‘‘ஆபாசப் படம் அனுப்புவர்களுக்கு தண்டனை உண்டு!’’ - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்

ஆபாசப் படம்

ர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் மஹாந்தேஷ், அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் வாட்ஸ்அப் குரூப்புக்கு அனுப்பிய ஆபாசப் படங்கள்தான், கர்நாடகாவின் நேற்றைய வைரல். அந்தப் படங்களை அனுப்பிய சிறிது நேரத்திலேயே, தவறுதலாக அனுப்பிவிட்டதாக மன்னிப்பு கேட்டிருந்தார். கடந்த மாதம் பாண்டிச்சேரியிலும் ஆபாசப் படம் அனுப்பிய சம்பவம் நடைபெற்றது. சம்பந்தப்பட்டவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் பொறுப்பான பதவிகள் மற்றும் பொதுப்பணியில் இருப்பவர்களிடமிருந்து வெளிப்படும் இதுபோன்ற சம்பவங்கள், பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. 

செல்போன் மற்றும் இணையதளம் மூலமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஆபாசமான படங்கள், எம்.எம்.எஸ் மற்றும் இமெயில் அனுப்பும் குற்றங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. ஆனாலும், இதுபோன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை. காதலிக்க வற்புறுத்தி ஆபாசப் படம் அனுப்புவது, காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களைக் காண்பித்து பிளாக்மெயில் செய்வது போன்ற குற்றங்களும் அதிகரித்துவருகிறது. இதனால் பாதிக்கப்படும் பெண்கள், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தற்கொலை சம்பவங்களும் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களை எப்படித் தடுக்கலாம்? 

இதுபற்றி பேசிய வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், '‘பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் நம் சமூக வளர்ப்பு முறையே sudha ramalingamஇதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழக் காரணமாகிறது. எடுத்துக்காட்டாக, கல்லூரிக்குச் செல்லும் ஒரு பெண், வழியில் ஒரு குறிப்பிட்ட கும்பலால் கிண்டலுக்கு உள்ளாகும்போதும், வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் தைரியமாகச் சொல்வதில்லை. காரணம், குற்றம் செய்பவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அந்தக் குற்றவாளிகளிடம் இருந்து விலகிச் செல்லவே பெரும்பாலான பெற்றோர் யோசனை சொல்வார்கள். அல்லது, கல்லூரிக்கு அனுப்புவதையே நிறுத்திவிட நினைப்பார்கள். இது, குற்றவாளிகள் தொடர்ந்து தவறு செய்ய சாதகமாகிறது. அடுத்தடுத்த பெண்களைத் தொந்தரவு செய்ய ஆரம்பிக்கிறார்கள். 

ஒரு பெண்ணை அணுக ஓர் ஆண், தவறான எஸ்எம்எஸ் அல்லது ஆபாசப் படம் அனுப்புவதில் இருந்து ஆரம்பிக்கிறான். அந்தப் பெண்ணிடம் எதிர்ப்பு இல்லை எனத் தெரிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறான். இதுபோன்ற நேரத்தில் பெண்கள் மன உறுதியுடன் தைரியமாக செயல்பட வேண்டும். ஆபாசப் படமோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பியவனே குற்றவாளி. நாம் எந்தச் சூழலிலும் பயப்படக் கூடாது என்பதைத் தெளிவாக உணர வேண்டும். தவறு செய்பவர்களை தைரியமாகச் சுட்டிக்காட்ட வேண்டும். 

இதுபோன்ற சம்பவம் அலுவலகத்தில் நடந்தால், உயரதிகாரி அல்லது அதற்கான கமிட்டியில் புகார் கொடுக்க வேண்டும். அங்கே சரியான நடவடிக்கை எடுக்கப்படாத சூழல் ஏற்பட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அலுவலகம் அல்லாத இடங்களில் இதுபோன்று சந்திக்க நேர்ந்தால், தாமதிக்காமல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். தங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ என தங்களைச் சுருக்கிக்கொள்ள கூடாது. சமீபத்தில் சில பெண்கள் ஆபாசப் படம் அனுப்பி, தவறாக நடக்க முயன்ற ஆண்களை அதே சமூக வலைத்தளங்களின் மூலம் தைரியமாக உலகுக்கு அடையாளம் காட்டியது வரவேற்புக்குரியது. பெண்களின் தைரியமும் மன உறுதியுமே குற்றவாளிகளைத் தண்டித்து, குற்றங்களைத் தடுக்கும்.'’ என்றார். 

பெண்களே... தைரியம் என்கிற ஆயுதத்தை ஏந்தி, இணையக் குற்றவாளிகளை வீழ்த்துவோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!