Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ச்சும்மா பேசிக்கிட்டிருந்தேன் மாமா..!' தலையாட்டும் மேஜிக் தலைகாக்கும்! #RelationshipGoals

பெண்கள் தங்கள் தோழிகளுடனோ, அல்லது குடும்பத்தினருடனோ கணவரைப் பற்றிப் பேசுகையில் கணவர்களைத் தலையாட்டி பொம்மைகளாக உருவகிப்பார்கள். தனது கணவர் தான் சொல்வதைக் கேட்பார் என்பதைப் பெண்கள் தங்களது ஆளுமையின் முக்கியப் பண்பாகப் பார்க்கிறார்கள். நகைச்சுவையாகச் சொல்லும்போது கணவரைத் 'தலையாட்டி பொம்மை'யாகவே நினைத்துக் கொள்கிறார்கள். தான் சொல்வதைக் கேட்கிற கணவரைப் பெரும்பாலான பெண்களுக்கும் பிடித்திருக்கிறது. மனைவியின் தலையாட்டிப் பொம்மைகளாக இருப்பதைப் பல ஆண்களும் பெருமையாக ஒப்புக் கொள்கிறார்கள். தங்கள் நண்பர்களுடனான அரட்டையில் தன் மனைவிக்கு மிகவும் பயந்தவரைப் போலக் காட்டிக் கொள்கிறார்கள். இதை மெய்ப்பிக்கும் விதமாக மனைவிக்குப் பயந்த கணவன் எனும் ஜானரில் பலகாலமாகவே ஜோக்கும் உலாவுகின்றன. 

ஆழமாகப் பார்த்தால், இயற்கையிலேயே பெண்ணைவிட அதிக வலு கொண்ட ஆண் எல்லா நேரங்களிலும் தலையாட்டிப் பொம்மைகளாக இருக்க வாய்ப்பில்லை. இது உண்மை என்னும் பட்சத்தில் எந்தெந்தக் காரணங்களுக்காகக் கணவர்கள் அப்படி ஒரு தஞ்சாவூர் நேட்டிவ் ஸ்டாண்ட் எடுப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன். அதாவது, மனைவி சொல்வதை விவாதம் செய்யாமல்,  மறு பேச்சில்லாமல் அப்படியே தலையை ஆட்டி ஏற்றுக் கொள்கிற மனநிலை. 

சும்மா பேசிக்கிட்டிருந்தேன் மாமா... (பெண்)

வீட்டில் சீரியல் பார்த்துக்கொண்டு செம்ம ஃபார்மில் இருக்கும் மனைவியாக இருந்தால், எதிர்த்துப் பேசக் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும். அதுவும் ப்ரைம் டைமில் குறுக்கே புகுந்து ஒரு இட்லி எக்ஸ்ட்ரா கேட்டாலும் ஏதாவது பறக்கும் தட்டு காற்றைக் கிழித்துக்கொண்டு வரும் என்பது முன்பே தெரியும் என்பதால் அந்த நேரங்களில் என்ன கேட்டாலும் எதிர்க்கேள்வி கேட்காமல் மையமாகத் தலையசைத்து வைத்தல் நல்லது.

பெண்கள் அழுகையிலும், ஆத்திரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கும்போது எந்த லாஜிக்கும் அங்கே செல்லுபடியாகாது. 'சரி... சரி' என்று தலையாட்டும் மேஜிக்தான் கணவரின் தலை காக்கும். தப்போ சரியோ உயிர் முக்கியம் இல்லையா..? 

கூட்டுக் குடும்பத்தில் பெற்றோருக்காக, சமயத்தில் குழந்தைகளுக்காகக் கூட அப்படி நடந்து கொள்ளலாம். இதுதான் சாக்கெனத் தனியாக வீடு பார்த்துக் குடித்தனம் செல்வதற்குச் சுற்றிலும் ஆதரவு பெருகும் என்பதாலும், சட்டம் ஒழுங்கைக் காக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பில் இருப்பதாலும் அமைதியாகத் தலையாட்டுதலைத் தவிர வேறு வழியில்லை. 

அம்மாவுக்கும், மனைவிக்கும் இடையில் சண்டை வராமல் இருக்க மண்டை ஆட்டுவதுதான் பக்காவான நீதித்தராசு சிந்தனையாக இருக்கமுடியும். யாராவது ஒருவருடைய பக்கம் சார்பாக இருந்தாலோ, அல்லது நீதிநெறி வலுவாக் கணவனாக நியாயத்தின் பக்கம் இருந்தாலோ, இறுதியில் ஆப்பு என்னவோ கணவருக்குத்தான் இருக்கும் என்பதால் கறுப்புத்துணி கட்டிய நீதிதேவதையைப் போல பேச்சற்று இருத்தல் உடலுக்கும், மனதுக்கும் நலம் பயக்கும். 

மனைவி பிறந்த வீட்டார் பொருளாதார ரீதியாக லார்ட் லபக்தாஸ்களாகவோ, இல்லையெனில் 'என்னம்மா அங்க சத்தம்..?' எனக் கேட்டாலே 'சும்மா பேசிக்கிட்டுருந்தேன் மாமா...' எனப் பம்மும் அளவுக்கு தாதாக்களாகவோ இருந்தால் வேறு வழியில்லை... 'ஆமாம்மா ஆமாம்' தான். 

இதன் உளவியல் இவ்வளவு தானா..? அல்லது வேறு காரணங்கள் உண்டா? இப்படித் தலையாட்டி பொம்மையாகக் கணவனை வைத்திருப்பதால் பெண்ணுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா..? தலையாட்டும் ஆண்கள் பொறுப்புகள் இல்லாததால் இதை மகிழ்ச்சியாகத்தான் ஏற்றுக் கொள்கின்றனரோ..! குழந்தைகள் அருகில் இருக்கும்போது, விவாதம் செய்ய விருப்பமின்றி, 'ஆமா ஆமா..' எனத் தலையாட்டுவதோ, அல்லது விபரம் அறியாத குழந்தைகளிடத்தில் தான் சாதுவானவன் எனக் காட்டிக் கொள்வதற்காகவோ மனைவியை எதிர்த்துப் பேசாமல் தங்கள் தரப்பை சுமுகமாக நிலைநாட்டுகிறார்களா..? 

இந்தக் கூற்றுகள் எல்லாம் நம் சமூகத்தில் உண்மையாகவே நடப்பதுதானா? உண்மையைத் தெரிந்துகொள்ள உளவியலாளர் ஒருவருக்குக் கால் செய்தேன். 'உண்மையாகவே வீட்டில் பெரும்பான்மையான கணவர்கள் ஆமாஞ்சாமிகளாகவா இருக்கிறார்கள்?' எனும் கேள்வியை அவரிடம் முன்வைத்தால், 'அப்படி குட்டைன்னும் சொல்லிட முடியாது... உயரம்னும் சொல்லிட முடியாது...' எனக் கோர்ட்டில் கடைசி நேரத்தில் பிறழ் சாட்சியான மாதிரியேதான் அவரும் ஆரம்பித்தார்... அவரது கணவரிடமே கேட்டுவிடலாம் எனக் கேட்டால் அவரும் மையமாகத் தலையசைத்தார். ரைட்டு வெரிஃபைடு!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close