வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (22/02/2017)

கடைசி தொடர்பு:14:02 (23/02/2017)

'ஆண்மை என்ற வார்த்தையை அழித்தெறியுங்கள்!' - சீறும் கவிஞர் மாலதி மைத்ரி

ஆண்மை

‘‘பெண் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படும் அவலம் பலரையும் பொங்கி எழ வைத்துள்ளது. அத்தனை பெண்ணுடலிலும் இது ஓர் எச்சரிக்கை அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை யோனியாக மட்டுமே பார்க்கும் இந்தச் சமூகத்துக்கு இனி மேல் ஏன் ஆண் குழந்தைகளைப் பெற்றுத்தர வேண்டும்?'' ஆண்மை என்ற வார்த்தையை அழித்தெறியுங்கள் என சீற்றத்தின் உச்சத்தில் கேட்கிறார் கவிஞர் மாலதி மைத்ரி.மாலதி மைத்ரி

'பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க கருப்பையை எடுத்துவிட வேண்டும்' என்றார் பெரியார். மாலதி மைத்ரியோ, 'ஆண் குழந்தையைக் கருவிலேயே அழிக்க வேண்டும்' என தனது முகநூலில் பதிவுசெய்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரிடம் பேசினோம்.

''பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகள், குழந்தை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்துக்காக அவ்வாறு கொடுமைப்படுத்தப்படவில்லை. ஆண் தனது வக்கிரத்தை தீர்த்துக்கொள்வதற்காக நடக்கிறது. இப்படிப்பட்ட ஆணினத்தை ஏன் பெண் பிரசவித்துத் தர வேண்டும்? இப்படிப்பட்ட கேடுகெட்ட சமூகத்தை நாம் உருவாக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் ஆண்டுக்கு 30 லட்சம் பெண்கள் கருவிலேயே கொல்லப்படுவதாக இந்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. சராசரியாக மாதத்துக்கு 2,000 பெண் கருக்கொலை நடக்கிறது. பெண் இனத்துக்கு எவ்வளவு அநியாயம் நடந்தாலும் வாய் திறக்க இங்கே யாரும் தயாராக இல்லை. இது இழப்பாகத் தோன்றவில்லை. ஆண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்க வேண்டும் என்று சொல்லும்போது மட்டும் எல்லோருக்கும் கோபம் வருகிறது. ஆண்மை என்ற சொல்லையே இந்த அகராதியில் இருந்து எடுத்தெறிய வேண்டும். ஆண் மீது இந்தச் சமூகம் கட்டமைத்துள்ள அத்தனை விஷயங்களையும் உடைத்தெறிய வேண்டும்.

நான் சிறு வயதில் இருந்தே பெரியார் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவள். பதினாறு வயதிலேயே பூ, பொட்டு வைத்து அலங்கரித்துக்கொள்வதை நிறுத்திவிட்டேன். இருபது வயதில் எனது உடை விஷயங்களை மாற்றிக்கொண்டேன். இந்த மாற்றம் 90 சதவீதம் எனக்குப் பாதுகாப்பை அளித்தது. என் மீதான பயத்தை உருவாக்கியது. குழந்தைகளை வளர்க்கும்போதே கல்வி, உணவு, உடை என்று எந்த விஷயத்திலும் பாலின பேதத்தை திணிப்பதை நிறுத்த வேண்டும். இங்கோ, குழந்தைகள் பார்க்கும் கற்றுக்கொள்ளும் அத்தனை விஷயங்களிலும் பெண் அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும்.

