வெளியிடப்பட்ட நேரம்: 20:57 (24/05/2017)

கடைசி தொடர்பு:10:53 (25/05/2017)

‘மரங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், மலையேறுங்கள்!’ - ‘ட்ரெக்கிங் காதலி’ பிரசாந்தி மனோரஞ்சன்!

பிரசாந்தி மனோரஞ்சன்

யணங்களே புதிய மனிதர்களையும் புதிய அனுபவங்களையும் அள்ளித் தருகின்றன. பெண்களுக்குப் பயணங்கள் செல்ல வாய்த்தது மிகச் சமீப ஆண்டுகளில்தான். சட்டெனப் பறந்து வானத்தில் மிதந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களுக்குள்ளும் இருக்கும். ஆனால், அது அவ்வளவு எளிதில் பெண்களுக்குச் சாத்தியமில்லை. மலையேற்றத்தில் ஈடுபடும் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர்தான் பிரசாந்தி மனோரஞ்சன். மலைகளின் காதலியான பிரசாந்தி, தான் கண்டு வியந்த காட்டை ரசிக்க பலரையும் அழைத்துச்செல்கிறார். ட்ரெக்கிங்க் உடலுக்கும் மனதுக்கும் சேர்த்தே ஆரோக்யத்தை அளிக்கிறது. இதில் பெண்கள் ஆர்வத்தோடு வருவதைப் பெருமையாக கூறுகிறார். காட்டைப் பற்றி பிரசாந்தி கூறும்போதே நம்மையும் காட்டுக்குள் அழைத்துச் செல்லும் மாய வித்தைக்காரராக இருக்கிறார். அவரோடு ஜாலி டிரெக்கிங்போக நீங்கள் ரெடியா? 

"டிரெக்கிங் மேல் எப்போது காதல் உருவானது?"

பிரசாந்தி மனோரஞ்சன்“நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில. படிச்சது எலக்ட்ரானிக் இன்ஜினீயர். வேலைத் தேடி 2012 -ல் சென்னைக்கு வந்தேன். அப்போ, லீவு நாள்ல என்ன பண்றதுனே தெரியாது. ஃப்ரண்ட்ஸ்ங்க சினிமா, பீச், மால்னு போவாங்க. நானும் அவங்களோட போயிட்டுருந்தேன். ஆனா, எனக்கு அதுல பெரிசா ஆர்வமில்லை. அப்போதான் ஒரு நாள் நான் சென்னை ட்ரெக்கிங் கிளப் பற்றி கேள்விப்பட்டேன். அவங்க ஒவ்வொரு வருஷமும் கடற்கரையில கிடக்கும் குப்பைகளை அகற்றுவதைத் தொடர்ந்து செய்திட்டு இருந்ததைத் தெரிஞ்சிக்கிட்டேன். சரி, லீவு நாள்ல வெட்டியாப் பொழுதைப் போக்காம, அந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டேன். அப்போதான் இந்தக் குழு, ’ட்ரெக்கிங் கேம்ஸ்’ (Trekking Camps) நடத்துறாங்கனு தெரிய வந்துச்சு. சரி.. நாமளும் போய்தான் பார்ப்போம்னு விளையாட்டா ஆரம்பிச்சேன். என்னோட முதல் டரெக்கிங்... வெங்கடகிரி மலை. அது அற்புதமான அனுபவமா இருந்துச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனிமே ஒரு ட்ரெக்கிங்கையும் மிஸ் பண்ணக்கூடாதுனு. அதிலேர்ந்து ஒவ்வொரு மாசமும் எப்படியும் இரண்டு ட்ரெக்கிங் ப்ளான் பண்ணிடுவேன். அதற்குப் பிறகு நானே ட்ரெக்கிங் ஈவன்ட்டுகளை ஒருங்கிணைக்க ஆரம்பிச்சிட்டேன்"

"இதுவரைக்கு எத்தனை ட்ரெக்கிங் போயிருப்பீங்க?"

"அதுக்கெல்லாம் கணக்கு வெச்சிருக்கிறதே இல்ல. 40-க்கும் அதிகமான ஈவன்ட்டுகளை ஒருங்கிணைச்சிருப்பேன். ட்ரெக்கிங் வெறும் சுவாரஸ்யத்துக்கானது மட்டுமல்ல. எங்கு பயணம் செல்கிறோம், அதற்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்கள் எடுத்துச் செல்வதைத் தவிர, மற்ற எதுவும் நம் கையிலில்லை. இந்தத் த்ரில் ரொம்ப முக்கியம். அந்தத் த்ரில் நமக்கு ஏராளம் கற்றுக்கொடுக்கும். எந்த இடத்துக்குப் போனாலும் அங்கே நமக்காக புது அனுபவம் காத்திட்டு இருக்கும். 

"உங்களால மறக்க முடியாத ட்ரெக்கிங் எது?"
பிரசாந்தி மனோரஞ்சன்

"அது, வடக்கு நேபாளத்தில் இருக்கும் அண்ணபூர்ணா வளைவு போனதுதான். அந்த இடத்துல கிட்டதட்ட ஆக்ஸிஜன் அளவு, சராசரியான அளவைவிட 60 சதவிகிதம் குறைந்திருக்கும். சுவாசிக்கிறதே சிரமமானதாக இருக்கும். சரியான பாதைகளும் இருக்காது. ஒத்தையடிப் பாதை மாதிரி இருக்காது. அந்த இடத்தில் ட்ரெக்கிங் பண்ணத்தான் பர்மிஷன் கொடுப்பாங்க. ஆனா, நானும் என்னோட நண்பர்களும் அந்தப் பகுதியில சைக்கிளிங் பண்ணினோம். நான் போட்டிருக்கிற ஷூ பிஞ்சி, கால்ல ரத்தம் வந்துடுச்சு. இவை எல்லாத்தையும் தாண்டி, இந்தப் பயணத்தை முடிச்சப்ப, பெரியளவில் தன்னம்பிக்கை வந்துச்சு.”

"ஒவ்வோர் ஆண்டும் மரங்களின் அளவு குறைஞ்சிட்டே வருதே. அதைப் பற்றியெல்லாம் நீங்கள் ட்ரெக்கிங் போகும்போது பேசுவீர்களா?"

"பேசாமால் இருப்போமா.... பசுமை கொஞ்சும் காட்டின் கருவறை வாசத்தை உணர்ந்தவர்களால் ஒரு மரத்தின் கிளையைக்கூட வெட்ட முடியாது. மலைகளில் பயணிப்பது மரங்களின் தொப்புள் கொடியை மனதில் பற்றிக் கொள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கை வளங்களை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதை வார்த்தைகளின்றி கற்றுத்தர மலைகளால்தான் முடியும். சுருக்கமாகச் சொல்றதுன்னா.. அது ஓர் உயிரியில் பல்கலைக்கழகம்" 

ஆல் தி பெஸ்ட், ட்ரெக்கிங் காதலி! உங்களின் பயணங்கள் மகிழ்ச்சியோடு நீளட்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்