“உலகம் சுற்ற சைக்கிள் போதும்!” - சென்னை பெண்ணின் பயணக் காதல்

பயணம்

சைக்கிள்... சின்ன வயதில் ஓட்டும் மூன்று சக்கர சைக்கிளில் ஆரம்பித்து கல்லூரி வரை விதவிதமாக சைக்கிள் ஓட்டியவர்களின் அது தரும் சுகமும், ஆனந்தமும் தெரியும். நினைத்தால் நினைத்த நேரத்தில் சைக்கிளில் பறக்கும் ஆண்களைப் போல அல்ல பெண்கள். பயணங்கள் அவர்களுக்கு அத்தனை எளிதாக வாய்த்துவிடுவதில்லை. இதனை சற்றே மாற்றி, ’மெளண்டைன் பேக்கிங்’ (Mountain Biking) மூலம் தான் விரும்பும் இடத்திற்கு நினைத்த நொடியில் சைக்கிளில் பறந்துக்கொண்டே இருக்கிறார் , சென்னையைச் சேர்ந்த ஹேமா மணி.

''சின்ன வயசுல நமக்கெல்லாம் சைக்கிள் ஓட்டுறதுல ஆர்வம் இருக்கும். அந்த மாதிரிதான் நானும் சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சேன். அதை காதலிக்க ஆர்மபிச்சேனு சொல்லலாம். ஸ்கூல் படிக்கும்போது, கடைக்குப் போறதுல இருந்து, நண்பர்கள் வீட்டுக்குப் போறவரைக்கும் எல்லாமே எனக்கு வாங்கி கொடுத்த சைக்கிள்லதான் போவேன். வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் வண்டி பயன்படுத்த ஆரம்பிச்சேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி, என்னடா வண்டியிலேயே நம்ம வாழ்க்கைப் போகுதேனு ஒரு கவலை வந்துச்சு. நாம ஏன் நம்ம சின்ன வயசு ரசனையை மறுபடியும் ரசிக்கக் கூடாதுனு நினைச்சேன். சைக்கிள் வாங்கணும்னு முடிவு பண்ணினது அப்பதான்” என்று தன் பால்யகால நினைவுகளை ரசித்தபடி பேச ஆர்மபிக்கிறார் ஹேமா மணி.

”அப்போ எனக்கு ‘கியர்’ சைக்கிள் இருக்குதுனுகூட தெரியாது. என் பக்கத்துவீட்ல இருக்கிறவங்க,  ’கியர்’ சைக்கிள் வைச்சிருந்தாங்க. அதைப் பார்த்ததும் மனசுக்குள்ள குறுகுறுனு சந்தோஷம் பரவுச்சு. அதைப் பத்தி விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். அப்போ, சைக்கிள் வொர்க்‌ஷாப் ஒண்ணு சென்னைல நடந்தது. அந்த வொர்க்‌ஷாப்புல கலந்துகிட்ட அடுத்த நாள் நானும் கியர் சைக்கிள் வாங்கிட்டேன். 

ஹேமா சைக்கிள் பயணம்

நான் சைக்கிள் வாங்குறதுக்கு முன்னாடி ’பேக்பாக்கிங் டிராவல்’ (Backpacking Travel) பண்ணி இருந்தேன்.  ஆனா, நான் சைக்கிள்ல முதன்முறையா, கேரளா வழியா வயநாடு, மைசூருக்கு ஒன்பது நாட்கள் பயணம் போனேன். என் வாழ்க்கையே புதுசா பார்க்குற மாதிரி இருந்தது, அந்த அனுபவம். நாம ரயிலையோ, கார்லையோ பயணம் செய்யும்போது, பாதைகள்ல இருக்கிற அழகான  காட்சிகளை ரசிக்கமுடியாம போயிடும். ஆனா, சைக்கிள்ல போகும்போது நாம கடக்குற ஒவ்வொரு அடியையும் ரசிக்கமுடியும்.  சைக்கிள் பயணத்துல இருக்கிற சிறப்பே இதுதான்” என சிலிர்க்கிறார்  ஹேமா.

