Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறகுகள் தந்த இனிய கணவர்களுக்கு மனைவிகளின் பிரிய நன்றிகள்!

கணவர்

ல்லறத்தில் பரஸ்பர அன்பு, நட்பு, மரியாதை எல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் சாத்தியப்பட்டுவிட்டால் மகிழ்ச்சிக்கு அளவேது? இப்படியான நம்பிக்கையோடு கணவர்  கரம் கோர்த்து துவங்கும் வாழ்க்கை தான். சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது புயல் அடித்துப் போன கூடாராம் போல மாறிவிடுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் எனவே அனைவரும் விரும்புகிறோம். சில ஆண்கள் இந்த மாற்றத்தின் ரோல் மாடல்களாக மாறியுள்ளனர். இதனால் பல குடும்பங்களில் இந்தப் புரிதல் பரவலாக சாத்தியப்பட்டு வருவது கண்ணுக்கு அழகு. 

ஆணும், பெண்ணும் சமமாக வேலை பார்க்கும், பொறுப்புகளை ஏற்கும் நிலை உருவாகியுள்ளது. நான் ‘ஆண்’ என்ற எண்ணத்தில் இருந்து ஆண்கள் இறங்கி வந்துள்ளனர். பெண் பணிக்குச் செல்வதே தடை மிகுந்ததாய் இருந்த காலம் மாறியிருக்கிறது. வேலைக்காகப் பெண்கள் வெளியூர் செல்ல நேர்ந்தாலும், குழந்தை குட்டிகள் உட்படக் குடும்பச் சுமையையும் அவள் தோளில் ஏற்றி அனுப்பும் வழக்கம் ஆங்காங்கே அறுந்து வருவது நல்மாற்றம்.

மாநகர வேலையோ, வெளிநாட்டு புராஜெக்டோ... தன் மனைவி இடம்பெயர நேரும்போது, குழந்தை வளர்ப்பு, குடும்பப் பராமரிப்பு உள்ளிட்டவற்றைப்  பொறுப்பேற்றுக்கொண்டு, 'போய் வா' என்று புன்னகை பிரியாமல் அனுப்பி வைக்கும் கணவர்கள் அன்பில் உயர்கிறார்கள். சொந்த ஊரில் கணவரும், குழந்தையும் இருக்க, கிடைத்த கார்ப்பரேட் வேலைவாய்ப்பை தக்கவைக்க சென்னை வந்துவிட்டார் சித்ரா. அடுத்த கல்வியாண்டில் கணவரும், மகளும் குடிபெயரத் திட்டம். பகலில் பணியில் ஆற்றல் எல்லாம் கரைந்து விடுதி அறைக்குத் திரும்பியதும் வீட்டின் நினைவு வாட்ட, ஒருவித அவஸ்தையுடன் தன் கணவருக்கு அழைக்கும் சித்ராவுக்கு, 'பிள்ளைங்க ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சிட்டாங்கப்பா. டின்னர் சாப்பிட்டு இருக்கோம். நீ பாப்பாகிட்ட பேசு...' என்று அந்தச் சூழலை இயல்பாக்கும் அவர் கணவர், வரம். பெண் வேறு ஆணுடன் பேசினால் கெட்டுப் போய்விடுவாள், தனியாக இருந்தால் எல்லை மீறிவிடுவாள் என்ற மூடநம்பிக்கைக்குள் முடங்காத ஆண்கள் இதுபோன்ற நம்பிக்கை முயற்சிகளைச் சாத்தியப்படுத்தியுள்ளனர். 

குடும்பம் என்ற அமைப்புக்குள் பெண் மீதான ஒடுக்கு முறைகள் இருக்கவே செய்கின்றன. எனினும் தன்னை மேம்படுத்திக்கொள்வது, தன்னோடு வாழும் ஆணைப் புரிந்துகொண்டு, தன்னை அவருக்குப் புரியவைப்பது இன்றைய பெண்ணின் தேவை. இந்த இரண்டு விஷயங்களே அந்தக் குடும்பம் என்ற அமைப்புக்குள்ளும் பெண் தனது சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சூழலை உருவாக்குகிறது. குடும்ப அமைப்புக்குள் பரஸ்பரம் புரிதலுடன் பயணிக்கத் துவங்குகிற இருவரும் தங்களது தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான கொள்கைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். ஆம்... இன்று பெண்ணை தனித்தியங்க அனுமதித்து குடும்ப பொறுப்புகளை ஏற்றிருக்கும் குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு இதுபோன்ற கொள்கைகளே காரணம். 'என் மனைவியோட டிரெஸிங்கில் இருந்து அவ ஏடிஎம் கார்டு வரை, எதிலுமே நான் தலையிட மாட்டேன். அதேபோல, மாசத்துக்கு ஒரு அவுட்டிங் என் ஃப்ரெண்ட்ஸ்கூட போக விரும்புற என்னோட சுதந்திரத்துலயும் அவ தலையிட மாட்டா. இப்படி 'உன்னோட சந்தோஷம் எது?'னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கான ஸ்பேஸை நாங்க பரஸ்பரம் கொடுக்கிறதுதான் எங்க இல்லற பலம்' என்று மிகுந்த புரிதலுடன் ரமேஷ் பேசியபோது, அவர் தோளில் அவருடைய மனைவி செல்லமாகத் தட்டியது, அழுத்தமான, அன்பான ஆமோதிப்பு. 

கணவர்

இன்றைய வாழ்க்கைச் சூழலின் பொருள் தேவை பெண்ணும் வேலை பார்க்கலாம் என்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. பெண் படித்து வேலைக்குச் சென்ற பின்னும் அவளுக்கு வீட்டுச் சுமைகள் குறையவில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் மருமகளாக வந்தவளே வீட்டின் அத்தனை பணிகளையும் செய்ய வேண்டும் என்ற மறைமுக விதியை மாமியார்கள் கடைப்பிடித்து வந்தனர். இதை இன்றைய கணவர்கள் மாற்றியுள்ளனர். கூட்டுக் குடும்பமோ, தனிக்குடும்பமோ...இருவரும் அலுவலகம் செல்லும் முன்பான சமையல் வேலையிலும் ஆண்களின் பங்கு அதிகரித்துள்ளது. மனைவியின் மாதவிலக்கு நாட்கள் மற்றும் உடல்நிலை குறைபாடுள்ள நேரங்களில் சமையல் பணியில் இருந்து பெண்களுக்கு விடுமுறை தரும் ஆண்களும் உள்ளனர். 'ரெண்டாவது டெலிவரிக்கு நான் அம்மா வீட்டுக்கு ஊருக்குப் போயிட, கிட்டத்தட்ட நாலு மாசம் என் முதல் குழந்தையை, சமையல் செஞ்சு, ஸ்கூலுக்கு அனுப்பி, ஹோம்வொர்க் சொல்லிக்கொடுத்துனு என் கணவர்தான் பார்த்துக்கிட்டார். அதுமட்டுமில்ல... எப்பவுமே பாத்திரம் துலக்குறது, வாஷிங் மெஷின்ல துணி போடுறது, சமையல்னு வேலைகளைப் பகிர்ந்துக்குவார். வீட்டுக்கு சொந்தக்காரங்க யாராச்சும் வந்தா, 'ஏங்க... வேண்டாம் விடுங்க நான் பார்த்துக்குறேன்'னு சொன்னாலும் கேட்காம, 'ஏன்... என் வீட்டு வேலைகளை நான் பார்க்கிறதுல அவங்க நினைக்க என்ன இருக்கு? என்னைப் பார்த்து அவங்களும் கத்துக்கட்டும்'ன் அவங்களுக்கு முன்னாடியே சிரிச்சிட்டே சொல்வார்' என்றபோது, காயத்ரியின் பெருமைப் புன்னகை காதுவரை ஓடியிருந்தது. 

திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் என்பது ஆணின் எதிர்பார்ப்பாகவும் மாறியுள்ளது. பிரைவஸியை விரும்பும் ஆண்களும் தனிக்குடித்தனம் செல்ல பச்சைக் கொடி காட்டி விடுகின்றனர். பிறந்த இடத்தில் இருந்து வேருடன் பிடுங்கப்பட்டு புதிய குடும்பத்துக்கு வரும் பெண் அவளுக்கான முழு அன்பையும் கணவனிடம் பெற இது போன்ற தனிக்குடித்தன வாழ்க்கை வாய்ப்பளிக்கிறது. திருமணத்துக்குப் பின் கணவனுக்குத் தோழிகள் இருப்பது போல, மனைவிக்கும் தோழன்கள் உள்ளனர். ஆண், பெண் நட்பு என்பதை இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு அனுமதிப்பதன் வழியாக இருவரது பிரைவஸியும் மதிக்கப்படுகிறது. குடும்பம் சார்ந்த பொறுப்புகளில் விலகாமல் இருப்பதும், பெண்ணுக்கு நம்பிக்கை அளிப்பதும் இந்த இடத்தில் ஆணின் முக்கியக் கடமையாக உள்ளது. இதில் இன்றைய ஆண்கள் மிகத் தெளிவாக உள்ளனர். ஒருவரது செல்போனை மற்றவர் ஆராய்ச்சி செய்யாமல் இருப்பதே குடும்ப அமைதிக்கு வலிமை சேர்க்கிறது. சந்தேகப் பிரச்னைகள் தலை எடுக்காமல் தடுக்கிறது. 'ஃபேஸ்புக்ல ஏன் உன் போட்டோவை போட்ட? இவனெல்லாம் ஏன் உன் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கான்? வாட்ஸ்ஆப்-ல பசங்களும் இருக்கிற காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் குரூப்ல ஏன் இருக்க? - இது மாதிரி நான்சென்ஸ் கேள்வியெல்லாம் சண்முகம் என்னைக் கேட்டதேயில்ல. ஏன்னா, எந்தச் சூழலா இருந்தாலும் என்னை நான் பத்திரமா பாத்துக்குவேன்னு அவனுக்குத் தெரியும். லவ் யூ புருஷா' என்று கண்ணடிக்கும் வர்ஷினி சுவாசிக்கும் சுதந்திரம், சூப்பர். 

வீடு, பராமரிப்பு உள்ளிட்ட அத்தனை பணிகளையும் பெண்ணிடம் சுமத்தாமல் பணிகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்கின்றனர் ஆண்கள். ஒரு சில வீடுகளில் செலவுகளை ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொண்டு நிறைவேற்றுகின்றனர். அவரவர் சம்பாத்தியத்தில் செலவுகள் போக எதில் முதலீடு செய்யலாம், எப்படிச் சேமிக்கலாம் என்பதிலும் இந்தச் சுதந்திரம் இருவருக்குமே உண்டு. இத்தனையும் தாண்டி திருமணத்துக்குப் பின் ஆர்வம் உள்ள பெண்கள் மேல்படிப்பைத் தொடரவும், அதில் வெற்றி பெறவும் ஒத்துழைக்கும் கணவர்களின் பங்கு அளப்பறியது. குறிப்பாக, தொழில்துறையில் சாதிக்கும் பெண்கள் பலரும் திருமதிகளே என்ற செய்திக்குப் பின் நாம் கவனிக்க வேண்டியது, அவர்கள் கணவர்களின் ஒத்துழைப்பு.  

இப்படி பெண் உயரவும், வளரவும், பொருளாதார ரீதியாகத் தன்னை வளப்படுத்திக் கொள்ளவும் தோள் கொடுக்கும் கணவர்கள் இன்று பெருகியுள்ளனர். தன்னோடு வாழ வந்தவளை சக மனுஷியாய் மதிப்பவன் அவள் மனதில் நண்பனாய் வேரூன்றுகிறான். அவள் வலிகளைப் புரிந்துகொண்டு அன்பு செய்பவன் காதலுக்கு உரியவன் ஆகிறான். எல்லாத் துன்பங்களையும், பிரிவுகளையும் தாங்கிக்கொள்ள அவளுக்குத் தேவை அவனது நம்பிக்கையும், சிறு துளி அன்பும்தான். அப்படிப் புரிந்துகொண்டு அவளோடு கரம் கோத்து தோழனாய், காதலனாய் கடைசி வரை வரத் தயாராக இருப்பவனே... கணவன் என்ற பொறுப்பில் கை தட்டல்களை அள்ளுகிறான், மனைவியின் நன்றியை நெஞ்சம் நிறைய வாங்கிக்கொள்கிறான். 

கணவர்

ஆம்... வாழ்வின் கடைசி நிமிடம் வரை அன்பு செய்து, அன்பால் வென்று, அவளைத் தனதாக்கிக்கொள்ளும் அன்புள்ள ஆண்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக. இந்தப் புரிதல் பரவலாகும்போது குடும்பங்கள் பிரிவது குறையும். உறவுச் சிக்கல்கள் இன்றி மகிழ்ச்சியான வாழ்வும், பெண்ணுக்கான உயர்வும் நிகழும். இதில் உங்கள் பங்குதான் பிரதானம் ஆண்களே! 

- யாழ் ஸ்ரீதேவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement