'எனது சொத்துகளை பிள்ளைகளுக்கு சமமாகப் பங்கிடுவேன்!' அமிதாப்

அமிதாப்

ண், பெண் இருவரும் சரிநிகர் சமம். இருவருக்கும் சமமான சொத்துரிமை உண்டு என அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டிருந்தாலும், நடைமுறையில் நாம் காண்பது வேறுவிதமாக உள்ளது. சமூகத்தில் ஆண், பெண் சமத்துவத்தைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. அதிலும், சொத்துரிமை என வரும்போது, ஆண் வாரிசுக்கே சொத்து என்ற கருத்து, எழுதப்படாத சட்டமாக உள்ளது. சொத்துகளைப் பங்கிடும்போது, ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் பின்பற்றப்படுகிறது. ஆண் வாரிசுக்கே வீடு, நிலம் போன்ற சொத்துகள் வழங்கப்படுகின்றன. பெண்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டாலே, சொத்துகளில் உரிமை கோரக்கூடாது என்ற கோட்பாடு நிலவுகிறது. சட்டத்தின் வழியாக சொத்துரிமை கேட்டுப் போராடினாலும், உரிமையைப் பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கவேண்டியுள்ளது. ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி எல்லாத் தரப்பினரிடமும் இந்த மனநிலையே உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் செயல், நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

தனது 70 வயதிலும் சுறுசுறுப்புடன் பல வெற்றிப் படங்களில் நடித்து வருபவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். கடந்த ஆண்டு போர்பஸ் நாளிதழ் வெளியிட்ட 'உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள்' பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்திருந்தார்.  ட்விட்டரில் அமிதாப்பை லட்சக்கணக்கானவர்கள் பின்பற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு, தனது பேத்திகளான நாவியாநவேலி மற்றும் ஆத்ரேயா இருவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், பேத்திகள் இருவரும் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு எனக் குறிப்பிட்டு, டிவிட் செய்திருந்தார். அது வைரலானது. 

அமிதாப் பச்சனுக்கு ஸ்வேத்தா பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் என இரண்டு பிள்ளைகள். ஸ்வேத்தா பச்சன் ஊடகத் துறையில் கட்டுரையாளராகவும், அபிஷேக் பச்சன் பாலிவுட் நடிகராகவும் உள்ளார். நேற்று, அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆண், பெண் சமத்துவத்தை நான் ஆதரிக்கிறேன்' என டிவிட் செய்திருந்தார். 'என் இறப்புக்குப் பிறகு, என் இரண்டு பிள்ளைகளுக்கும் எனது சொத்தில் சம உரிமை உண்டு' என எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பேப்பரை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு ட்விட்டரில் வைரலாகப் பரவிவருகிறது. அமிதாப்பச்சனைப் பின்தொடரும் லட்சக்கணக்கான ரசிகர்களும், சொத்துரிமைக்கு ஆதரவு தெரிவித்து பதில் டிவிட் செய்துவருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், முன்னோடி நடிகரான அமிதாப் பச்சன், பெண்ணியச் சிந்தனைக்கு ஆதரவாகக் குரல்கொடுத்திருப்பதை, பொது மக்களும் பெண்ணியவாதிகளும் வரவேற்றுள்ளனர். 

- ஆர்.ஜெயலெட்சுமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!