Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘நீர்நிலைகளைத் தூர்வார உதவிய வாட்ஸ்அப்!’’ - குடும்பத் தலைவியின் நெகிழ்ச்சி

 

நீர்நிலைகளை

 நம் சமூகத்தில் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் என்றே செல்கிறது. குழந்தைகளை வளர்ப்பது, வழி நடத்துவது, படிக்கவைத்து பெரிய பதவியில் அமர்த்துவதே வாழ்வில் மிகப்பெரிய லட்சியமாக மாறிவிடுகிறது. இதிலிருந்து மாறுபட்டு சமூகத்துக்கும் தனக்குமான தொடர்பில் பயனுள்ள விஷயங்களைச் செய்ய வேண்டும் என ஆர்வம் காட்டி வருகிறார், 'ரீசார்ஜ் பூமி' அமைப்பின் வள்ளி சரண். நான்கு ஆண்டுகளாகத் தனது அமைப்பின் மூலம், காரைக்குடி, தூத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் அழிந்துவரும் நீர்நிலைகளைக் காக்க, மக்களை ஒருங்கிணைத்துத் தூர்வாரும் பணிகளைச் செய்துவருகிறார். 

நீர்நிலைகளை‘‘என் சொந்த ஊர் காரைக்குடி. சின்ன வயசுல இருந்தே ஸ்கூல்ல மிஸ், சார் சொல்லும் விஷயங்களை நடைமுறைப்படுத்த நினைப்பேன். ஐந்தாவது படிக்கும்போது சைவ உணவுதான் உடம்புக்கு நல்லதுனு மிஸ் சொன்னதை கேட்டதிலிருந்து முழுக்க சைவத்துக்கு மாறிட்டேன். வீட்டில் அம்மா, அப்பா எவ்வளவோ சொல்லியும் இப்பவரை சாப்பிடறதில்லை. நேர்மையா நடக்கணும். பொய் சொல்லக் கூடாதுனு நிறைய விஷயங்கள் என்னை இம்ப்ரஸ் செஞ்சிருக்கு. படிப்பையும் வாழ்க்கையையும் நிறையத் தொடர்புப்படுத்தி பார்ப்பேன். ஸ்கூலில் படிக்கிறப்பவும் சரி, காலேஜில் சேர்ந்த பிறகும் சரி, சமூக விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு கலந்துக்குவேன். எம்.சி.ஏ. படிப்பை முடிச்சதும் கல்யாணமாகி பெங்களூரு வந்துட்டேன். திருமண வாழ்க்கை, குழந்தைகள்னு ஆகிட்டாலும் சமூகப் பணி செய்யும் நினைப்பு மட்டும் என்னை விட்டுப் போகலை’’ என்கிறவர், நீர்நிலைகளைப் பாதுகாக்கும் எண்ணம் உருவானது பற்றி சொல்கிறார். 

'‘திருமணத்துக்கு முன்னாடியே கணவரிடம் எனது ஆர்வம் பற்றி நிறைய பேசியிருக்கேன். அப்பவே அவர் 'நீ திருமணத்துக்குப் பிறகு உன் விருப்பத்தைத் தொடரலாம்'னு சொல்லியிருந்தார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் நண்பர்களோடு வாட்ஸ்அப் குரூப்ல இருக்கேன். அதன் வழியாக நிறைய செய்திகளைத் தெரிஞ்சுப்பேன். நீர்வரத்துக்கு ஆதாரமான ஊரணிகள், கண்மாய்கள் அழிஞ்சுட்டு வர்றதைப் பற்றின தகவல்களை ஷேர் பண்ணிக்கிட்டே இருந்தோம். இப்படி சும்மா ஷேர் செய்றதைவிட நாமே ஒரு செயல்திட்டத்தில் இறங்கலாம்னு தோணுச்சு. என் இரண்டுப் பெண் குழந்தைகளும் அவங்க வேலைகளை அவங்களே செஞ்சுக்கிற அளவுக்கு வளர்ந்திருந்தாங்க. அதனால், நானும் என்னோட சமூகப் பணியை ஆரம்பிச்சுட முடிவுப் பண்ணினேன். கணவரும் சம்மதிக்க, செயலில் இறங்கினேன். 

