பிள்ளைக்கும் அப்பாவுக்கும் பெரிய இடைவெளியை உண்டாக்குது. அப்போ சின்ன வயசுல இருந்து ஆண் பெண் பாகுபாடு இல்லாம, எல்லா வேலையையும் செய்யக் கத்துக்கொடுத்து ஆண் குழந்தையை வளர்க்கணும். அப்போதான் தான் தகப்பன் ஆனாலும், தன் குழந்தைக்கான எல்லா தேவைகளையும் கூச்சப்படாம செய்துவிட்டு, குழந்தையின் அன்பையும் அப்பாக்கள் பெற முடியும்.

- கு.ஆனந்தராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்