Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பாலியல் துன்புறுத்தல் மனித இனத்திற்கே கேடு!’ #ShortFilm #CelebrateWomen

பாலியல்

 

 2015 ஆம் ஆண்டின்படி, இந்திய அளவில் ஒரு நாளுக்கு 896 வழக்குகள் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் தொடர்பானவை. குடும்ப உறுப்பினர்களாலேயே கொடுமைப்படுத்தப்பட்ட பெண்களால் தொடுக்கப்ட்ட வழக்குகள்  ஒரு மணி நேரத்துக்கு 12 என்றால் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு என்று கணக்குப் போட்டுக் கொள்ளலாம்.இதைவிட கொடூரம் ஒரு மணிநேரத்துக்கு சராசரியாக 3 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள். 315 பெண்கள் பயண நேரத்திலும், 714 பெண்கள் பணியிடங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  2,214 பெண்களைப் பாலியல் தொழிலுக்காக கடத்திச் சென்று விற்றிருக்கிறார்கள். அதிலும் பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்திச் சென்று விற்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சியைக் கூட்டுகின்றன புள்ளிவிவரங்கள். இப்படியே சொல்லிக் கொண்டே போனால் கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அளவில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 394 வழக்குகள் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள். அதிர்ச்சியாக இருக்கிறதா?.


இவ்வளவும் ஒரே ஆண்டில் பதிவாகி இருக்கும் குற்றங்களின் எண்ணிக்கை தானே தவிர, வழக்குகள் தொடுக்கப்படாமலே மறைக்கப்பட்ட குற்றங்களைப் பற்றி நாமே சிந்தித்துக் கொள்ளலாம்.பெரும்பாலான பெண்கள் தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியில் சொல்வதற்கு கூட வாய்ப்பில்லாமல் தான் முடங்கிக் கிடக்கிறார்கள்.

’’நான் அன்னைக்கு பஸ்ல போயிட்டு இருந்தேன். திடீர்னு ஒருத்தன் என் மேல கையை வச்சுட்டான். சத்தம் போட்டதும், ’நீ என்ன பெரிய இவளா’னு கேட்டு அத்தனைப் பேருக்கும் முன்னால அசிங்கமான வார்த்தையால பதிலுக்கு பேசிட்டான். சுத்தி இருந்தவங்க நமக்கு எதுக்கு வம்புனு அமைதியா இருந்தாங்களே தவிர, அவனை யாரும் தட்டிக் கேட்கலை. என்னோட தோழிக்கு மட்டும் போன் போட்டு நடந்ததை சொன்னேன். ’போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுக்க வேண்டியது தானே’னு அவளும் என்னையே திட்ட ஆரம்பிச்சிட்டா. போலீஸுக்குப் போனா வீட்ல என் படிப்பை நிறுத்திடுவாங்க. அதையும் மீறி அவனை சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், அன்னைக்கு பஸ்ல அவன் செஞ்ச செயலும்,  பேசுன  கெட்ட வார்த்தையோட வலியும் காலத்துக்கும் மறக்க முடியாத அவமானம். ஒரு சம்பவத்துக்கு நியாயம் தேட நினைச்சு என் எதிர்காலத்தை வீணாக்கிக்க விரும்பலைனு அதை அப்படியே விட்டுட்டேன். இந்த மாதிரி என் ஒருத்தியோட வாழ்க்கையிலே வெளியில சொல்லமுடியாத சம்பவங்கள் நிறைய இருக்குனா ஒவ்வொரு பெண்ணுக்கும் எவ்வளவு இருக்கும். ‘’ என தன் வலிகளை கண்கள் கலங்கி சொல்லிவிட்டுப் போகிறார் பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர்.
 
’’கல்யாணத்துக்கு 10 பவுன் போட்டா போதும்னு சொன்னாங்க. ஆனா கல்யாணத்துக்குப் பிறகு 50 பவுன்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா வசூல் பண்ணிட்டாங்க. அதுக்காக,  என் மாமியார், கணவர், நாத்தனார்னு ஒவ்வொருத்தர்கிட்டயும் நான் வாங்கின அடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள 8 வருஷம் ஆகிடுச்சு. ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மா நான். பசங்க வாழ்க்கை பாதிக்கக் கூடாதுனு போலீஸுக்கு கூட போனதில்லை. அடியும் உதையும் வாங்கிட்டு குடும்பத்துக்காக எல்லாத்தையும் மறைச்சுட்டு இருக்கேன்.குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்கிறேன்’’ இது இன்னொரு பெண்.

பாலியல்

 

3 வயது குழந்தையில் ஆரம்பித்து 60 வயது மூதாட்டி வரை யாராக இருந்தாலும் விட்டு வைக்காமல் தொடர்கின்றன பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள். வீடோ வெளியிடமோ ஒரு பெண் பிறந்தது முதல் சாகும் வரை அவள் தன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டே வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். கடத்தி செல்வது,கடத்திச் சென்று மிரட்டுவது, கடத்திச்சென்று கொலை செய்வது, பயணங்களில் சீண்டுவது,பணியிடங்களில் துன்புறுத்துவது, பாலியல் தொழிலுக்காக விற்பது, வன்புணர்வு செய்ய முயற்சிப்பது, வன்புணர்வு செய்து கொலை செய்வது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது, வரதட்சணைக்காகவும் இதர காரணங்களுக்காகவும் கொலை செய்வது, அவமானப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது என கணக்கில் அடங்காமல் போகின்றன பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள்.

பெண்களின் மீது வன்முறைகள் நடத்தப்படும் போதெல்லாம் பத்தோடு பதினொன்றாக கடந்து போகிறோம். அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே போராட்டங்கள் நடத்திவிட்டு அவரவர் வேலைகளைப் பார்க்க கிளம்பிவிடுகிறோம். பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் குறைய போராட்டங்கள் மட்டுமே தீர்வாகிவிட முடியாது. வீட்டில் ஆரம்பித்து அனைத்துத் தளங்களிலுமே அதற்கான முன்னெடுப்புகளை தொடங்குவது அவசியம். வீட்டில், பணியிடங்களில், பள்ளிகளில் , கல்லூரிகளில், காட்சி ஊடகங்கள் அனைத்திலும் பெண்கள் மீது கொடுமைகள் நிகழாத வண்ணம் செயல்பாடுகள் அமைவதே குறைந்தபட்ச தீர்வாக இருக்க முடியும்.

ஒப்பீட்டளவில் மதுவாலும் புகைப்பழக்கத்தாலும் பெரும்பான்மையாக பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்களே அதிகம் என்றால், ஒப்பிடவே முடியாத அளவுக்கு பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுகிறார்கள் பெண்கள். மதுவுக்கும் புகைக்கும் எச்சரிக்கை விளம்பரங்கள் போடும் அரசும், திரைத்துறையும்  பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அவரவர் தரப்பில் இருந்து நடவடிக்கை எடுப்பார்களா?

‘புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்’
‘மது அருந்துதல் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’

’பாலியல் துன்புறுத்தல் மனித இனத்திற்கே கேடு!’

 

பாலியல் துன்புறுத்தல் பற்றி  பேசும் 4 நிமிட குறும்படத்தைக் காண!

 

 

-பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close