ஹேமாவுக்கு மாதவிடாய் காலம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. “எனக்கு எப்போ லீவு கிடைக்கும்; என் நண்பர்களுக்கு  எப்போ டைம் கிடைக்கும்னு பார்த்துதான், ஒரு ட்ரிப்புக்கு நான் முடிவு செய்வேன். மாதவிடாய் காலத்துல, நான் நாப்கின்ஸ் யூஸ் பண்ணமாட்டேன். துணிதான் பயன்படுத்துவேன். 

இரவு நேரங்களில் பயணிக்கும்போது,  எனக்கு உதவியா இருக்கிறது, மேப் தான்! மலைப்பகுதியில பயணிக்கும்போது, பக்கத்துல என்னென்ன கிராமங்கள் இருக்குனு தெரிஞ்சிப்பேன். சாப்பாட்டுக்கு, அந்த கிராமங்கள்ல இருக்கிற வீட்லதான் கேட்பேன்.  சில நேரங்கள்ல எதுவும் கிடைக்காது. அப்போ, தண்ணீர்தான் எனக்கு உணவு. ஒரு ட்ரிப் போறதுக்கு முன்னாடியே, நாங்க எந்த ரூட்ல போகப்போறோம்னு முடிவு பண்ணிப்போம். ஒரே ஒரு டிரஸ் செட், ஒருவேளை சைக்கிள் பஞ்சரான அதை சரிசெய்ய வேண்டிய சில பொருட்கள்னு ரொம்ப முக்கியமானவற்றை மட்டும்தான் எடுத்துட்டு போவேன்.” என்கிறார் கூலாக.

ஹேமாவின் பயணங்களில் மறக்கமுடியாதது காஷ்மீருக்கு சென்ற பயணமாம்!  ''ஜூலை மாசம் வரைக்கும் அங்க மழை பெய்யும். அதனால, நாங்க ஆகஸ்ட்  மாசம்  ட்ரிப் போனோம். ஆனா, எதிர்பாரா விதமா,  கடுமையான மழையில் நானும் என் நண்பர்களும்  சிக்கிக்கொண்டோம். நாங்க  சைக்கிள் ஓட்டியிருந்த பகுதியில, மண்சரிவு வேற... என்ன பண்றதுனே தெரியல. கிட்டதட்ட 16 கிலோமீட்டர் வரைக்கும்,  சைக்கிள்ல தலைல தூக்கிவச்சிட்டுப் போனோம் ” என்கிறார்அந்த நாளின் நிகழ்வோடு.

சைக்கிள் பயணம்

சென்னை ட்ரக்கிங் க்ளப்பில் உறுப்பினராக இருக்கும் இவர், கடந்த 2015ஆம் ஆண்டு இமாலய மலைப் பகுதியில்  பேக்கிங் செய்த அனுபவம், சாகங்களும் சவால்களும் நிறைந்து இருந்தது. ”இந்த மாதிரி மலைப்பகுதில  சைக்கிளிங் செய்றதுக்கு முன்னாடி, நம்ம சாதாரண தார் சாலைகள்ல ஓட்டிப் பழகிக்கணும். அப்போதான், கடுமையான மலைப்பகுதிகள்ல தாக்குபிடிக்கிற அளவுக்கு நமக்கு பலம் வரும். இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஃபலோ பண்ணா, அப்புறம், சைக்கிள் பயணம் ரொம்ப சுலபமாயிடும்.  நம்ம மனசு,மூளை, உடம்பு - இந்த மூன்றையும் புதுப்பிக்கிறது  பயணங்கள்தான்! எல்லாரும் என்னை சைக்கிளிஸ்ட்னு நினைக்குறாங்க. ஆனா,  பயணம் செய்றதுல இருக்கிற ஆர்வம்தான், என்னை சைக்கிளே ஓட்ட வைச்சுது”, என்று  நமக்கு ’டாடா’  காட்டிக்கொண்டு, தனது சைக்கிளில் பறக்கிறார் ஹேமா. 

தொடரட்டும் இவரின் பயணங்கள்! 

 

- எம்.ஆர்.ஷோபனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!