ஆண்மை

தமிழகத்தில் பெரியார் வழியில் வந்த திராவிடக் கட்சிகள்தான் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றன. 'பெண்ணை அடிமைப்படுத்தும் திருமண முறையே வேண்டாம்' என்று பெரியார் சொன்னார். அந்தப் பெரியார் வழியில் வந்த தலைவர்கள், பல தாரம் மனம் செய்துள்ளனர். 'பெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்கக் கூடாது' என்றார் பெரியார். இவர்கள் அவர் சொன்ன எதை செய்திருக்கிறார்கள். சமூகத்தின் தவறான முன்னுதாரணங்களாக உள்ளனர். 'திருமணத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்கக் கூடாது' என்று  பெரியார் சொன்னார். ஆனால், திராவிடக் கட்சிகள் பெண்ணின் திருமணத்துக்கு தாலிக்குத் தங்கம் கொடுக்கிறார்கள். அரசின் திட்டங்களும் பெண்ணை அடிமையாகவே வைத்திருக்கிறது. இது, மீண்டும் பெண்ணை ஆணுக்கான உடைமையாக மாற்றும் சிந்தனையே. பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் வாய்ப்பு வழங்குவதிலும் சூழ்ச்சியே நிறைந்துள்ளது. உள்ளாட்சியில் 50 சதவீதம் ஒதுக்குவதாக சொன்னதுகூட பெண்களின் வாக்கு வங்கியைப் பயன்படுத்திக்கொள்வதற்கான யுக்தியே.

மீடியாவிலும் ஆணுக்குப் பெண்ணை அடிமையாக சித்திரிக்கும் விஷயங்கள் பரப்பப்படுகின்றன. ஒரு சாதிக்கு இன்னொரு சாதி அடிமை என்று மீடியாவில் பேசிட முடியாது. ஆனால், ரஜினிகாந்த் ஒரு சினிமாவில் ‘பெண் ஆணுக்கு அடங்கித்தான் போக வேண்டும்' என்று பேசுகிறார். ஆணுக்குப் பெண் அடிமை என்பது போன்ற காட்சிகள், வசனங்கள், பாடல்கள் ஆகியவற்றைத் தணிக்கை செய்து வெளியிட வேண்டும். இதுபோன்ற விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பெண்ணடிமைத்தனத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும். 

தங்களை அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்ளும் இலக்கியவாதிகள், தங்கள் மனைவியை, மகளை அடிமையாக, மோசமாக நடத்துவதைக் கண்டிக்கிறேன். அடிமையாக நடத்துவதோடு, அவர்களைப் பற்றி புகழ்ந்து கடிதம் எழுதுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். சமூகப் பிரச்னைகளை எல்லாம் தாங்குவதாக கூறிக்கொள்ளும் இலக்கியவாதிகள், குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் வீட்டுப் பெண்களின் தோளில் சுமத்திவிட்டு எளிதாகப் பாராட்டிவிடுகின்றனர். இதுவும் மறைமுக பெண் சுரண்டல்தான். ஒரு காபியிலோ, உணவிலோ ஆணின் உழைப்பு இல்லாவிட்டால், அதை கிரிமினல் குற்றமாகவே பதிவுசெய்கிறேன். பெண்ணைத் தெய்வமாகப் போற்றி அடிமைப்படுத்தும் மதவாதிகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

 'கருப்பை அரசியல்' அந்தக் காலகட்டத் தேவைக்கு ஏற்ப பெண்ணடிமைத்தனத்தில் இருந்து மீள்வதற்காக பெரியார் சொன்னது. இன்று நடப்பது யோனி அரசியல். சிறு குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவது இப்படித்தான். ஆண்களுக்குப் பெண் என்றால் ஒரே ஓர் உறுப்பு மட்டும்தான் தெரிகிறது. இதற்கு எதிரான எனது அறச்சீற்றமாக, ஆண் குழந்தைகளை கருவில் அழிக்க வேண்டும் என்று கூறினேன். பெண்ணடிமைக்கு எதிரான சிந்தனையை உருவாக்கவே இந்த எண்ணத்தை நான் பதிவுசெய்தேன். லட்சக்கணக்கிலான பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவதையும், பிறந்த பின் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதையும் இதே கோபத்தோடு எதிர்கொள்ளுங்கள். தடுத்து நிறுத்துங்கள் ’’ என்று விளாசுகிறார் மாலதி மைத்ரி.

- யாழ் ஶ்ரீதேவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்