Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொந்த நிலம், வீடு இருந்தும் சென்னையில் கூழ் விற்று சம்பாதிக்கும் தாய்!

பார்வதி அம்மா சென்னை

தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் கடந்த மூன்று வருடத்துக்கு மேல் கூழ் விற்கும் கடையை நடத்தி வருகிறார் ஐம்பத்தி ஆறு வயதாகும் பார்வதி. வெயிலின் தாக்கத்தால் கூழ் குடிக்கலாம் என கடைப்பக்கம் சென்றபோது அவருடைய கதையைக் கேட்க முடிந்தது.
 
''எனக்குச் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். எனக்கு மூணு பசங்க. என் வீட்டுக்காரர் சம்பாதிச்சதை குடிச்சே அழிச்சார். நான் தட்டுத்தடுமாறி கூலி வேலைப் பார்த்து குடும்பம் குலையாம சொத்து சேர்த்தேன். பிள்ளைகளை ஓரளவுக்குப் படிக்க வைச்சு, கல்யாணம் கட்டிக்கொடுத்து ஆளுக்கு ஒரு வீடும் கட்டி கொடுத்துட்டேன். ஒவ்வொருத்தனுக்கும் ரெண்டு ஏக்கர் நிலமும் கொடுத்துட்டேன். எனக்கும், என் கணவருக்கும் சேர்த்து ஒரு ஏக்கர் நிலம் இருக்குது. இருந்தாலும் என்னால அந்த சொத்தைப் பார்த்துக்கிட்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியல.

என்னிக்காவது ஒருநாள், எதுக்கு உங்க அப்பா, அம்மாவுக்கு சும்மா சோறு போடுறீங்கனு என் மருமகள் கேட்டிறக்கூடாதுல்ல... அதான் சொத்தைப் பிரிச்சு வைச்சுட்டு நானும், என் வீட்டுக்காரரும் சென்னைக்கு வந்துட்டோம். இரண்டு பேரும் வாட்ச்மேனா வேலைப் பார்த்தோம்' என்றவரிடம் மகன்கள் உங்களைக் கூப்பிடவில்லையா?'' என்றோம்

''எத்தனையோ தடவை கேட்டிருக்காங்க. எனக்குப் போக விருப்பம் இல்ல. எனக்கு கை, கால் நல்லாதானே இருக்கு. ஒரு சொம்பு கூழ் பதினைந்து ரூபாய்க்கு விக்கிறேன். ஒரு நாளைக்கு முப்பது பேர் கூழ் குடிப்பாங்க. எனக்கு ஊறுகாய் நல்லா போட வரும். அதனால, எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், வத்தல்னு தினமும் விதவிதமா... கூழோட சேர்த்துகொடுக்கிறேன்.

ஹவுசிங் போர்ட் வீட்டுல தங்கியிருக்கேன். மாசம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை. அதுக்குத் தகுந்த மாதிரி சம்பாதிச்சுடுவேன். எனக்கு அடுத்தவங்க கையை எதிர்பார்க்க இஷ்டம் கிடையாது. தைரியம் என் கூடவே பிறந்தது. எதையும் சமாளிக்கிற திறமை கடவுள் கொடுத்த வரம்னு நினைக்கிறேன். என்னைப் பார்க்க மாசத்துக்கு இரண்டு முறையாவது பசங்க வந்திடுவாங்க. ஆனா, அவங்ககிட்ட இருந்து ஐந்து பைசாகூட நான் இதுவரைக்கும் எதிர்பார்த்ததில்ல.

 

பார்வதி

நான் சம்பாதிச்சு வைச்சதை பேரப்புள்ளைங்களுக்கு செலவு பண்ணி சந்தோசப்படுவேன். இப்பவும் என்கிட்ட ஐந்து சவரன் நகை, காடு கரை எல்லாம் இருக்கும். நாம செத்த பிறகு எல்லாம் கூடவா வரப்போகுது. நம்ம வாழ்க்கையை நாம சந்தோஷமா வாழணும் அவ்வளவுதான். சின்ன வயசுல இருந்தே சொந்த உழைப்புல சாப்பிடனும்ங்கிற எண்ணம் என்கிட்ட எப்போதும் இருக்கும்

கூடப்பொறந்த தம்பி இருந்தாலும், அவன்கிட்ட எதையும் எதிர்பாக்க மாட்டேன். அதே மாதிரி என்னைப் பெத்தவங்க பேச்சைக் கேட்காமலும் இருந்ததில்ல. சென்னையிலும் நிறையப் பேரைப் பார்த்திருக்கேன். கும்பலா குடிச்சிட்டு ரகளைப் பண்ணிட்டு திரியுறாங்க. வாழ்க்கைனா எப்படி வேணாலும் இருக்கணும்னு அர்த்தம் இல்ல. கடைசி வரைக்கும் கட்டுப்பாட்டோட வாழணும். இத்தனை வருஷமா ஒத்த ஆளா நின்னு இந்தக் கடையை நடத்திட்டு வரேன். பெருசா வருமானம் இல்ல. சில நாட்கள் வருமானமே இல்லாமக்கூட போயிடும். எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு, சில நேரம் பசியோடக்கூட தூங்கியிருக்கேன். ஆனா நம்ம கால்ல நிக்கிற சந்தோஷம் இருக்குல்ல... அதை அனுபவிச்சாதான் அதோட அருமை தெரியும். மொத்தத்துல சந்தோஷமா இருக்கேன்" என்று கூழை ஊற்றிக் கொடுக்க ஆரம்பிக்கிறார் பார்வதி அம்மா.


- வே.கிருஷ்ணவேணி 
படங்கள்: ப.காளிமுத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement