உங்கள் மகனுக்குப் பெண்களைப் பற்றி கற்றுக்கொடுக்கிறீர்களா? #GoodParenting

மகன்

ரு வீட்டில் ஆண், பெண் வேறுபாடு எங்கு ஆரம்பிக்கிறது தெரியுமா? குடும்பமாகச் சாப்பிட உட்காரும்போது, மகனுக்கு இரண்டு முட்டையும், மகளுக்கு ஒரு முட்டையும் வைக்கும் பழக்கத்தில் இருந்துதான். பெரும்பாலான வீடுகளில் ஆணுக்குச் சுதந்திரம் தருவதும், பெண்ணுக்குச் சட்டம் போடுவதும், வீட்டை நிர்வகிக்கும் பெண்களாகத்தான் இருப்பார்கள். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பிக்கும் வேறுபாடு, பின்னாளில் பெரிய சொத்து பிரச்னையில் கொண்டுவந்து நிறுத்தும். உண்மையில், பெண்களைப் பற்றி தங்கள் மகனுக்கு எத்தனை அம்மாக்கள் கற்றுக்கொடுக்கிறீர்கள்? 

”அவளுக்கு என்ன குறைச்சல்? இரண்டு ஆம்பளை பிள்ளைகள் இருக்கு'', ”சிங்கக்குட்டி மாதிரி மகனைப் பெத்து வளர்க்குகிறேன்” என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே பெண்ணடிமைத்தனம் ஒளிந்து இருக்கிறது. இந்த வார்த்தைகளைக் கேட்டு வளரும் உங்கள் மகனுக்கும், ஆணாதிக்க மனோபாவமே வரும். பெண்களைப் பற்றியும், அவர்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். அதற்கான சில வழிகளைப் பார்ப்போமா? 

*ஆணும் பெண்ணும் வெவ்வேறு உலகத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கற்பனைக் கதைகளை உடைத்தெறியுங்கள். நாம் எல்லாருமே ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு இருக்கிறோம். ஆனால், மாறுபடுவதும் வேறுபடுவதும் ஆண் - பெண் இடையே நடக்கும் விஷயமாகப் பார்க்காமல், மனித இயல்பு என்ற அடிப்படையாகப் பார்க்க கற்றுக்கொடுங்கள். இதனை, உங்கள் செயலில் இருந்தே தொடங்குங்கள். 

* ’சாட்டை’ படத்தின் ஒரு காட்சியில்... ஒரு மாணவன், பெண்கள் கழிப்பறையில் எட்டிப் பார்த்ததற்காக, தண்டனைக் கொடுப்பார் ஆசிரியர். அதற்கு சமுத்திரக்கனி அமைதியாக, ‘தெரியாத ஒரு விஷயத்தை அவன் தெரிந்துகொள்ள முயற்சி செய்தான். அதற்கு எதற்கு தண்டனை?’ என ஒரு விளக்கம் கொடுப்பார். இந்தக் காட்சியில் வரும் சமுத்திரக்கனி போல நீங்களும் இருங்கள். பெண்களைப் பற்றி அவன் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினால், அதற்கு தடைப் போடாதீர்கள். அவர்கள் பெண்களைப் பற்றி சந்தேகம் கேட்டால், நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து, உங்கள் மகனின் வயதுக்கு ஏற்ப, புரியவையுங்கள். இதுவே, உங்கள் மகனுக்குப் பெண்களைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை பிறக்கும் வழியாக இருக்கும். 

* பெண்களைப் பற்றின நல்லப் புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். அன்னை தெரசா, ஜான்சி ராணி போன்று சரித்திரத்தில் இடம்பிடித்த பெண்களைப் பற்றிய கதைகளைச் சொல்லுங்கள். இந்த முயற்சி, அவர்களைப் பற்றி உயர்ந்த எண்ணங்களை உங்கள் மகனின் மனிதில் விதைக்கும். 

* பொதுவாக, மகனுக்கு ஆடைகள் தேர்ந்தெடுக்கும்போது, ’பிங்க், ‘மஞ்சள்’ நிற ஆடைகள் பெண்களுக்கானது என ஒதுக்கிவிடுவோம். ஆனால், இதுபோன்ற வெற்றுக் கருத்துகளை தூர வைத்துவிட்டு, எல்லா நிற ஆடைகளையும் அவன் அணிவதற்கு அனுமதியுங்கள். நண்பர்கள் கேலி செய்கிறார்கள் என அவன் தயங்கினாலும், நீங்கள் இதனை உணர்ந்துங்கள். 

* குழந்தைப் பருவத்தில் இருந்தே, பெண் குழந்தைகளுக்கு பார்பி பொம்மை அல்லது சமையல் சொப்பு என்றும், ஆண் குழந்தைகளுக்கு கார், மோட்டார் பொம்மைகள் என நாம்தான் பிரிக்கிறோம். அப்படி இல்லாமல், ஆண் குழந்தைகளுக்கும் எல்லா வகையான பொம்மைகளையும் வாங்கிக் கொடுங்கள். 

* அழுவது பெண்ணுக்குரிய விஷயம் என்றே காலங்காலமாக சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆண்கள் அழக்கூடாது என்றும் நாமே ஒரு கருத்தை உருவாக்குகிறோம். இவை இரண்டுமே தவறு. அழுவது என்பது மனம் மற்றும் மனநிலை சம்பந்தப்பட்ட ஒரு உணர்வு. சிரிப்பது, அழுவது, கோபப்படுவது இவையெல்லாம் எல்லோருக்குமான உணர்வுகளே என்பதை உங்கள் மகனுக்கு உணர்த்துங்கள். 

- ஷோபனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!