Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''என் முன்னாடி அம்மா சாகுறதப் பாத்தேண்ணா...'' - புதுச்சேரி மருத்துவமனையிலிருந்து கதறல்

மருத்துவமனை

புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கி வருகிறது அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. இங்கு நேற்றையதினம் டயாலிசிஸ் பிரிவில் திடீர் மின் தடை ஏற்பட்டதால் அங்கே சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அம்சா(55), சுசிலா(75), கணேசன்(54) என இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் பரிதாபமாக தங்கள் உயிரைப் பறிகொடுத்திருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளும் அதன் ஊழியர்களும் ஏழை நோயாளிகளை எந்த அளவுக்கு அலட்சியமாக கையாளுகிறார்கள் என்று இந்த சம்பவம் மேலும் ஒரு உதாரணம்.

மருத்துவமனை

மருத்துவமனை அம்சாஅம்சாவின் மகள் புஷ்பவள்ளி:
”அம்மாவுக்கு சிறுநீரகம் சரியா செயல்படலைனு ஜிம்பர் மருத்துவமணையில்தான் முதலில் டயாலிசிஸ் சிகிச்சையை ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து இங்கே சிகிச்சை கொடுக்க முடியாது வேறு எங்காவது பார்த்துக் கொள்ளுங்கள்னு ஜிப்மர்ல சொல்லிட்டாங்க. தனியார் மருத்துவமணைக்கு செல்லும் அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை என்பதாலும் எங்க தொகுதியிலேயே இருக்குறதாலும் இங்கே வந்தோம். கடந்த மூன்று மாதமாக வாரத்தில் திங்கள், வியாழன் இரு நாட்களுக்கு இங்கே வந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தோம். நேற்று காலை 8 மணிக்கு மருத்துவமனைக்கு போகும்போது என்கிட்ட நல்லா சிரிச்சி பேசிட்டுதான் வந்தாங்க. சீக்கிரம் வீட்டுக்குப் போயிட்டு கோயிலுக்குப் போகலாம்னு சொன்னாங்க.

8.30 மணிக்கு டயாலிசிஸ் பன்ன ஆரம்பிச்சாங்க. அம்மா இருந்த வார்டுலயே மேலும் இரண்டு பேருக்கும் டயாலிசிஸ் பண்ணிக்கிட்டிருந்தாங்க. 10.45 மணிக்கு தீடீர்னு கரன்ட் போயிடுச்சினு கண்ணாடி வழியே உள்ளே எட்டிப்பார்த்தேன். எல்லா மெஷினும் நின்னுப் போயிடுச்சி. 10 நிமிஷம் வரைக்கும் கரன்ட் வரவே இல்லைனு உள்ளே போனேன். அங்க இருந்த ஒரு நர்சும் அப்போ இல்லை. கொஞ்ச நேரத்துல அம்மாவுக்கு பயங்கரமா மூச்சுத் திணற ஆரம்பிச்சதோட கை, காலெல்லாம் இழுக்க ஆரம்பிச்சுடுச்சு கண் முன்னாடி கொஞ்சம் கொஞ்சமா அம்மா உயிர் போறத பார்த்தேண்ணா...என்றவர் தொடர முடியாமல் கதறி அழுகிறார். பிறகு மெல்ல தேற்றிக் கொண்டு ''அம்மாவ அப்படி பார்த்ததும் எனக்கு பயமாயிருச்சு... 'டாக்டர் யாராவது வாங்க ப்ளீஸ்’னு கூச்சல் போட்டதுல, டாக்டர், நர்ஸ்லாம் வந்து அம்மாவ அழுத்தி அழுத்திப் பார்த்தாங்க. ஆனால் அம்மா… (பேச்சைத் தொடர முடியாமல் கதற தொடங்கினார்).

சுசிலாவின் மகன் மோகன் தாஸ் :மருத்துவமனை சுசீலா

”கடந்த ஒரு வருஷமா தனியார் மருத்துவமனையில்தான் அம்மாவுக்கு டயாலிசிஸ் பண்ணிக்கிட்டிருந்தோம். ஒரு முறை டயாலிசிஸ் செய்ய 3500 ரூபாய்ல இருந்து 4,000 ரூபாய் வரை செலவு ஆகும். அதனால எப்படியோ கஷ்டப்பட்டு டாக்டர்கள்கிட்ட கெஞ்சி கடந்த 3 மாதமா இங்க சிகிச்சை எடுக்க ஆரம்பிச்சோம். ரொம் நல்லாவே இருந்தாங்க அம்மா. நேற்று காலைல அப்பாகூடத்தான் பைக்ல மருத்துவமனைக்குப் போனாங்க. 10.15 மணிக்கு அப்பா எனக்குப் போன் செய்து ‘இங்க ஏதோ பிரச்னைப்பா. எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க, உடனே வா’ அப்படினு சொன்னதால பதறிக்கிட்டு ஓடினேன். அங்கே சென்று பார்த்தபோது எங்க அம்மா அசைவில்லாமல்….(அழத்தொடங்கியவர் சிறிது நேரத்தில் அவரே சமாதானமாகி தொடர்ந்தார்) எங்களைவிட்டு பிரிஞ்சிட்டிருந்தாங்க… அந்த வார்டுல ஒரு டாக்டர் கூட இல்லை. பயிற்சி நர்ஸ்கள்தான் ஏதோ பண்ணிக்கிட்டிருந்தாங்க. அதுல ஒருத்தங்க தன்னோட நோட்ல அதையெல்லாம் குறிப்பெடுத்துட்டு இருந்தாங்க. அவங்க உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்த நேரத்துல இவங்க வைத்தியம் பார்க்கவில்லை. வகுப்புதான் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பணம் இல்லாதவர்கள் உயிர்களுக்கு இந்த உலகில் இவ்வளவுதான் மதிப்பா” என்று கதறுகிறார்.

மருத்துவமனை கணேசன்கணேசனின் மருமகன் கருணா ஜோதி:

”என் மாமனார் கூட ஹாஸ்பிடல்ல இருந்தாங்க என் மனைவி. சம்பவம் நட்ந்த அன்னைக்கு 10.45 மணிக்குப் போன் பண்ணி, அவசரமா என்னைக் கூப்பிட்டதால் நான் அங்க போனேன். என் மனைவி பதறினதுலேயே ஏதோ விபரீதம்னு புரிஞ்சது. ஆனால் அங்கிருந்த டாக்டர்ஸ் என்னை வெளியே நில்லுங்கனு சொல்லிட்டாங்க. தொடர்ந்து அங்கிருந்த டாக்டர்ஸ்கிட்ட கேட்டப்ப ‘அவர் உடல்நிலை மோசமா இருக்குது... உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாத்தனும். ஹெல்ப் பண்ணுங்கனு சொன்னாங்க. கிட்டதட்ட ரமணா படத்துல வர்ற மாதிரி எல்லாரும் பரபரப்பா அங்க இங்கனு நடந்துட்டே இருந்தாங்க. கடைசியில அவரை ஸ்ட்ரெட்சரில் வைச்சு கொஞ்ச தூரம் தள்ளிட்டு வந்தவங்க அதுகப்புறம் வரலை. அப்பதான் என் மாமனாரை பார்த்தேன்.. அவர் உயிர் போயிருந்தது. கூட எந்த நர்ஸும் இல்ல, டாக்டரும் இல்ல. தன்னைப் பாதுகாக்குறதுக்காக தப்பிச்சு ஓடின அவங்க எல்லாம் உண்மையில டாக்டர்ஸா நினைச்சா அவமானமா இருக்கு" என்று வெடித்தார்.

-ஜெ.முருகன்
படங்கள்: அ.குரூஸ்தனம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement