வெளியிடப்பட்ட நேரம்: 21:41 (20/03/2017)

கடைசி தொடர்பு:21:40 (20/03/2017)

சாக்லெட்டும் பல்சொத்தையும் உங்க குழந்தைகள் திக் ஃப்ரெண்ட்ஸா?

குழந்தைகள் சிரிப்பை அழகு செய்வது வரிசை கட்டி வசீகரிக்கும் அந்த முத்துப் பற்கள் அல்லவா. முதலில் முளைக்கும் பால் பற்களில் அழகு அடுத்து வரும் நிரந்தர பற்களுக்கு இருப்பதில்லை. சிறு வயதில் குழந்தைகள் பற்களை முறையாக பராமரிக்காமல் விடுவதால் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். பற்கூச்சம், பல்சொத்தை, பற்களில் கறை என படுத்தியெடுக்கிறது. 

குழந்தைப் பருவத்தில் இனிப்பு வகைகளில் புகுந்து விளையாடுவது குழந்தைகளுக்கு பிடிக்கும். அதுவும் சாக்லெட் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். இந்த முத்துப் பற்கள் சிரிப்பதற்கு மட்டுமா? சாப்பிட, பேச என ஆரோக்கியத்துக்கும் அவ்ளோ அவசியம். குழந்தை பிறந்து 6வது மாத்தில், பால் பற்கள் ஒவ்வொன்றாய் முளைத்து வரிசையில் நின்று அழகு காட்டும். 12 வயது வரை இந்தப் பற்கள் விழுந்து முளைக்கும். விளையாட்டும் குறும்புமாய் வளரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் பல் சொத்தையில் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். 

 

குழந்தைகள்

இதற்கு தீர்வு சொல்கிறார் பல் மருத்துவ நிபுணர் அருண்குமார் பிரசாத். 

* குழந்தை பிறந்து முதல் பல் முளைக்க ஆரம்பத்ததில் இருந்தே பல் துலக்குவது அவசியம். விரலில் மாட்டிக் கொள்ளும் குட்டிக் குழந்தைகளுக்கான பிரஷ்கள் பயன்படுத்தலாம். 

* குழந்தைகள் வளர்ந்த பின் காலை மாலை இரண்டு வேளையும் கண்டிப்பாக பிரஷ் செய்ய வேண்டும்.

* பற்கள் முளைக்கும் காலங்களில் கால்சியம் ரிச்சான உணவுகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கலாம். பால், முட்டை, பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், மாமிசம், மீன், முட்டை, பாலாடைக்கட்டி, கேரட் ஆகியவையும் சாப்பிடுவதால் பல் பலப்படும். 

* பால் குடிக்கும் பருவத்தில் குழந்தைகள் பால் குடித்துக் கொண்டே தூங்குவதை பழக்கப்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் முன் பற்களில் சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது. இரவில் பால் பாட்டிலுடன் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். 

* சாக்லெட்களில் இரண்டு வகை உண்டு ஒட்டும் சாக்லெட் ஒட்டாத சாக்லெட். ஒட்டும் வகையிலான சாக்லெட் சாப்பிடும் குழந்தைகள் அதன் பின் பற்களை சுத்தம் செய்யாமல் விடும் போது பல் சொத்தை தோன்றுகிறது. இதற்காக சாக்லெட் சாப்பிடவே வேண்டாம் என தடுக்க வேண்டியதில்லை. சாக்லெட் சாப்பிட்ட பின் பற்களை சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். அதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. 

* எந்த உணவு சாப்பிட்டாலும் வாயை கொப்பளித்து சுத்தம் செய்ய  வேண்டும். உணவுத் துணுக்குகள் பல் இடுக்குகளில் தங்காதபடி பார்த்துக் கொள்வது அவசியம். பற்களைச் சுத்தமாக பராமரிப்பதன் மூலம் பல் சொத்தை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

-யாழ் ஸ்ரீதேவி