என் சொந்த ஊரான காரைக்குடியிலேயே முதல் பணியை ஆரம்பிச்சேன். 'ரீசார்ஜ் பூமி' என அமைப்புக்குப் பெயர்வெச்சோம். காரைக்குடியின் நீராதாரமான பெரிய கண்மாயின் நீர்வரத்து கால்வாய்கள் எல்லாம் குப்பை மண்டி இருந்துச்சு. அதை தூர்வார முடிவுசெஞ்சு, கலெக்டர்க்கிட்ட அனுமதி வாங்கினேன். மக்களையும் திரட்டினேன். முதல்ல தன்னார்வலர்களைத் திரட்டறது கஷ்டமா இருந்தாலும், போகப்போக ஆர்வமா கலந்துக்கிட்டாங்க. 'எங்களுக்கும் நிறைய ஆர்வம் இருக்கு. ஆனால், எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியாம இருந்துச்சு. நீங்க கூப்பிட்டதும் வந்துட்டோம்'னு சொன்னாங்க. அவர்களின் ஒத்துழைப்போடு என்னோட முதல் பணி சக்சஸா முடிஞ்சது. அடுத்ததா, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிற தருவை நீர்நிலையை தூர்வாரினோம். அப்புறம் திண்டுக்கல் மாவட்டத்தின் கொடவனாறு, கொங்கன்குளம் ஊரணிகளைச் சீரமைச்சோம். தேனாற்றிலிருந்து உஞ்சனை அணைக்கப்பட்டு வரையிலான ஆறு கிலோமீட்டர் கால்வாயைத் தூர்வாரும்போது நிறைய சீமைக்கருவேல மரங்களை அகற்றினோம். 

நீர்நிலைகளை

 

எங்கள் பணி மூலமா படிச்சவங்க பலரை ஈர்க்க முடிஞ்சது. இப்போ பலருக்கும் முறைப்படி எப்படிச் செய்யணும்னு ஆலோசனைகள் தந்துட்டு இருக்கேன். பணிக்கான நிதியை என்னால முடிஞ்சளவுக்கு தர்றேன். எங்க வாட்ஸ்அப் நண்பர்களும் தேவையான ஆலோசனைகள், உதவிகளைச் செஞ்சிட்டு வர்றாங்க. ஒவ்வொரு முறை வேலையை முடிக்கிறப்பவும் இந்தச் சமூகத்துக்கு நம்மால் முடிஞ்சதை செய்த சந்தோஷம் கிடைக்குது. தூர்வாருவதுடன் இ.எம்.சொலுஷன் தெளிக்கிறோம். இரண்டு கிலோ கருப்பட்டியில் 20 லிட்டர் தண்ணீரை ஊற்றி மூடிவெச்சுடணும். ஒரு வாரம் கழிச்சு நொதித்து இருக்கும். இந்தக் கலவையை நீங்க கழிவுநீர் போகும் இடங்களில் தெளிச்சா, கொசுத் தொல்லை இருக்காது. கிருமிகள் வராது. எல்லாரும் வீட்லேயே செஞ்சுப் பயன்படுத்தலாம்'' என்று டிப்ஸ் அளிக்கிறார் வள்ளி சரண். 

அது சரி, 'ரீசார்ஜ் பூமி’ என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டதும், சிரித்துக்கொண்டே 'ட்ரெண்ட்டியா இருக்கட்டுமேனு வெச்சோம். பாழாகி இருக்கும் பூமியைப் புதிதாக மாற்றுவது. அதுதான் இந்தப் பெயர். நீர்நிலைகளைத் தொடர்ந்து வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான விழிப்புஉணர்வு பணிகளில் இறங்கப்போறோம்'' என்கிறார். 

வாழ்த்துகள் வள்ளி சரண்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close