வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (11/08/2017)

கடைசி தொடர்பு:20:23 (11/08/2017)

“ரூபாய் நோட்டுக்குப் பதிலா வெறும் தாளை கொடுத்து ஏமாத்த நினைப்பாங்க!” - பார்வைத் திறனற்ற செல்லம்மா

பரபரப்பான காலை நேரம்... சைதாப்பேட்டை ரயில் நிலையம். 

"வாங்க சார் வாங்க... பேனா, ஊக்கு, ஏடிஎம் கவர்...." என்று தனது பலத்த குரலால், பரபரப்புடன் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இருந்தார் அந்தப் பெண். பார்வையற்ற அவருக்கு முன்பு விரிக்கப்பட்டிருந்த துணியின் மேலே பேனா, ரிமோட் கவர், ஏடிஎம் கவர் என விதவிதமாக இருந்தன. அவரது வாழ்வின் வலிகளை அந்தக் குரலின் வீரியத்தில் உணரமுடிந்தது. அவரிடம் பேசினோம்... 

செல்லம்மா

“என் பேரு செல்லம்மா. சொந்த ஊர் திருநெல்வேலி. நான் பிறக்கும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நாளாக நாளாக பார்வைக் குறைபாடு ஆரம்பிச்சது. நான் சின்னக் குழந்தையா இருக்கும்போதே அப்பா இறந்துட்டார். அம்மாதான் அவங்களால முடிஞ்ச அளவுக்குச் சிகிச்சை செய்துப் பார்த்தாங்க. எந்த மருத்துவமும் கை கொடுக்காமல் பார்வை பறிபோயிடுச்சு. பார்வையற்றோர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிச்சேன். என்னை மாதிரியே இருக்கிற ஒருத்தருக்குக் கல்யாணம் பண்ணிவெச்சா புரிஞ்சு நடந்துப்பார். வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சு பார்வையற்ற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணிவெச்சாங்க. 

என் புருஷன் நல்லவர்தான். மாமியாருக்குத்தான் ஆரம்பத்திலேருந்தே என்னைப் பிடிக்கலை. எப்போ சண்டை வந்தாலும், 'உன்னை ஒதுக்கிவெச்சுட்டு நல்லா இருக்கிற பொண்ணாப் பார்த்து என் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன்'னு சொல்லிட்டே இருப்பாங்க. எங்களைவிட என் கணவர் வீட்டுக்காரங்க கொஞ்சம் வசதியானவங்க. அதனால், என்னை ஒதுக்கியே பார்த்தாங்க. ஒரு குழந்தைப் பிறந்த பிறகும் நிலைமை மாறலை. என் குழந்தையை யாரும் தூக்கிக்கூட கொஞ்சலை. என்னையும் என் பையனையும் பாரமாவே நினைச்சாங்க'' என்று கண்கள் கலங்க அமைதியானார் செல்லம்மா. 

அவரைத் தேற்றியதும் தொடர்ந்து பேசினார்... ''என் புருஷன் அவர் அம்மா சொல்றதை மட்டும்தான் செய்வார். ஒரு கட்டத்துல அங்கே இருந்தா எனக்கும் என் பையனுக்கும் பாதுகாப்பு இல்லைனு என் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ்ச வருஷம் அம்மாவோடு இருந்தேன். அப்புறம்தான் சும்மா இருந்தா என் பையனை படிக்கவைக்க முடியாதுன்னு இங்கே கிளம்பி வந்துட்டேன். 2013-ம் வருஷம் சொந்தக்காரங்க கொடுத்த வெயிட் பார்க்கிற மிஷினோடு பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் பக்கம் உட்கார்ந்துப்பேன். அதுல கிடைச்ச பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைச்சேன். அதையே முதலா போட்டு பேனா, சீப்பு, செல்போன் கவர், ஊக்கு எல்லாம் வாங்கி விற்க ஆரம்பிச்சேன். அதுதான் இப்போ வரை தொடருது. 

கண்ணு தெரியாதவளாச்சேனு பாதி பேரு இரக்கப்பட்டு என்கிட்ட பொருளை வாங்குவாங்க. மீதி பேரு இவளை எப்படி ஏமாத்தலாம்னு நினைக்குறாங்க. ஒருநாள் வியாபாரம் பண்ணிட்டு இருக்கும்போது ஒருத்தர் எனக்கு உண்மையாவே கண்ணு தெரியலையானு செக் பண்ணியிருக்கார். அப்புறம் என் முன்னாடி இருந்த பொருள்களை திருடிட்டு ஓடப் பார்த்தார். எடுக்கும்போது சிதறின சத்தத்தைவெச்சுதான் திருடன் திருடன்னு கத்தினேன். அங்கே இருந்தவங்க ஒண்ணுசேர்ந்து அவரைப் பிடிச்சு பொருள்களை வாங்கி கொடுத்தாங்க'' என்று ஏமாற்றியவனையும் மரியாதையுடன் விளிக்கிறார் செல்லம்மா. 

“இன்னும் சிலர் வெறும் பேப்பரை ரூபாய் நோட்டுனு கொடுத்து ஏமாத்தப் பார்ப்பாங்க. கண் பார்வையை பறிச்சுக்கிட்ட கடவுள், எங்களுக்கு அறிவை சரியாவே கொடுத்திருக்கார். தாளுக்கும் ரூபாய் நோட்டுக்குமான வித்தியாசம் எங்களால நல்லாவே உணர முடியும். என்கிட்ட வெறும் தாளை கொடுக்கிறப்ப வர்ற கோபத்தை அடக்கிக்கிட்டு , அவங்க கையிலேயே திருப்பிக் கொடுத்துடுவேன். என்ன செய்யறது? இப்படியெல்லாம் இருக்கிற மனுசங்களுக்கு நடுவுலதானே வாழவேண்டியிருக்கு. இந்தக் கஷ்டங்களையெல்லாம் தாண்டி நான் சந்தோஷமா இருக்கிறது என் மகனால்தான். அவன்தான் என் உலகம். வீட்டுல என் பையன் என்னைச் சமைக்கவே விடாமல் அவனே சமைப்பான். சில சமயம் நானா சண்டைப் போட்டு சமைப்பேன். அப்படிச் சமைச்சு முடிக்கிற வரைக்கும் பக்கத்திலேயே இருப்பான். இப்போ என் பையன் பி.காம் படிக்கிறான். அவன் ஒரு நல்ல வேலைக்குப் போகிற வரைக்கும்தான் இதெல்லாம். அவனுக்கு எம்பிஏ படிக்கணும்னு ஆசையாம். அவன் ஆசைக்காக உழைக்குறதுதான் என் லட்சியம்'' என்று மகனைப் பற்றி சொல்லும்போது, செல்லம்மா குரலில் பூரிப்பு... முகத்தில் சுடர்விடுகிறது ஒளி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க