நாள் முழுவதும் வீடியோ லைவ்... பெண்களை கொண்டாடும் ஃபேஸ்புக்..! #SheMeansBusiness #womensday

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் எல்லா நிகழ்வுகளையும் தனது பயன்பாட்டாளர்களுடன் இணைந்து வித்தியாசமான முறையில் கொண்டாடுவது வழக்கம், அதேபோல் இந்த முறை மகளிர் தினத்துக்கு பெரிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. இன்றைய சூழலில் பெண்கள் முன்னேற்றம் என்பது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. அதிலும் டெக் துறையில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கா ஃபேஸ்புக் மகளிர் தினத்தன்று புதுமையான ஐடியாவை கையில் எடுத்துள்ளது. உலகம் முழுவதும் பெண்களின் சாதனை பயணங்களை நாள் முழுக்க ஃபேஸ்புக் மூலம் லைவ் செய்யுமாறு கூறியுள்ளது. அதற்காக #SheMeansBusiness என்ற ஒரு ஹேஷ் டேக்கையும் அறிவித்துள்ளது. 

 

 

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக்கின் சி.ஒ.ஓ ஸ்ரெயல் சாண்ட்பெர்க் '' நாங்கள் பெண்களின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம். நாங்கள் அதிகமான ஆண்-பெண் சமநிலைக்கு இடமளித்துள்ளோம் என்பதில் பெருமைப்படுகிறோம். இந்த வருடம் பெண் ஆளுமைகளை சமூகத்துக்கு அடையாளப்படுத்த உதவிகரமான வேலைகளை துவங்கலாம் என ஃபேஸ்புக் முடிவெடுத்துள்ளது. இதற்காக மார்ச் 8ம் தேதி 24 மணி நேர முழுமையான ஃபேஸ்புக் லைவ் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளது. உங்கள் குடும்பம், நட்புவட்டாரம் அல்லது தெரிந்த யாராக இருந்தாலும் சரி, வியாபாரத்தில் சாதித்த பெண்களை ஃபேஸ்புக் லைவ் மூலம் உலகுக்கு அடையாளப்படுத்துங்கள். இந்த பதிவுகளை #SheMeansBusiness என்ற ஹேஷ்டேக்கோடு பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதற்காக shemeansbusiness.fb.com என்ற இணையதளம் ஒன்றை ஆரம்பித்து மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறது.  பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இதனை செய்து வருகிறது ஃபேஸ்புக் . பெண்களின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த தகவல்களையும் அதில் கூறியுள்ளது ஃபேஸ்புக். 

SheMeansBusiness

பெண்களால் நடத்தப்படும் தொழில்களில் 60 சதவிகிதம் சிறப்பான மற்றும் லாபகரமான செயல்பாட்டில் உள்ளது.

பெண்கள் நடத்தும் தொழில்களில் 59 சதவிகிதம் 3 வருடத்துக்கும் அதிகமாக நடத்தப்படுபவையாக உள்ளன.

68 சதவிகித பெண்களால் நடத்தப்படும் தொழில்கள் தனி உரிமம் சொண்ட பெண் தொழில் முனைவோர்களாக உள்ளனர். 

பெண்களால் நடத்தப்படும் 21 சதவிகித தொழில்கள் ரீட்டெயில்/மொத்த வியாபார தொழில்களாக உள்ளன. மேலும் 17 சதவிகித சிறு தொழில்கள் டிஜிட்டலாக இணைந்துள்ளதுடன் ஏதோ ஒருவகையில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் டூல்களை பெண் தொழில்முனைவோர்கள் சிறப்பாக கையாளுவதாகவும் கூறியுள்ளது.

மேலும் அந்த தளத்தில் சாதித்த பெண் தொழில்முனைவோர் பலரது சாதனை கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் ஏற்கெனவே உலகம் முழுவதும் உள்ள பெண் தொழில் முனைவோர்களை அடையாளப்படுத்தி அவர்களை கெளரவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதையும் இணையத்தால் இணைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள ஃபேஸ்புக். இந்த முயற்சிகள் மூலம் பெண்கள் மற்றும் அவர்களின் தொழில் திறனை அதிகரிக்கும் நோக்கில் இதுபோன்ற புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

உங்களை ஃபேஸ்புக் கணக்கில் #SheMeansBusiness என்ற ஹேஷ்டேக்கை தேடி அதில் இன்று முழுவதும் வெளியாகும் சாதனை பெண்களின் பயணத்தையும், அனுபவத்தையும் காணலாம். இன்று இந்த 24 மணி நேர ஃபேஸ்புக் லைவ் முயற்சியில் அவள் விகடனும் இணைந்து மதியம் 3 மணிக்கு ஃபேஸ்புக் லைவ் மூலம் திருச்சியை சேர்ந்த பெண் தொழில்முனைவோரை அடையாளப்படுத்துகிறது. 

- ச.ஸ்ரீராம்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!