விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளின் விளையாட்டு என்ன பெற்றோர்களே? #GoodParenting | What does your children play during holidays?

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (04/03/2017)

கடைசி தொடர்பு:19:20 (04/03/2017)

விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளின் விளையாட்டு என்ன பெற்றோர்களே? #GoodParenting

கேம் விளையாடும் குழந்தை

''ம்முடைய மரபு விளையாட்டுக்களை மறந்து, செல்போன், டேப்லெட் உள்ளிட்ட கேட்ஜெட்களில் கேம்ஸ் விளையாடுவதை நோக்கியே இன்றைய குழந்தைகள் பலரும் பயணிக்கிறார்கள். இதனால், குழந்தைகளுக்கு உண்டாகும் உடல்நல, மனநல சிக்கல்கள் ரொம்பவே அதிகம்'' என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர், ப்ரீத்தா நிலா. இந்த ஆபத்தான உலகில் இருந்து குழந்தைகளை ஆரோக்கியமான உலகுக்கு மாற்ற பயனுள்ள ஆலோசனைகளையும் கூறுகிறார்.

"குழந்தைகள் அவங்களாகவே எதையும் கத்துக்குறது இல்லை. பெற்றோராகிய நாம் செய்றதைப் பார்த்துதான் செயல்படுறாங்க. செல்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளில் நாம் அதிக நேரம் நேரத்தைச் செலவழித்தால், குழந்தைகளும் அதையெல்லாம் பயன்படுத்த ஆசைப்படுவாங்க. இன்றைய பெரும்பாலான பேரண்ட்ஸ் வேலைக்குப் போகிறவங்களா இருக்கிறதால, குழந்தைகளைப் பக்கத்தில் இருந்து கவனிச்சுக்க முடியலையேன்னு கவலைப்படுவாங்க. அதனால், குழந்தைகளை திருப்திப்படுத்தவும் சந்தோஷப்படுத்தவும் சாக்லேட், கேக், பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுக்குறாங்க. வீட்டுக்கு வந்ததும், குழந்தைகள் அடம்பிடிக்கிறதைத் தவிர்க்க, செல்போனை விளையாட கொடுத்துடறாங்க. இந்தச் செயல்பாடுதான் குழந்தைகளுக்குத் தொடர்ந்து செல்போன் கேம்ஸ் உள்ளிட்ட கேட்ஜெட் பயன்பாட்டு ஆர்வத்தை அதிகப்படுத்தும். இந்தச் செயல்பாட்டை மாற்றணும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விளையாட்டு, பயிற்சி முறைகளை சொல்லித்தரணும்" என்கிற ப்ரீத்தா நிலா, சுவராஸ்யமான சில செயல்முறைகளை சொல்கிறார். 

மகிழ்ச்சியாக விளையாடும் குழந்தை

"ஆடுபுலி ஆட்டம், கபடி, உறியடித்தல், கோலின்னு நம் மண் சார்ந்த விளையாட்டுகளை விளையாடப் பழக்கப்படுத்தலாம். குழந்தைகள் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், விடுமுறை தினங்களிலும் செடிகளை வளர்த்துப் பராமரிக்க, வளர்ப்புப் பிராணிகளை வாக்கிங் கூட்டிச்செல்ல, விதைப் பந்து செய்யவும் பழக்கப்படுத்தலாம். இதுல, களிமண் மற்றும் பசுவின் சாணத்தைச் சரிசமமாக கலந்து, கொஞ்சம் தண்ணி தெளிச்சு சிறு சிறு உருண்டைகளா செஞ்சு, அதுக்கு நடுவுல ஏதாச்சும் ஒரு பழத்தின் விதையை வெச்சுடணும். அந்த விதைப் பந்துகளை ஒருநாள் நிழலிலும், மறுநாள் வெயிலிலும் உலரவெச்சு வீட்டிலேயே ஒரு அட்டைப் பெட்டியில் பத்திரப்படுத்தச் சொல்லலாம். வார இறுதியில் குழந்தைகளை அவுட்டிங் கூட்டிட்டுப் போகும்போது, மரம் வளரும் சூழல் உள்ள சாலையோரங்களில் அந்த விதைப்பந்துகளை போடச் சொல்லணும். மழைப் பெய்யும் சமயத்தில் விதைப் பந்து செடியாக வளர ஆரம்பிக்கும். இது மாதிரியான செயல்பாடுகளை சரியாக செய்திருந்தா, மாதந்திர காலாண்டரில் டிக் அடிச்சு, குழந்தைகளைப் பாராட்டி உற்சாகப்படுத்தலாம். அவுட்டிங் கூட்டிப்போகலாம்.

