வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (19/03/2017)

கடைசி தொடர்பு:14:16 (19/03/2017)

அறிக்கை விடுவது மட்டுமே அரசியல் அல்ல அரசியல்வாதிகளை காய்ச்சி எடுக்கிறார் சிவகாமி ஐ.ஏ.எஸ்.

மிழக அரசியல் களம் ரணகளத்துக்கு இடையில் இவரது சத்தத்தையே காணோம். தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களும், சட்டங்களும் கழுத்தை இறுக்கும்போது இளைய சமுதாயம் போர்க்களம் காண அத்தனை அரசியல்வாதிகளின் ஒப்பனை முகங்களும் கிழிந்து தொங்கியது. அடுத்தடுத்து நடந்த பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மரணங்கள் மனதை இறுகச் செய்தது. 

பெண்

சமூக சமத்துவப் படை என்று அரசியல் தளத்திலும், எழுத்தாளராக சமூகத்தளத்திலும் செயல்படும் சிவகாமி ஐ.ஏ.எஸ். மீடியா வெளிச்சம் படாமல் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார். இதோ அவருடான உரையாடலில் இருந்து. 

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் அவரது முதல்வர் நாற்காலியில் யார் அமர்வது என்பதற்கான பல முனை போட்டிகள் நடந்தது நாமறிந்ததே. அதில் அமர நினைத்த சசிகலா நடராஜன் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறது. முக்கியக் கட்சிகள் தங்களது தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை. புதிய கட்சி துவங்கியிருக்கும் தீபா தான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து வருகிறார். 

இது பற்றி சிவகாமி கூறுகையில், ‘‘இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் வெற்றியை எட்டும் என்பது பொதுவான கருத்து. பெரிய கட்சிகள் எதுவும் பெண்களை வெற்றி வேட்பாளர்களாக கருதுவதில்லை. பெண்களை நம்பி களத்தில் நிறுத்த ஆண்கள் தயாராக இல்லை என்பதையே இந்த அறிவிப்புகள் காட்டுகிறது. பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தும்போது வெற்றி வாய்ப்புகள் குறையும் என்ற எண்ணமும் காலம் காலமாக கட்சிகளிடம் காணப்படுகிறது. இதெல்லாம் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் பெண் வேட்பாளர்களை முன் நிறுத்தாததற்கான காரணம் என நான் கருதுகிறேன்,’’ என்கிறார் சிவகாமி ஐ.ஏ.எஸ்.

பரபரப்பான சம்பவங்கள் நடக்கும்போது மீடியா வெளிச்சத்தில் பட வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடும் அரசியல்வாதிகளில் இருந்து நான் வேறுபடுகிறேன். அறிக்கை விடுவது மட்டும் அரசியல்வாதியின் வேலை அல்ல. பரபரப்பெல்லாம் அடங்கிய பின் பாதிக்கப்பட்டவர்கள் நாதியற்று விடப்படுகின்றனர். வலியில் தவிப்பவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் நிர்கதியாக விடப்படுகின்றனர். மக்கள் வலிகளைப் பற்றி கவலைப்படாத அரசியல்வாதிகள் இந்த சமூகத்துக்குத் தேவையே இல்லை. ஓட்டு வாங்க செல்லும்போது கொடுக்கும் வாக்குறுதிகளை சுய நினைவோடு தான் கொடுக்கிறார்களா? வெற்றி பெற்ற பின் ஓட்டுப் போட்ட மக்களை திரும்பிப் பார்க்கிறார்களா? இப்படி எந்தக் கேள்விக்குமே பதில் இன்றி நிற்பவர்களை நம்பிய மக்கள் இன்று எல்லாவற்றுக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் குடிக்கும் தண்ணீருக்கு அலைவதில் துவங்கி அத்தனை பிரச்னைகள். நான் மீடியா வெளிச்சம் படாத இடங்களில் மக்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்கிறேன். அந்த மக்களுக்கு மன ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தேவைப்படும் உதவிகளைச் செய்கிறேன்.  

‘சமூக சமத்துவப் படை’ துவங்கி ஏழு வருஷம் ஆச்சு. தேர்தல் களத்திலும் செயல்படுகிறேன். கடந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து பெரம்பலூரில் போட்டியிட்டு தோற்றோம். தோல்வியோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. அந்தத் தோல்வியை நான் எனக்கான தோல்வியாகப் பார்க்கவில்லை. சமூகத்தின் தோல்வியாகப் பார்க்கிறேன். பல தளங்களிலும் வேகமாக செயல்பட வேண்டிய ஊக்கத்தை அரசியல்தோல்விகளும் சவால்களும் எனக்குத் தருகின்றன. 

பரபரப்பான சூழலில் பேட்டி கொடுப்பதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அந்த மக்களின் வலிகளை காதுகொடுத்துக் கேட்கத்தான் யாரும் இல்லை. அடித்தட்டு மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்தி அதற்கான தீர்வுகளுக்கு நகர்கிறேன். இது ஒரு பக்கம் தொடர்ச்சியாக நடக்கிறது. நான் முதலில் எழுத்தாளர். எழுத்திலும் வேகமாக இயங்குகிறேன். ‘உயிர்’ என்ற நாவல், பெண்கள் அரசியலுக்கு வர்றது பற்றிய ‘இடது கால் நுழைவு’ என்ற புத்தகமும் சமீபத்தில் வெளிவந்துள்ளது. 

விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு, கோகுல்ராஜ் புலன் விசாரணை, தர்மபுரி இளவரசன் வழக்கில் விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தல் இப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்காக சட்டரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்துச் செயல்படுகிறேன். 

ஒரு புறம் பெண்கள் ஒடுக்கப்படுவது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும் கவலை அளிக்கும் விஷயங்கள். குற்றவாளியை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுப்பது இதன் ஒரு பகுதி. ஆனால் அடுத்தொரு பெண் குழந்தை இதுபோன்ற துன்பத்துக்கு ஆளாகக் கூடாது. இதற்காகவே இரண்டு விதமான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். பெண்களை எம்பவர் செய்வதற்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துகிறேன். பெண்கள் மத்தியில் விழிப்பு உணர்வுக்கான கூட்டங்களையும் நடத்துகிறேன். 

ஆண்கள் ஏன் இப்படியான சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். ஆணின் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வழிகள் இங்கு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டியுள்ளது. இன்று கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பொழுதுபோக்கு இல்லை. பாலியல் குறித்து அறிவுபூர்வமாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் இல்லை. இதுவரை பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி பெண்ணிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி ஆண் குழந்தைகளிடம் பேச வேண்டியுள்ளது. 

நகரைத் திட்டமிடும்போதே ஆண்களுக்கான விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி மையம் ஆகியவற்றை உருவாக்க வேண்டியுள்ளது. அவர்களது வாழ்க்கை முறை மற்றும் பர்சனாலிட்டி டெவலெப்மெண்டுக்கான விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே சமூகத்தில் பாலின சமத்துவத்தை உருவாக்க முடியும். இதற்கான வேலைகளை சமூக சமத்துவப் படை வழியாக செய்து வருகிறேன். 

பெண்களுக்கு அரசியலில் 33 சதவீதம் ஒதுக்கப்பட்டாலும் அவர்கள் மக்கள் மத்தியில் செயல்பட்டு ஆர்வத்தோடு அரசியலுக்கு வரவில்லை. பெண்களில் முழு நேர அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். விருப்பப்பட்டு பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை. அப்படியான ஒரு மனமாற்றத்துக்கு பெண்கள் தயாராக வேண்டும். தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசியல் சூழலில் அடிமட்ட அளவில் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. யாராவது ஒருவரை நம்பி சாய்ந்து, ஏதாவது ஒரு பதவியை பிடிப்பது மட்டுமே வழக்கமான அரசியல்வாதிகளின் இலக்காக உள்ளது. 

இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் தங்களது அடையாளத்துக்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடி வருகின்றனர். அதைவிட அதிகமாக அடித்தட்டு மக்கள் அன்றாடத் தேவைகளுக்கே திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு என் தேவை அதிகமாக இருப்பதாக உணர்கிறேன். எழுத்திலும், களத்திலும் வேகமாக இயங்கி வருகிறேன். அரசியல்வாதியின் முதல் வேலை மக்களுக்காக உழைப்பது,’’ என்கிறார் சிவகாமி ஐ.ஏ.எஸ். தற்பொழுது உலக அரசியலில் பெண்கள் என்ற தலைப்பிலான ஆய்வையும் மேற்கொண்டுள்ளார். 

- யாழ் ஶ்ரீதேவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்