‘‘அம்மா இறந்த பிறகு அவங்க கனவு பலிச்சிருக்கு!"- தழுதழுக்கும் இலக்கியா ஐஏஎஸ் | ‘‘My mother's dream comes true!‘‘ - civil service achiever Illakia says proudly

வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (02/06/2017)

கடைசி தொடர்பு:10:08 (02/06/2017)

‘‘அம்மா இறந்த பிறகு அவங்க கனவு பலிச்சிருக்கு!"- தழுதழுக்கும் இலக்கியா ஐஏஎஸ்

சிவில் சர்வீஸ் தேர்வில்

குழந்தைகளுக்கு அம்மா, அப்பா உறவு என்பது ஒப்பிட இயலாதது. அன்பைப் பொழியும் அம்மாவும் வழிகாட்டும் தந்தையும் உடனிருந்து குழந்தைக்கு வழிகாட்டவேண்டிய நேரத்தில், இருவரையும் இழந்து நிற்கதியாக நின்றவர் இலக்கியா. அம்மாவுக்கு அம்மாவாக, அப்பாவுக்கு அப்பாவாக 'நான் இருக்கிறேன் உனக்கு'  என்ற சித்தியின் அரவணைப்பில் வளர்ந்தவர். இன்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, பெண்களுக்கு ரோல் மாடலாகத் திகழ்கிறார் இலக்கியா. 
    
 ‘'நான், என் அம்மாவின் கனவை நிறைவேத்திட்டேன்’’ எனச் சொல்லும்போதே குரல் தழும்பப் பேசத் தொடங்கினார். ‘‘அம்மான்னா அவ்ளோ பிடிக்கும். சின்ன வயசுல அம்மாவையே சுத்திக்கிட்டே இருப்பேன். திடீர்னு ஏதோ சுனாமி சுழற்றிப் போனது போல அம்மா, அப்பா இருவருமே நான் ஏழாவது படிக்கிறப்ப இறந்துட்டாங்க. அந்தச் சூழல்கூட எனக்கு முழுசா புரியல. வேதநாயகி சித்திதான் என்னை  அக்கறையா கவனிச்சுக்கிட்டாங்க. சொந்த ஊர், ராணிப்பேட்டை. நான் ரொம்ப ஆவரேஜ் ஸ்டூடன்ட்தான். பெயின்டிங்னா ரொம்பப் பிடிக்கும். அதை விடவும் புக்ஸ் படிக்கிறது பிடிக்கும். ஜாலியா ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தேன். சின்ன வயசுல எங்கம்மா என்கிட்ட சொல்லிட்டே இருப்பாங்க. 'நீ கலெக்டர் ஆகி, பொண்ணுங்களோட முன்னேற்றத்துக்கு பெரிய சக்தியா இருக்கணும். நம்ம சமூகத்துல இருக்கிற நிறைய பொண்ணுங்க பெரிய லெவலுக்கு வரணும்'னு சொல்லுவாங்க. அம்மாவ நினைக்கிறப்ப எல்லாம், அவங்க சொன்னதுதான் நினைவுக்கு வரும்‘‘ என்றவரிடம், உங்களுக்கு ஐஏஎஸ் ஆகணும்கிற ஆசை எப்படி வந்தது... என்றதும், 

சிவில் சர்வீஸ் தேர்வில்‘‘பிளஸ் 2 ரிசல்ட் வந்ததும் ஐஏஎஸ் படிக்கணும்னு நினைச்சேன். அதனால இங்கிலீஷ் லிட்ரேச்சர்ல சேர்ந்தேன். தேர்வுக்கு பயிற்சியெல்லாம் ரொம்ப எடுத்துக்கல. காலேஜ்ல சேர்ந்தப்புறம் ரெகுலரா நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பிச்சேன். சமூகத்தோட என்னைத் தொடர்புபடுத்திக்கிட்டேன். என்னோட சித்தி ‘தென்றல்’ங்கிற பேர்ல தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திட்டு வர்றாங்க. அது மூலமா குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான பணிகளைச் செஞ்சுட்டு வர்றாங்க. அதனால, எனக்கு சின்ன வயசுல இருந்து சமூகத்தைப் பத்தின நிறைய விஷயங்கள் இன்ஸ்பிரேஷனா இருந்தது.  நான் கலெக்டர் ஆகணும்னு சித்தியும் விரும்பினாங்க. அதனால, எனக்குத் தேவையான எல்லாத்தையும் நான் கேட்கிறதுக்கு முன்னாடி நிறைவேத்திடுவாங்க. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத சென்னை சமூகவியல் கல்லூரியில சோஷியாலஜி படிச்சேன். படிச்சு முடிச்சதும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில  சேர்ந்தேன். அப்பதான் சிவில் சர்வீஸ்ல பாஸ் பண்றதுக்கான மனஉறுதி வந்துச்சு. என்னால முடிஞ்ச அளவு படிச்சேன்" என்றவரிடம், தினமும் எவ்வளவு நேரம் படிப்பீங்க...என்றதும்,

‘‘நான்,  2015-ல ஒரு தடவை எக்ஸாம் எழுதினேன். அப்ப, எக்ஸாம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்கலாம்னு கேஷுவலாதான் எழுதினேன். ப்ரீலிம்ஸ்ல 60 கேள்விகளுக்கு மட்டும்தான் ஆன்ஸர் பண்ணினேன். அப்பறம், கொஞ்சம் சீரியஸா படிக்க ஆரம்பிச்சேன். சாப்பிடுற நேரம், தூங்குற நேரம் தவிர எல்லா நேரமும் படிப்புதான். ஆசையா, அர்ப்பணிப்போட படிச்சேன். எனச் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்.

‘‘பிரீ லிம்ஸ்ல பாஸ் பண்ணிட்டேன். மெயின்ல ஆப்சன்லா சோஷியாலஜி படிச்சேன். ரொம்ப ஹார்டுவொர்க் பண்ணினேன். என்னோட மூச்சு, பேச்சு எல்லாமே எக்ஸாம் பற்றிதான் இருந்தது. முறையான பயிற்சியும் கடின உழைப்பும் இருந்தா, சிவில் சர்வீஸ் தேர்வுல ஈசியா ஜெயிக்கலாம். ஐஏஎஸ் ஆபீஸரா நியமிக்கப்பட்டதும், பெண்களோட வளர்ச்சிக்கான பணி செய்யணும்கிறதுதான் என்னோட லட்சியம்'' என்றார் நெகிழ்ச்சியுடன். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நம்பிக்கை நட்சத்திரமாய் முளைத்திருக்கிறார்.

 வாழ்த்துகள் இலக்கியா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்