நம் வீட்டின் அக்கம்பக்கத்தினர் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவங்க சிலருடன் ஒன்றிணைந்து, ஒவ்வொரு நாள் மாலையில் ஒவ்வொரு பெற்றோராக அல்லது எல்லாப் பெற்றோரும் சேர்ந்து குழந்தைகளின் விளையாட்டு உலகில் பங்கெடுக்கலாம். குறிப்பாக, உறியடிக்கும் விளையாட்டை பல வீட்டாரும் சேர்ந்து விளையாடினால், அந்தச் சூழல் திருவிழா மாதிரியே இருக்கும். இந்த விளையாட்டுக்கு நூறு ரூபாய்கூட செலவாகாது. குழந்தைங்களை குழுவாக வீட்டுக்குப் பக்கத்துலேயோ, குடியிருப்புக்கு உள்ளேயோ பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டச் செய்யலாம். இந்த விஷயங்களை எல்லாம் நடைமுறைச் சாத்தியமாக்கினால், செல்போன், வீடியோ கேம் உள்ளிட்ட கேட்ஜெட்டுகள் பக்கத்தில் இருந்து குழந்தைகள் கவனத்தை திருப்பிடுவாங்க'' என்கிறார்.

"பள்ளியிலும் டியூசன் சென்டரிலும் மாறி மாறி படிக்க வற்புறுத்தும்போது, படிப்பைத் தாண்டிய ஓர் உலகம் வேண்டும் என்ற ஆசையே குழந்தைகளுக்கு உருவாகுது. கேட்ஜெட் உலகம் உடல்ரீதியாவும், உளவியல் ரீதியாவும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். நீண்ட நேரம் ஒரே இடத்துல உட்கார்ந்து செல்போன், டேப்லெட்டுல கேம் விளையாடுவது கண்நலன் மற்றும் உடல்நலத்துக்கு உகந்தது இல்லை. அதிக ஸ்கோரை நோக்கி ஆர்வமா விளையாடுறப்போ திடீர்னு அவுட் ஆனா, அந்த தருணத்துல உண்டாகும் ஷாக்கும், கேட்ஜெட் கேம் குறித்த சிந்தனையும் குழந்தைகளை மனரீதியா பாதிக்கும். புதுப்புது டெக்னாலஜி, புதுபுது கேம்ஸ் வந்துகொண்டே இருக்கு. குழந்தைகள் அடிக்ட் ஆகிட்டா, அந்த உலகத்தைத் தாண்டி வெளியே வருவது அவ்வளவு எளிதானது அல்ல" எனக்கூறும் ப்ரீத்தா நிலா, இறுதியாக கூறும் வார்த்தைகள் முக்கியமானது. 

"உயிரற்ற எலக்ட்ரானிக் விளையாட்டுகளில் கவனம் செலுத்துறது குழந்தைகளின் நலனுக்கு உகந்தது இல்ல. தங்களை ரெஃப்ரெஸ் செஞ்சுக்க, தன் உணர்வை சக நண்பர்கள், உறவுகள், அன்பான மனிதர்களிடம் வெளிப்படுத்துவதுதான் ஆரோக்கியம். அதுக்கு உயிருள்ள, உணர்வுள்ள மேற்சொன்ன பாசிடிவ் செயல்பாடுகளை அடுத்தடுத்த சாய்ஸா கொடுத்துச் செய்யவைக்கணும். அது, குழந்தைகளின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வெச்சுக்க முடியும். அதுக்கு பெற்றோரும் மனசு வெச்சு, நேரம் ஒதுக்கினால் மட்டுமே சாத்தியம். இதன் மூலம் எல்லாக் குழந்தைகளும் நல்ல சூழலில் வளருவாங்க". 

- கு.ஆனந்தராஜ்


டிரெண்டிங் @ விகடன்