வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (07/03/2017)

கடைசி தொடர்பு:17:45 (07/03/2017)

'பெண்கள் பிடிக்காதுனு சொல்றவங்க ’ஹிப்போகிரிட்’ ஆகத்தான் இருப்பாங்க!’’ - எழுத்தாளர் ஜெயமோகன் #CelebrateWomen #VikatanExclusive

jeyamohan
 

பெண்கள் தங்களது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க நாங்கள்  ஆண்கள் என்கிற அடையாளத்தை எடுத்துக்கொள்வதாக நீங்கள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள்..பெண்கள் என்பதால் அவர்களுக்கு சில சலுகைகள் அளிப்பதில் ஏன் இத்தனை எதிர்ப்பு. 

''நான் பெண்ணுக்கு ஒரு நண்பனாக தந்தையாக சொல்லக் கூடிய விஷயம் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுப்பேற்றுக் கொள்ளாமல் சுதந்திரத்தைப் பற்றி பேசக்கூடாது. அவர்களுக்கு பெண் என்ற சில கடமைகள் இருக்கு. பெண்ணுக்கு உடல் சார்ந்த சில பலவீனங்கள் இருக்கு. பெண்ணுக்கு நம்மோட இந்தியாவில் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னைகள் இருக்கு. அது வேற. அது அவங்ளோட உரிமை. சலுகை என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். ஆனால் முக்கியமான தருணங்களில் பெண் பொறுப்பேற்றுக் கொள்வது என்பது விடுதலையை அடைவதற்கான முதல் படி.''  

பெண்கள்

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள், அவங்க எப்படி வளரணும் என்று எதிர்பார்க்குறீங்க? 

''முதலில், பெற்றோர் குழந்தைகளை வளர்க்க முடியாது. அவங்களா வளர்வாங்க. என்னுடைய பெண், அவளுக்கு இப்போது 19 வயதாகிறது. அவள் வந்திருக்கும் பாதையை வைத்துப் பார்த்தால் நான் எண்ணியது நடந்திருப்பதாக உணர்கிறேன்.  இதுவரை நான் பார்த்த பெண்களின் மிகச்சிறந்த வாசகி என் பெண் தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. ஒரு தந்தையாக எனக்கு அதில் மிகப்பெரிய பெருமை இருக்கு. 

இரண்டாவதாக, எந்த சபையிலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இல்லாமல் எழுந்து பேசக் கூடிய ஒரு குரல் அவளுக்கு வேண்டும் என்று நினைத்தேன். அது என் மகள் கிட்ட இருக்கு. அதன் பின் கருத்துகளை மிக எளிமையா உள் வாங்கிக்காம... அதன் எல்லாத் தரப்புகளையும் புரிந்துகொண்டு ஒரு சமநிலை நிலைப்பாட்டை எடுக்கக் கூடியவளா இருக்கணும்னு எதிர்பார்த்தேன். எம்பிக் குதித்தல், தாண்டிக் குதித்தல் மாதிரியான அசட்டுத்தனங்கள் இருக்கக் கூடாது என்று நினைத்தேன். 

அதாவது பெண்ணியக் கருத்து என்று வந்த உடன் உடனே அதை ஏற்றுக்கொள்ளாமல் அதன் மறு பக்கம் என்ன, வரலாற்று ரீதியாக இதற்கான இடம் என்ன, இன்றைய நடைமுறைத்தேவை என்ன? இதெல்லாம் யோசிக்கும் ஒரு நிலை அவளுக்கு வேண்டும். அந்த வகையில் எனது மகளிடம் நான் தொடர்ந்து உரையாடிக்கொண்டுதான் உள்ளேன். என்னை விமர்சிக்கும் உரிமையும் அவளுக்கு உள்ளது. அந்த உரையாடல் வழியா அவள் தன்னியல்பில் உருவாகி வர்றா. இப்படித்தான் அவளை வடிவமைக்கணும் என்று நான் நினைக்கிறேன். அது சாத்தியமாகியிருக்கு.''  

பெண்களை உங்களுக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? 

''பெண்களைப் பிடிக்குமான்னு ஒரு ஆண்கிட்ட கேட்டா, பிடிக்காதுன்னு சொல்றவன் ஒரு 'ஹிப்போகிரிட்’டா தான் இருப்பான். எல்லா ஆண்களுக்கும் பெண்களைப் பிடிக்கும். எல்லாப் பெண்களையும் பிடிக்குமான்னு கேட்டா... அதுவும் பொய்யான பதிலாதான் இருக்கும். எல்லாப் பெண்களையும் பிடிக்காது. எல்லா ஆண்களையும் பிடிக்கிறதில்லையே. எனக்கு ஏதோ ஒரு வகையில அறிவார்ந்த அடிப்படைத் தகுதி கொண்ட மனிதர்கள்தாம்  என்னை நெருங்க முடியும். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. 

உங்களது பார்வையில் பெண்ணியம் என்றால் என்ன? அது முன் வைக்க வேண்டிய வாதங்கள் என்ன?

''பெண்ணியம் இது ஆங்கிலத்தில் பெமினிசம் என்று கூறப்படுகிறது. அதற்கு  ரெண்டு மரபுகள் உண்டு. ஒன்று பிரெஞ்சு மரபு, இன்னொன்று பிரிட்டிஷ் மரபு. பிரெஞ்ச் பெண்ணியம் என்ன சொல்கிறது என்றால், பெண் என்பதற்கு இந்தச் சமுதாயத்தில் என்னென்ன அடையாளங்கள் சொல்லப்பட்டிருக்கிறதோ அத்தனை அடையாளங்களையும் விட்டு வெளியில் வந்தாக வேண்டியிருக்கிறது. 

தமிழ்நாட்டில் இங்கிருக்கிற பெண்கள் பேசக்கூடியது பிரெஞ்சு பெமினிசம் அல்லது அமெரிக்கன் பெமினிசமே.. அதாவது ஆம்பளை மாதிரி மாறுவது. ஆண் செய்வதை எல்லாம் நாம் செய்வது, அவ்வளவுதான். அதை ஒரு வகையில் 'நான்சென்ஸ்' என்றுதான் நான் நினைக்கிறேன். 

பிரிட்டிஷ் பெமினிசம் என்பதுதான் எனக்கு மனசுக்கு ரொம்ப நெருக்கமானது. அது என்னவென்றால் பெண் அவளுக்கு உயிரியல் ரீதியாக , பண்பாட்டு ரீதியாக தனக்கு வந்துள்ள அடையாளங்களை அவளது ஆற்றலாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதை அவள் தனது வெற்றிக்காகப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக தாய்மை என்பது பெண்ணுடைய மிகப்பெரிய அடையாளம். அது அவளுடைய வெற்றியாக கருவியாக ஆக முடியும். இதையே பிரிட்டிஷ் பெமினிசம் வலியுறுத்துகிறது. இந்த பெமினிசம்தான் எனக்கு நெருக்கமான உடன்பாடான பெமினிசமாக உள்ளது.''

......

--த.ராம், யாழ் ஶ்ரீதேவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்