Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்ணை கை நீட்டி அடிக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது காவல் துறையே!

பெண்

மிழகத்தில் பெண்களுக்கு திருமண உதவித் திட்டமாக ‘தாலிக்குத் தங்கம்’ வழங்குகிறது தமிழக அரசு. ஆனால், 'இளம் பெண்களை விதவைகளாக்கும் திட்டம்' ஒன்றும் நீண்ட ஆண்டுகளாகவே இங்குள்ளது. அதுதான், டாஸ்மாக். இந்தத் திட்டத்தில் கொழுத்து வரும் லாபத்தின் சில துளிகளையே 'தாலிக்குத் தங்கம்' எனச் சொல்லிக் கொடுத்து, முட்டாளாக வைத்திருக்க நினைத்தது. ஆனால், ஒருவரை எத்தனை நாட்களுக்குத்தான் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியும்? மக்கள் விழித்துக்கொண்டதன் வெளிப்பாடே, மதுவுக்கு எதிரான பெண்களின் ஆவேச போராட்டம். ஆனால், இந்த ஆவேசத்தை வன்முறையால் அடக்கிவிடலாம் என தப்புக்கணக்குப் போட்டுள்ளது காவல் துறை. அதுதான், டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய ஈஸ்வரி என்ற பெண்ணை காவல்துறை அதிகாரி தாக்கிய மோசமான நிகழ்வு. 

குடிநோயாளியின் மனைவியாக இருக்கும் ஒரு பெண்ணின் வேதனையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. குடித்துக் குடித்து உறுப்புகள் வெந்துகிடக்கும் கணவனின் வேதனை அவனோடு முடிவதில்லை. அவனது மரணம் வரை அவளும் சேர்ந்து அவதிப்படுகிறாள். சமூகத்தால் அவமானப்படுத்தப்படுகிறாள். குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்து, உழைத்து தேய்ந்துப்போகிறாள். அவனோ, குழந்தைகளையும் மனைவியையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு ஒருநாள் இறந்துபோகிறான். பெண்கள் இவ்வளவு கொடுமையான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் இந்த அரசு விரும்புகிறதா? திரும்பிய பக்கம் எல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, தாலிக்குத் தங்கம் வழங்கும் அரசின் மோசடியைப் பெண்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். 

பெண்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக, 500 கடைகள் மூடப்படும், நேரம் குறைக்கப்படும் என்பது போன்ற பசப்பு வேலைகளை அரசு அடிக்கடி செய்கிறது. போணியாகாத கடைகளை மட்டும் மூடிவிட்டு மக்கள் நலத்துக்காக என்று நீலிக்கண்ணீர் வடித்தது. அடங்காத தமிழக அரசின் போக்குக்கு தடைப் போடும் வகையில், ‘நெடுஞ்சாலைகளிலும் அதனை ஒட்டி 500 மீட்டர் வரை உள்ள பகுதிகளிலும் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், 2925 டாஸ்மாக் கடைகளை மூடியது தமிழக அரசு. ஆனால், அதன் அழுகுணி ஆட்டம் நிற்கவில்லை. பெண்களின் நலனில் அக்கறை காட்டுவதாக பாவ்லா காட்டும் இந்த அரசு, நெடுஞ்சாலைகளில் மூடிய டாஸ்மாக் கடைகளுக்குப் பதிலாக, மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் திறப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது. 

காவல்துறை எப்போதும் அரசின் கைக்கூலிதானே... உரிமைக்காகப் போராடும் மக்களைக் கலைப்பதும், அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடுவதையுமே முக்கிய பணியாக வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீசின் விசுவாசம் யாருக்கானது என்ற விஷயம் உலகம் முழுவதும் வெட்டவெளிச்சம் ஆனது. சாமளாபுரத்தில் நடந்த போராட்டத்திலும் கூட்டத்தைக் கலைப்பதற்காக, ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் பெண்களைத் தடியால் அடித்துள்ளார். எங்களை எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்ட பெண்களை, கன்னத்தில் அறைந்து நிலைகுலைய வைத்துள்ளார். அவரது அராஜகப் போக்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது. 

ஏ.டி.எஸ்.பி.பாண்டியராஜன் அவர்களே... பெண்ணை மதிக்க வேண்டும்... பாதுகாக்க வேண்டும் என்பது மிகச் சாதாரண மனிதனுக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால், காக்கிச் சட்டைப் போட்டு, மக்களின் பாதுகாப்புக்கு துணையாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்றுப் பதவிக்கு வந்த உங்களுக்கு இது எப்படித் தெரியாமல் போனது? அடிப்படை மனித குணங்களையே இழந்துவிட்டீர்களா? 'காவல்துறை மக்களின் நண்பன்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறீர்கள். நண்பன் செய்கிற வேலையா இது? போராட வந்த பெண்களைப் பார்க்கும்போது உங்கள் தாயின் முகமோ, தங்கையின் முகமோ நினைவில் வரவில்லையா ஏ.டி.எஸ்.பி? 

பெண் ஈஸ்வரிநியாயமான விஷயத்துக்காகப் போராடும் பெண்களை. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடித்தும் உதைத்தும் பயறுத்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா? அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து பொதுவெளிக்கு வந்தவர்களிடம், உங்கள் அதிகாரம் பொய்த்துப்போகும். பெண் என்றால் எதுவும் செய்யலாம் என்ற அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது? ஈஸ்வரி என்கிற அந்த விசைத்தறி தொழிலாளியை கன்னத்தில் அறைந்தது அராஜகத்தின் உச்சம். அதிகாரத்தை எதிர்க்கும் பெண்களை எல்லாம் அடிக்கலாம் என்னும் அடாவடியை எங்குக் கற்றுக்கொண்டீர்கள்? ஏற்கெனவே காது அறுவை சிகிச்சை செய்திருந்த ஈஸ்வரியின் இடது காது, நீங்கள் அறைந்ததால் கேட்காமல் போய்விட்டது. சிகிச்சைக்காகச் சென்றுகொண்டிருக்கும்போதும் அந்தப் பெண்ணின் கதறல், அந்த இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்பதுதான். 

வாழ்வில் தினம் தினம் துயரங்களுடன் போராடிக்கொண்டிருக்கும் பெண்கள் அவர்கள். அரசு நடத்தும் டாஸ்மாக் எனும் மது அரக்கனைக் கொல்ல வீதிகள் தோறும் போராடி வருகின்றனர். போராட்டத்தில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நடத்தியிருக்கும் அராஜகத்துக்குக் கிடைக்கும் தண்டனை, இனிமேல் வரும் அதிகாரிகளுக்குப் பாடமாக இருக்க வேண்டும். ஈஸ்வரியின் கண்ணீர்த் துளிகள், டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதற்கான விதைகளுக்கு நீர் ஊற்றுவதாக இருக்கட்டும். 

- யாழ் ஸ்ரீதேவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close